• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பண்பாட்டுப் பகிர்வு! – வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!!

2019_jun_a14
ஜூன் 2019

புது உடை, இனிப்பு, அன்பளிப்புகள், கேக், பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அப்பப்பா… பிறந்த நாள் எப்போ, எப்போ என்று காத்திருப்போம். அதுபோல், நான் ஆறு மாதமாகக் காத்துக்கொண்டிருந்தேன். (கொஞ்சம் குழந்தைத்தனம்தான். பரவாயில்லை.) ஏன் என்றால், அமெரிக்காவில் உலக நண்பர்களுடன் கொண்டாடத்தான்.

எதிர்பாராத வாழ்த்துகள் நிறைய அன்று கிடைத்தன. கடற்கரையில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மழையால் அது பள்ளிக்கு மாற்றப்பட்டது. சிற்றுண்டியை முடித்துவிட்டு எழும்போது ஜியோனி மற்றும் அவன் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாட ஆரம்பித்துவிட்டனர். ஜியோனியும் எனக்கு ஸ்பெஷல். என் பிறந்தநாள் பற்றி ஒருநாள் சொன்னேன், அதை நினைவு வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பாட ஆரம்பித்துவிட்டான்.

மாநாட்டின் நிறைவு விழாவிற்கு மாணவர்களின் விருந்தோம்பி பெற்றோர் (Host Parent)   அனைவரும் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது சாஹில், கரனின் விருந்தோம்பி குடும்பம் என்னை வாழ்த்தியது. சாஹில், கரன் கூறவில்லை. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியாது. பின்னர் எப்படி அந்தக் குடும்பத்திலிருந்து தெரிந்தது என்று தெரியவில்லை. வியப்புதான்.

அன்று பல்வேறு புது விளையாட்டுகளை விளையாடினோம். எனது குழு வெற்றி பெறவில்லை என்றாலும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 160 பேர் சென்றிருந்தோம். மாநாட்டில் பங்கேற்றதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் பெறும் நேரத்தில் அரங்கமே வாழ்த்துப் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டது. நிச்சயமாக இந்தப் பிறந்தநாள் மறக்க முடியாத ஒன்று. மீண்டும் சந்திக்க முடியுமா? என்ற கேள்வியுடன் பாம்பனோ பீச் உயர்நிலைப் பள்ளிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தோம்.

ஆனா கேப்பிரியல்லா (Ana Gabriella) என் விருந்தோம்பி குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அவள் தோழிகள் -அலக்ஸ்சான்ட்ரா, கேத்லின் ஆகியோருடன் மாலையில் ஷாப்பிங் மாலுக்குச் சென்றோம். துணிக்கடைக்குச் சென்று உடை வாங்கலாம் என்று பார்த்தோம். ஆனால், வாங்காமல் வந்துவிட்டோம். அமெரிக்காவில் ஒரு கடைக்குச் சென்று, ஒரு பொருளை வாங்காமல் வந்துவிட்டால், ஏன் வாங்கவில்லை என்று ஒருவரும் கேட்பதில்லை… இங்கேயும் இப்போது அப்படித்தானே!

வீட்டுக்குச் சென்றதும் பிறந்த நாளுக்காக கேக் வாங்கி வைத்திருந்தார் திருமதி ஹிமேனா. பின்னர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சென்றது. அன்றிரவு பெரும் தலைவலி ஒன்று எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது. பேக்கிங் (Packing)!
கண்டிப்பாக அழகாக எங்கள் பையை அடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார், திருமதி ஹினோ. ஒருவழியாக அடுக்கி முடித்தோம்.

எனக்கு ஒரு காலத்தில் நாய் என்றால் பயம். ஆனால், இப்போது அப்படி இல்லை. காரணம், ஸ்னுப்பி (Snoopy) – என் விருந்தோம்பி குடும்பத்தின் செல்ல நாய். விலங்குகளுக்கு நாம் அவற்றை விட்டுப் பிரிவது முன்னரே தெரியும் என்றும், அவை சோகமாகிவிடும் என்றும் சொல்வர். ஆனால், அதை நேரில் பார்த்தபோதுதான் நான் நம்பினேன்.

மறுநாள், ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று கூறிவிட்டு ஓர்லாண்டோ (Orlando) நோக்கி பயணித்தோம்.

பயணத்தின் நோக்கம் ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். எனக்கு மாநாட்டில் கலந்து-கொள்வது, நாசா மற்றும் யுனிவர்சல் ஸ்டியோஸ் செல்வது! ஆனால், அனைத்து பயணிகளுக்கும் புது விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல், புது உணவுகளைச் சாப்பிடுதல், அவ் விடத்தின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளுதல் போன்றவை பொது நோக்கமாக இருக்கும். அப்படித்தான் எங்களுக்கும் இருந்தது. ஜப்பானிய உணவகத்தில் மதிய உணவு. சாப்ஸ்டிக்கில் (Chopsticks) உண்டது புது அனுபவமாக இருந்தது. சூஷியும் இறாலும் அட்டகாசம்.

ஒரு புத்தகப் பிரியருக்கு மறக்கமுடியாத நாள் என்றால் அது அவருக்குப் பிடித்த எழுத்தாளரைச் சந்திக்கும் நாள்தான். அதுபோல் விண்வெளியின் மேல் ஆர்வம் கொண்டவருக்கு மறக்கமுடியாத நாள் என்றால் அது ஒரு விண்வெளி வீரரை சந்திப்பதுதான். எனக்கு அப்படி அமைந்த நாள் 3.2.2019. அன்று முன்னாள் விண்வெளி வீரர் திரு.ஜே.ஓ.கிரெய்டன் (J.O.Creighton) அவர்-களைச் சந்தித்தேன். அவரிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பையும் பெற்றேன்.

ஓர் ஏவுகணையில் (Rocket) விண்வெளி வீரர் போவதை நினைத்துப் பார்க்கும்போதே பயமாக இருக்கும். நாம் அப்படிப் போனால், எப்படி இருக்கும்? நாசாவில் அப்படி ஒரு மகிழோட்டம் (Ride) உள்ளது. அதில் சென்று வந்த பிறகு அந்த பயம் சென்றுவிட்டது. அட்லான்டிஸ் விண்கலம், ஓரியன் விண்கலம் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விண்வெளியில் பயன்படுத்தப்படும் எழுதுகோல்,  உண்ணப்படும் உணவு போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பல நாட்களுக்குப் பிறகு காரசாரமான இந்திய உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்! அப்படிதான் எங்களுக்கும் தக்ஷின் குஷின் இருந்தது. இந்தியாவில் இருந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து இருந்தாலும் தமிழ்ச் சொந்தங்கள் எனக்காக அமெரிக்காவிலும் இருக்கின்றன என்ற பாதுகாப்பு உணர்வு திரு.சோம.இளங்கோவன் அய்யாவும், திருமதி சரோ அம்மாவும் பேசிய விதத்தில் வந்தது.

ஹாரி பாட்டர், ஹெர்மொயினி (Hermione), ரான் விஸ்லி(Ron), யு-_னோ_ஹு (You – know – who), டம்பல்டோர், ஹாக்கிரிட், பட்டர் பீயர், ஹாக்வர்ட்ஸ் கோட்டை இன்னும் ஹாரி பாட்டர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

நம்மில் பல பேர் ஹாக்வர்ட்ஸ் போல் ஒரு பள்ளி இருக்காதா என நினைத்திருப்போம். இன்னும் பலர், ஹாக்வர்ட்ஸ், ஹாக்ஸ்மீட் (Hogsmeade) போன்ற இடங்களுக்கு ஒரு முறையாவது போக மாட்டோமா என ஏங்கி இருப்போம். அப்படி ஏங்கியவர்களுள் நானும் ஒருத்தி. ஹாக்ஸ்மீட்டிற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, யுனிவர்சல் ஸ்டியோசில். ஒரு ஹாரிபார்ட்டர் ரசிகைக்கு வேறு எனன வேண்டும்? ஒரே ஜாலிதான்!

ஹாரி பாட்டர் சம்பந்தமான பொருட்கள் அனைத்துமே அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஹாரி பாட்டர் சவாரியின்போது பல குரல்கள் ஹாரி, ஹாரி என கத்திக்கொண்டிருந்தன. நீங்கள் யுனிவர்சல் ஸ்டியோசுக்கு செல்ல நேரிட்டால், காலையிலே ஹாரி பாட்டர் சவாரியை முடித்துவிடுங்கள். இல்லையேல் பல மணிநேரம் காத்துக்கொண்டிருக்க நேரிடும். வேறு ஒரு சவாரிக்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது, திடீரென ஒரு உருவம், ஒரு பொந்துக்குள் இருந்து வந்தது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் இருந்து ஒரு உருவம் வந்தால்… அந்த உருவம் மனிதனாகவே இருந்தாலும், அந்த இடத்தில் இருந்த அனைவரும் அலறிவிட்டோம். ரோலர் கோஸ்டர்களை பார்க்கும்போதே தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. நான் அங்கு தவறவிட்டது, ஹாரி பாட்டர் லைட் ஷோ. நீங்கள் சென்றால், தவறவிட்டுவிடாதீர்கள்.

அமெரிக்காவிற்கு டாடா சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. சொந்த மண்ணைப் பார்க்க, அமெரிக்க மண்ணுக்கு டாடா சொல்லிவிட்டு கிளம்பினோம். விமானத்திற்காகக் காத்திருக்கும்போது ஒரு விமானப் பணிப்-பெண்ணிடம் (Air Hostess) பேச வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பும் என் முன்முடிவை உடைத்தது. பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன், விமான பணிப்–பெண் வேலை மிகவும் கடினமானது என்று! ஆனால், அவரிடம் பேசிய பின்தான் புரிந்தது, “பிடித்த வேலை என்றும் கடினமல்ல’’ என்பது! அவருக்கு பயணம், ஷாப்பிங் மிகவும் பிடிக்குமாம். “சம்பளத்துடன் பிடித்த வேலையான பயணம் செய்ய யாருக்குதான் கசக்கும்?’’ என்றபடி சிரிக்கிறார். அந்த மருத்துவம் பயிலும் விமானப் பணிப்பெண்.

அமெரிக்கா சென்ற சிட்டுக்குருவி பல விஷயங்களை கற்றுக்கொண்டு அதனுடைய கூட்டிற்கு மீண்டும் வந்து சேர்ந்தது. பயணம் ஒரு சிறந்த ஆசிரியர். அது நமக்கு பல அனுபவங்களை சொல்லித்தரும். இந்தப் பயணத்தில் மட்டுமின்றி இதற்கு தயார் ஆனபோதிலிருந்தே நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வாய்ப்பு வருகிறது என்றால், அதை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பயணத்திற்கு தயார் ஆனபோது, எங்களுக்கு பல சோதனைகள் வந்தன. எத்தனை சோதனைகள் வந்தாலும் புன்னகையோடு எதிர்கொண்டால் நிச்சயம் அந்த சோதனையில் நாம் வெல்வோம்.

முன் முடிவுகள்(Prejudice) எப்போதுமே ஏதாவது ஒரு நிலையில் தகர்க்கப்பட்டுவிடும். அதனால், முன் முடிவுகளுடன் எதையும் எதிர்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டினரைப் பார்த்தால் உடனே, ‘அவர்கள் வெளிநாட்டினர், அவர்களிடம் பேசினால் ஏதேனும் நினைத்துக் கொள்வர்’ என்ற உணர்வு மறைந்து, அவர்களும் நம் போன்ற மனிதர்கள்தான் என்ற புரிதல் வந்துவிட்டது. பயணத்தின்போது பொருட்கள் வாங்குவதில் நிறைய செலவழிக்கக் கூடாது. புது விசயங்களை தேடிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். புதுப் பொருட்கள், உணவுகளை முதன்முறை உபயோகிப்பதிலும், உண்பதிலும் தயக்கம் காட்டக் கூடாது.

புதியவற்றைக் கற்றுக்கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம். பயணிப்போம், கற்றுக்கொள்வோம், அனுபவத்தை பகிர்வோம், உடனிருந்தோருக்கு நன்றி சொல்வோம். நன்றி!

23
புகழஞ்சலி ! - கலைஞர்புகழஞ்சலி ! - கலைஞர்28th May 2019
பெரியார் பிஞ்சு 2019-2020 கால அட்டவணை29th May 2019பெரியார் பிஞ்சு 2019-2020 கால அட்டவணை

மற்ற படைப்புகள்

2019_jun_a12
கதை கேளு கதை கேளுஜூன் 2019
28th May 2019 by விழியன்

சோனனுக்கு வந்த சோதனை

Read More
2019_jun_a3
ஜூன் 2019பழகுமுகாம்
28th May 2019 by ஆசிரியர்

பழகு முகாம் – 2019

Read More
2019_jun_a18
ஜூன் 2019
29th May 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2019_may_a35
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

கொஞ்சம் கற்போம்…

Read More
2019_may_a47
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் !

Read More
ஜூன் 2019
29th May 2019 by ஆசிரியர்

வாசகர் மடல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p