நினைவில் நிறுத்துவோம்: அடுத்தவரை அழுத்த உன் உயர்வை காட்டாதே
சிகரம்
மனிதருக்குப் பல்வேறு இயல்புகள், விருப்பங்கள், இலக்குகள் உள்ளன. தன்முனைப்பு என்பதும் மனித இயல்புதான். மாண்பு என்பதன் பொருள், மனித இயல்புகளைக் கட்டுக்குள் வைத்து, நேர்மையான முறையில் இலக்குகளை, விருப்பங்களை அடைவது ஆகும்.
ஆனால், நடைமுறையில் மனிதர்கள், எப்படியாவது, எந்த வழியைப் பின்பற்றியாவது, எவ்வளவு முறை கேடு செய்தாவது தன் இலக்கை, ஆசையை, தன் உயர்வைப் பெற்றுவிட வேண்டும் என்றே முயற்சி செய்கின்றனர்.
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையுள்ளோர் சிலர், எப்படியாவது பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். தாங்கள் பின்பற்றும் வழி சரியா? தப்பா? நேர்மையானதா? பிறரைப் பாதிக்குமா? என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், கவலைப்படாமல் எந்த வழியிலாவது பணத்தை அதிகம் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோர் சிலர், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று முயற்சிப்பர். ஊக்க மருந்து உட்கொள்ளுதல், உடன் போட்டியிடுகின்றவருக்குச் சூழ்ச்சியாக தடைகளையும், இன்னல்களையும் கொடுத்தல், எதிராளியின் உடல் நலத்தைக் கெடுக்கும் சதிகளைச் செய்தல் போன்ற கீழ்த்தரமான செயல்களைக் கூடச் செய்ய முற்படுவர்.
தொழில் செய்வோர் சிலர், தங்கள் தொழிலில் விரைவாய் வளர குறுக்கு வழிகளை, தப்பான, சட்டத்திற்குப் புறம்பான வழிகளைப் பின்பற்றுவர்.
பொருள் விற்போர் சிலர் கலப்படம் செய்வர், எடை குறைப்பர், தரமற்றதை விற்பர்.
மருத்துவமனை நடத்துவோர் சிலர், நோயாளியின் நலனைக் கருத்தில் கொள்ளாது, எப்படியெல்லாம் நோயாளியிடமிருந்து பணம் பறிக்கலாம் என்றே திட்டமிட்டுச் செயல்படுவர்.
உணவு விடுதி நடத்துகின்றவர்கள் சிலர், கெட்டுப் போனவற்றை, குப்பையில் கொட்ட வேண்டியதையெல்லாம் சுவையான உணவாகச் சமைத்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்வர். உண்ணுகிறவர் நலனைப் பற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்க மாட்டார்கள்.
கல்விக் கூடம் நடத்துகின்றவர்கள் படிக்கின்ற மாணவர்கள் நலனை, அவர்களின் தேவையை, ஒழுக்கத்தை, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தங்களுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும் வழிகளையே பின்பற்றி மாணவர்களை வாட்டி வதைப்பர்.
அதேபோல் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்ற பெற்றோரும் தங்கள் பிள்ளைகள்தான் முதல் தகுதி பெற வேண்டும் என்ற ஆசையில் கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர்.
முதல் மதிப்பெண், முதல் தகுதி என்ற ஆசை ஒருவகை அறியாமையே ஆகும். ஒரு வகுப்பில் படிக்கின்ற மாணவர்களில் முதல் தகுதியைப் பெற்றுவிட்டால் அந்த மாணவன் வாழ்வில் உயர்ந்து விட முடியுமா? அல்லது எண்ணியதை எட்டிவிட முடியுமா? அடுத்த பள்ளியில் இதே வகுப்பில் படிக்கும் மாணவர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் இந்த மாணவரின் முதல் தகுதி பயனற்றதாகுமே!
நடைமுறையை நன்கு புரிந்த பெற்றோர், உண்மை நிலை அறிந்த பெற்றோர், தம் பிள்ளை அதன் எதிர்காலப் படிப்பிற்கு அல்லது அது எதிர்காலத்தில் செல்ல இருக்கும் வேலைக்குத் தகுதியாக எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டுமோ அதைப் பெற முயல்வதே அறிவுடைமை. மாறாக, அடுத்த மாணவரைவிட தம் பிள்ளை அதிகம் பெற வேண்டும் என்ற போட்டி, பொறாமை தேவையற்றது, அர்த்தமற்றது.
ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போன்ற உடல்திறன் போட்டிகளில்தான் ஒருவரைவிட நாம் முந்த வேண்டும் என்ற முனைப்பு கட்டாயம். கல்வியில் இந்த முனைப்பு தப்பானது.
எந்தப் போட்டியாக இருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளுகின்றவர்களாயினும், அவர்களின் பெற்றோரும் ஒன்றைக் கருத்தில்கொள்ள வேண்டும். அதுதான் இரு கோடுகள் தத்துவம்.
ஒரு கோடு 5 அங்குலம் உயரத்தில் உள்ளது என்றால் அதைவிட உயர 6 அங்குலம் உயரக் கோடு வரைய வேண்டும். மாறாக, 5 அங்குலக் கோட்டை வரைந்துவிட்டு, 5 அங்குலம் உள்ள இன்னொரு கோட்டின் உயரத்தை 4லு அங்குலமாகக் குறைத்துக் காட்டுவது தப்பான முயற்சியாகும்.
இந்தத் தப்பான முயற்சியையே பல பெற்றோர் செய்கின்றனர். தங்கள் பிள்ளையைவிட நன்றாகப் படிக்கும் பிள்ளையை எதிரியைப் போலப் பார்க்கும் ஈனத்தனம், இழிசெயல் சில பெற்றோரிடம் இருப்பது வெட்கப்படத்தக்க, வேதனைப் படத்தக்க செயலாகும்.
அடுத்தவரை அழுத்தி, தன் உயர்வைக் காட்டுவது மோசடித்தனம்! அடுத்தவரைவிட உயர்ந்து காட்டுவதுதான் தகுதியின் அடையாளம். அடுத்தவரைக் கருத்தில் கொள்ளாது தனக்குத் தேவையானதை அடைய முயற்சிப்பதே அறிவுடைமை, மாண்புடைமை. அதுவே மனித மாண்பின் அடையாளம்!
மற்ற பிள்ளைகளோடு அன்பாகப் பழகுதல், அவர்களின் நலனில் அக்கறை கொள்ளல், மற்ற பிள்ளைகளுக்கு உதவுதல், அவர்களுக்கு எழும் அய்யப்பாடுகளை அகற்றுதல் போன்றவற்றைச் செய்ய தங்கள் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் கற்றுத் தருதல் வேண்டும். அதற்கு தாங்களே எடுத்துக்காட்டாக நடந்து காட்ட வேண்டும்.
‘உன்னோடு போட்டி போட்டுப் படிக்கும் மாணவரோடு சேர்ந்து படிக்காதே!’ அவன் சந்தேகம் கேட்டால் தெரியாது என்று சொல்! ‘நீ நன்றாகப் படித்திருந்தாலும், சரியாகப் படிக்கவில்லை என்று சொல்’ என்று தன் பிள்ளைக்குச் சொல்லித் தரும் வக்கிர புத்தியுள்ள பெற்றோரும் உள்ளனர்.
படிப்பை விட நல்ல பண்பும், நேர்மையும், நம்பகத் தன்மையுமே எதிர்காலத்தில் பிள்ளையின் வாழ்வைத் தீர்மானிக்கும். அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நற்பண்பும், நம்பகத் தன்மையும் இல்லையென்றால் எந்த நிறுவனத்திலும் வேலை தர மாட்டார்கள்.
எனவே, முதல் தகுதி என்ற ஆசையில் பிள்ளையின் வாழ்வைப் பெற்றோர் கெடுக்காமல் நல் மனிதனாய் தம் பிள்ளை உருவாக பெற்றோர் துணை நிற்க வேண்டும்; வழிகாட்ட வேண்டும்.