எழுக உதய சூரியனே!

காலை கிழக்கே உதித்திடுவான்
கண்களில் அழகைப் படைத்திடுவான்
மாலை மேற்கில் மறைந்திடுவான்
மனைகளில் விளக்கை ஏற்றிடவே!
செங்கதிர் உதிப்பான் ஒளிமயமாய்
சித்திரம் வரைவான் நிழல்வடிவாய்
திங்களில் ஒளியாய்த் திகழ்ந்திடுவான்
செகமே இயங்கத் தினம்வருவான்!
உதய சூரியன் இல்லையெனில்
உழவர் கூட்டம் வயலினிலே
இதயம் மகிழ உழைப்பதுண்டா?
இனிய உலகம் தழைப்பதுண்டா?
காலையில் எழுவான் இதமாக
கடும்பகல் கொதிப்பான் அனலாக
மாலையில் நிலவு வரவாக
மறைவான் மறுநாள் உதித்திடுவான்!
உயிர்கள் வாழ செங்கதிரோன்
உதிக்க வேண்டும் பூமியிலே!
பயிர்கள் செழிக்கப் பசிநீங்க
பகலில் வேண்டும் கதிரவனே!
எண்பெரும் கோள்கள் வானத்தில்
ஒளிவிடும் சூரிய வட்டத்தில்
இன்பம் பூமியில் நிலைத்திருக்க
எழுக உதய சூரியனே!!
– ஆ.ச. மாரியப்பன், புதுக்கோட்டை




