• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

பூக்கோ

2020_jul_v32
கதை கேளு கதை கேளுஜூலை 2020

விழியன்

ருத்ரய்யா கால்நடை மருத்துவமனை. மஞ்சள் வெயில் தவழ்ந்த மாலை வேளை. கால்நடை மருத்துவமனை என்று பெயர்ப் பலகை வைத்து இருந்தாலும் மொத்தம் இரண்டே அறைகள் கொண்டது தான். மருத்துவமனை திறந்திருந்தால் மொத்தம் நான்கு ஜீவன்கள் இருக்கும். மருத்துவர் ருத்ரய்யாவும் மூன்று பூனைகளும். ருத்ரயாவிற்கு எப்படியும் அய்ம்பது வயதிற்கு மேல் இருக்கும். மருத்துவருக்கான இருக்கையில் அமர்ந்து இருப்பார். அவருக்குப் பின்னால் இருக்கும் மேஜையில் மூன்று பூனைகளும் வந்து அமர்ந்துகொள்ளும். அவர் மருத்துவமனையைப் பூட்டிச் சென்றதும் மூன்று பூனைகளும் மாடிக்கு ஓடிவிடும். தினமும் காலையும் மாலையும் ஒரு பாட்டில் நிறைய பால் கொண்டு வந்து பூனைகளுக்கு ஊற்றுவார். மருத்துவம் பார்க்க நாய்கள் வரும்போது மட்டும் பூனைகள் பதுங்கிக்கொள்ளும்.

வழக்கமாக நான்கில் இருந்து அய்ந்து நபர்கள் அவர்கள் செல்லப் பிராணிகளை அழைத்து வருவார்கள். இன்று ஒருத்தருமே வரவில்லை. மருத்துவர் ருத்ரய்யா மாலை ஆறு மணிக்கு எல்லாம் மருத்துவமனையை பூட்டிவிடுவார். ஞாயிறு மாலை எனில் அய்ந்து மணிக்கே பூட்டிவிட்டு சைக்கிளில் கிளம்பிடுவார். ஆமாம் அவரிடம் ஒரு பழைய மிதிவண்டி உள்ளது. மிதிவண்டி இருந்தாலும் அதனைத் தள்ளிக்கொண்டு தான் வருவார், தள்ளிக்கொண்டு தான் போவார். ஓட்டமாட்டார். அன்றொரு நாள் மிக மிகப் பொறுமையாக ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்திவிட்டுப் பூட்டலாம் என்று கிளம்பினார். வாசலில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். டிரவுசர் முட்டிக்கும் காலுக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தது. எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கலாம்.

“டாக்டர் இல்லையா?’’ என்றான் அவன். ருத்ரய்யா கோபப்படவில்லை. கண்களால் என்ன வேண்டும் என்றார். “டாக்டர் இல்லையா’’ என்றான் மீண்டும். அவர் தான் டாக்டர் என்று சொல்லியும் அவன் நம்பவில்லை. மூன்று பூனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்து எங்கோ ஓடின. “அய், சூப்பரா இருக்கு பூனைங்க. நீங்க வளர்க்கறீங்களா?’’ என்றான். அவன் கைகளையும் அவனுக்குப் பின்னால் ஏதேனும் பிராணி இருக்கா என்று பார்த்தார் ருத்ரய்யா. எதையும் காணவில்லை. சரி வேற எதற்கோ வந்திருக்கின்றான் என தன் பொருட்களைப் பையில் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

“பூக்கோவுக்கு கால்ல அடிப்பட்டிருக்கு. கட்டுப் போட்டு விடுவீங்களா?’’ எங்கே என்று கைகளால் கேட்டார்

“கால்ல’’

“பூக்கோ எங்க?’’

“அது.. அது அந்த மூணாவது தெருவில இருக்கு. வாங்க கூட்டிகிட்டு போறேன்’’

மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருமே தங்கள் செல்லப் பிராணிக்கு எப்படியும் ஒரு செல்லப் பெயர் வைத்திருப்பார்கள் என்று ருத்ரய்யாவிற்கு தெரியும். தன் மருத்துவப் பெட்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனையைப் பூட்டினார். மிதிவண்டியினைத் தள்ளிக்கொண்டு ருத்ரய்யாவும் சிறுவனும் கிளம்பினார்கள்.

“ஆமாம் டாக்டர்னா அந்த வெள்ளை கோட் போட்டிருப்பாங்களே? நீங்க போட மாட்டீங்களா?’’ என்றான்.

பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தார். அடிக்கடி தன் மூக்கு கண்ணாடியை சரி செய்துகொள்ளும் பழக்கம் ருத்ரய்யாவிற்கு இருந்தது. முதல் சாலையின் முனையில் திரும்பியதும் மிதிவண்டியினைத் தான் தள்ளி வருவதாக சிறுவன் வாங்கிக் கொண்டான்.

“டாக்டர் அங்கிள், நீங்க எல்லா அனிமல்ஸுக்கும் சிகிச்சை செய்வீங்களா?’’

“ம்ம்’’

“டயனோசருக்கு?’’

ஒரு நிமிடம் திக் என்று இருந்தது ருத்ரய்யாவிற்கு. “ஆமா… பூக்கோ என்ன விலங்கு?’’

“நாய்க்குட்டி’’

அந்தச் சிறுவனை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

“டாக்டர் அங்கிள், மிதிவண்டின்னா மிதிச்சிட்டு வரணும். இது தள்ளுவண்டி’’ விழித்தார் ருத்ரய்யா

“ஓ ஓட்டத் தெரியாதா?’’

இரண்டாவது தெரு கடக்கும்போது இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு சிறிய கல்லினைக் காலில் தட்டிக் கொண்டே வந்தான் சிறுவன். மூன்றாவது சாலை வந்ததும் மிதிவண்டியை நிறுத்தினான். “பிடித்துக்கொள்ளுங்கள் பூக்கோவை அழைத்து வருகின்றேன்’’ என்றான். ருத்ரய்யா மிதிவண்டியை நிறுத்தினார். அய்ந்து நிமிடமானது. சிறுவனைக் காணவில்லை. பின்னர் பத்தாவது நிமிடத்தில் வந்தான்.

“என்னப்பா எங்கே பூக்கோ’’

“தெரியல”

“தெரியலையா?’’

ருத்ரைய்யா அதிர்ந்தார்.

“தம்பி, என்னப்பா சொல்ற. பெயர் சொல்லி கூப்பிட்டுப் பார்’’

“கூப்பிட்டா வருமா?’’

“ஆமா..’’

“பூக்கோ பூக்கோ’’ என்று அழைத்தான். எங்கிருந்தும் எந்தச் சத்தமும், சலசலப்பும் இல்லை. சாலை அமைதியாக இருந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரங்கள் இருந்தன. ஞாயிறு என்பதால் எல்லோரும் வீட்டிற்குள் அடைந்து இருந்தார்கள். சில வீடுகளில் இருந்து சத்தமாக டிவியில் ஒலி மட்டும் கேட்டது.

“என்னப்பா பூக்கோ எங்கே? நீ கூப்பிட்டா வராதா?’’

“நான் கூப்பிட்டதே இல்லையே’’

இந்த பையன் சும்மா விளையாடுகின்றான் என நினைத்தார் ருத்ரைய்யா.

“அதை பூக்கோன்னு சொல்லித் தானே கூப்பிடுவ?’’

“இல்ல. அந்த பேரையே உங்க க்ளினிக் வரும்போது தான் வெச்சேன். நாய்ன்னு சொன்னா நல்லா இல்ல’’

‘சரி தான்’ என நினைத்துக்கொண்டார். தன் பையில் இருந்து ஒரு பிஸ்கட் துண்டு எடுத்து. “ச்சு. ச்சு ச்சு’’ என உச்சுக் கொட்டினார். மரத்தின் பின்னால் இருந்து நாய் வாலாட்டிக்கொண்டே, இல்லை… இல்லை… பூக்கோ வாலாட்டிக்கொண்டே வந்தது. முன்னங்காலில் அடிபட்டிருந்தது. பின்னங்காலில் சாக்கடையில் விட்டிருந்த சுவடு தெரிந்தது. பழுப்பு நிறத்திலும் ஆங்காங்கே வெள்ளை நிறத்திலும் இருந்தது பூக்கோ. அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே ஒரு குழாய் இருந்தது. அதில் நாயின் காய்களை கழுவி அழைத்து வரச்சொன்னார் ருத்ரைய்யா. சிறுவன் பூக்கோவின் முதுகில் தடவி அதனை அழைத்துச் சென்று கழுவினான்.

அவன் அழைத்து வருவதற்குள் நல்ல இடமாகப் பார்த்து சிறிய துண்டினை விரித்தார் ருத்ரய்யா. அவர் பையில் அதெல்லாம் இருந்தது. நாயினைச் சிறுவன் மடியில் அமர வைத்து முன்னங்காலுக்கு பொறுமையாகக் கட்டுப் போட்டார். “வலிக்காது பூக்கோ! டாக்டர் ரொம்ப நல்ல டாக்டர். சரியாப் போயிடும். ஊசி எல்லாம் போட மாட்டார். ஒழுங்கா மாத்திரை சாப்பிடணும் சரியா’’ என்று அதனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தான். வெள்ளை, கட்டு ஒன்று போட்டார்.

“சின்ன காயம் தான். சரியாகிடும்’’ என்றார் ருத்ரய்யா.

கட்டுப் போட்டதும் பூக்கோ தத்தித் தத்தி நடந்து சென்றது.

சிறுவன் ருத்ரய்யாவைப் பார்த்து புன்னகைத்தான். பைகளில் எல்லா பொருட்களையும் எடுத்து வைக்க உதவினான்.

“டாக்டருக்கு பீஸ் தரமாட்டியா தம்பி?’’ என்றார்.

“பீஸா?’’ என்றான்.

“ஆமாம்’’

சில நொடிகள் யோசித்தான். தன் சட்டைப் பையில் கைவிட்டு நான்கு கோலிக் குண்டுகளை எடுத்தான். அதில் பழையதாகி இருந்த கோலிக்குண்டினை மட்டும் எடுத்து திரும்ப பையில் போட்டுக்கொண்டு மூன்று கோலிக்குண்டுகளை ருத்ரய்யாவிடம் நீட்டினான். வாங்கிக்கொண்டார். பின்னர் திரும் அதை அவனுடைய சட்டை பாக்கெட்டில்லேயே போட்டுவிட்டு. “போய் சந்தோஷமா விளையாடு’’ என்றார்.

தன் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு ஒரு புறம் ருத்ரய்யா கிளம்ப மறுபுறம் சிறுவன் நடக்க ஆரம்பித்தான். சில அடிகள் நடந்தது ருத்ரய்யா திரும்பிப் பார்த்து.

“தம்பி, உன் பேரு என்ன?’’ என்றார்.

“பூக்கோ’’<

30
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை - பாக்டீரியாக்கள்அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை - பாக்டீரியாக்கள்30th July 2020
செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம்30th July 2020செய்து அசத்துவோம் - தீப்பெட்டி தந்திரம்

மற்ற படைப்புகள்

2022_dec_42
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2022
5th December 2022 by விழியன்

அதிசய மலர் கதம்பழகி

Read More
2019_dec_a7
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2019
27th November 2019 by விழியன்

கடைசி நொடிகள்

Read More
3
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by விழியன்

“கொத கொத கொதக்”

Read More
2020_sep_v6
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2020
1st October 2020 by விழியன்

யானைக்கு விருந்து

Read More
2020_jul_v12
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி!

Read More
2022_oct_15
அக்டோபர் 2022கதை கேளு கதை கேளு
6th October 2022 by விழியன்

எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p