மறைந்த ஆபத்து
வசீகரன்
சிறுத்தை ஒன்றின் காலில் பெரிய முள் தைத்துவிட்டது. சிறுத்தை வலியால் துடித்தது. காலை அசைக்கக்கூட அதனால் முடியவில்லை.
அந்த வழியே இரு மான்கள் வந்தன. ஆண் மான் சிறுத்தை படும் அவதியைக் கவனித்து விட்டது. “பாவம் சிறுத்தை. அதன் காலில் காட்டு முள் தைத்து இருக்கிறது. அது விஷ முள்ளாகும். உடனே முள்ளை நீக்காவிட்டால் சிறுத்தை நோயுற்று செத்துவிடும்” என்றது. முள்ளை எடுத்து விட சிறுத்தையை நோக்கிச் சென்றது.
அதைக்கண்ட இணை மான் பதறிவிட்டது. “என்ன காரியம் செட்டப் போகிறாய் தெரிகிறதா? அது சிறுத்தை. முள்ளை எடுத்து விட்டால் அது நம்மையே அடித்துக் கொன்று தின்று விடும். வா… ஓடிப்போய் விடலாம்” என்றது.
அதற்கு ஆண் மான், “அஞ்சாதே தங்கமே. நம் கண்முன்னே இன்னொரு உயிர் துன்பப்படுவதைக் கண்ட பின்னரும் நம்மால் இயன்ற உதவியை செய்யாமல் போவது உயர் அபிமானம் ஆகாது. கொஞ்சம் பொறுத்திரு. நமக்கு ஒன்றும் ஆகாது” என்று கூறியபடி சிறுத்தையை நெருங்கிவிட்டது.
சிறுத்தையின் காலை நோக்கியது. “அடடா… எவ்வளவு பெரிய விஷ முள். சிறுத்தையாரே உம்மால்தான் இதைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. இதோ முள்ளை எடுத்து விடுகிறேன். முள்ளை உருவும்போது வலி அதிகமாக இருக்கும். எனவே சற்றுப் பற்களை கடித்துக் கொள்ளும்” சிறுத்தையாரே என்றது மான்.
சிறுத்தை பற்களை இறுகக் கடித்துக்கொண்டது. வலியில் அதன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை மானும் கண்டது.
“ஒரு நொடி… இதோ இதோ… ஆங்… முள்ளை எடுத்தாகிவிட்டது என்றுது மான்.
சிறுத்தை காலை அசைத்துப் பார்த்தது. வலி சற்றுக் குறைந்து இருப்பதை உணர்ந்தது. அதன் முகத்தில் மகிழ்ச்சி மின்னல் ஒரு வெட்டு வெட்டிச் சென்றது.
“மானாரே.. உனக்கு எனது நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாக்கட்டும். ஆனால்…” என்று நிறுத்தியது சிறுத்தை
“ஆனால்… என்ன?” என்றது மான்.
“முள் குத்தியதால் இரண்டு நாள்களாக நான் சாப்பிடவில்லை. செம பசியாக இருக்கிறது. எனவே இப்போதைக்கு உன்னையும், அடுத்த வேளைக்கு உன் துணைமானையும் உண்டு பசியாறிக் கொள்கிறேன். நீ என் உயிரைக் காத்தாய். நான் உங்கள் இருவரையும் என் வயிற்றில் வைத்துப் போற்றுகிறேன்” என்றது.
மான் திகைத்துவிட்டது.
“நான் அப்போதே சொன்னேன் கேட்டாயா? பார் இப்போது இருவருமே சாகப் போகிறோம்” என்று பதறியது இணைமான்.
சிறுத்தை மெல்ல எழுந்து முள்ளை எடுத்து உதவிய மானின் மீது பாய்ந்து பிடிக்க ஆயத்தமானது.
அப்போது மான், சிரியோ சிரியென்று சிரித்தது.
“ஏன் சிரிக்கிறாய்?” என்றது சிறுத்தை.
“அறிவு கெட்ட சிறுத்தையே, உன் முள்ளை எடுத்துவிட்டால் நீ என் மீதே பாய்ந்து தின்பாய் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் முள்ளை நான் முழுவதும் நீக்கவில்லை. முள்ளின் உடைந்த சிரா உன் காலுக்குள்தான் இருக்கிறது. அது சீழ் வைத்தால் நீ நாளையே செத்துவிடுவாய்” என்றது.
“என்ன சொல்கிறாய் சிரா உள்ளே இருக்கிறதா? அது விசமுடையதாயிற்றே”
“ஆமாம்… நீ பொறுமையாக இருந்தால் அதை நான் எடுத்து விடுவேன். அதை எடுத்ததும் நீ என்னைத் தின்னமாட்டேன் என உறுதிசொல்” என்றது.
“தின்னமாட்டேன், தின்னமாட்டேன் தயவு செய்து உடைந்த முள்ளை எடுத்துவிடு” எனக் கெஞ்சியது சிறுத்தை.
“சரி… நீ படுத்துக் கொள்” எனக் கட்டளை இட்டது மான்.
சிறுத்தைப் படுத்துக் கொண்டதும், தன் இணைமானைப் பார்த்துக் கண் சாடைக் காட்டியது ஆண்மான்.
அவ்வளவுதான்.
இரண்டு மான்களும் ஓட்டம் பிடித்தன.
“அந்த முட்டாள் சிறுத்தை நான் சொன்னதை நம்பிவிட்டது. முள்ளின் உடைந்த பகுதி சிறுத்தையின் காலில் இல்லை. நான் முழுவதும் நீக்கவிட்டேன். அந்த நன்றிகெட்ட மிருகத்திடம் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன்” என்றது.
“உதவி செய்வதில் மட்டுமல்ல, புத்தசாலித்தனத்திலும் உன்னை மிஞ்ச யாருமில்லை” என்று தன் துணை மானை மெச்சியது இணைமான்.