புரியாத புதிர் அல்ல! : அல் நெஸ்லா பாறை! வெட்டியது யார்?
சரவணா இராஜேந்திரன்
அரேபியா வளைகுடாப் பகுதி வறண்ட பாலைகளும் கற்குன்றுகளும் அதிகம் உள்ள பகுதி, கோடிக்கணக்கான ஆண்டுகளாக பெருமலைகளைக் காற்றும் நீரும் கரைத்து உருவான மணலை சமவெளிப் பகுதியில் நிரப்பிவிட்டது, இப்படி உருவானதுதான் வளைகுடா நாடுகளின் பாலைவனம். இப்படி உருவான பாலைவனங்கள் பல மிகவும் வியப்புக்குரிய புவியியல் மாற்றங்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள பாறைகள் அனைத்தும் மிகவும் மாறுபட்ட வடிவங்களில் உள்ளன.
ஊசி போன்ற முனையின் அடிப்பகுதியைக் கொண்ட பெரிய பாறைகள், நீளமாய் செங்குத்துத் தூண்கள் போன்ற வடிவம் கொண்ட பாறைகள் எனப் பல வியக்கத்தகு தோற்றம் கொண்ட பாறைகள் உள்ளன. அப்படி உருவான ஒன்றுதான் அல் நெஸ்லா. இப்பாறை மிகப் பெரிய வெட்டும் கருவியால் சரி சமமாக அளவெடுத்துப் பிளந்து வைத்தது போல் காட்சியளிக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பாறை அந்தப் பகுதியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஓர் ஆப்பிளை சரியாக இரண்டு துண்டமாக சரி பாதியாக வெட்டினால் எப்படி இருக்குமோ அது போன்ற வடிவத்தில் காணப்படுகிறது. 30 அடி உயரமும் 25 அடி அகலமும் இருக்கும். இந்தப் பாறையின் அடித்தளம் மிகவும் குறுகியதாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த அடித்தளம் மிகவும் உறுதியாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இங்குள்ள குன்றுகள் காற்றின் வேகத்தில் கரைந்து சிறு பெரும் பாறைகளாக மாறும்போது இந்தப் பாறை உருவாகியிருக்கலாம் எனக் கூறுகிறார்கள். காற்றின் சீரான வேகத்தால் குறிப்பிட்ட பகுதியிலும், கோணத்திலும் காற்று செல்லும் வழியில் தடையாகவும் இருக்கும் இந்தப் பாறையை மிகச் சரியாக இரண்டு துண்டாக வெட்டி விட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்த பழங்குடியினர்கள் கற்களை வைத்து இந்தப் பாறையைப் பிளந்ததாக சில குறிப்புகள் உள்ளன.
ஆனால், எந்த ஒரு நவீன தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தாமல் எப்படி மிகக் கச்சிதமாகப் பிளக்க முடியும் எனக் கூறி, அந்தக் குறிப்புகளை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை. முன்னொரு காலத்தில் வேற்றுக்கோள் மனிதர்கள் பூமியில் தொடர்பில் இருந்த போது அவர்களுடைய குறியீடுகளை பூமியில் விட்டுச் செல்ல இந்தப் பாறையை லேசரால் கட் பண்ணியிருக்கலாம் என கற்பனையாகவும் கூறுகிறார்கள். ஆனால், இந்த வேற்றுக்கோள் உயிரினம் போன்ற கதைகள்கேட்க மட்டும்தான் பயன்படும். உண்மைத் தகவலாக ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவியலர்கள் நிராகரித்து விட்டனர்.
அல் நெஸ்லா பாறையில் ஒட்டகம் மற்றும் அரேபியக் குதிரைகள் போன்றவற்றை அழகாகச் செதுக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி விலங்குகளை வேட்டையாடுவது போன்ற படங்களையும் செதுக்கி உள்ளனர். ஆனால், இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அல் நெஸ்லா பாறையைச் சுற்றி ஏராளமாக குன்றுகள் உள்ளன. ஆனால், அனைத்தும் கோட்டைச் சுவர் போன்றே காணப்படும். அதிலும் பல சிற்பங்களை வடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுகளுக்கு சவுதி அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். செர்ரி லிவிஸ் என்பவர், இந்தப் பாறையைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து வெளி உலகிற்கு அவரும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய ஆராய்ச்சியின் முடிவு பல கற்பனைக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகம் எனப்படும் (மிநீமீ கிரீமீ) காலத்தில் குளிர்ச்சி அதிகமானதால் இந்தப் பாறையையும் கரைந்து கொண்டு இருக்கும் பாறைகளையும் தடிமனான பனிக்கட்டிகள் மூடிவிட்டன. சில நூறு ஆண்டுகளுக்குப் பின் சூரிய வெப்பம் அதிகமானதால் அந்தப் பாறையை மூடி இருந்த இருந்த பனிக்கட்டி உருகி, அழுத்தம் தாங்காமல் இந்தப் பாறை வெடித்ததனால் இப்படி உருவாகி இருக்கிறது என ஆராய்ச்சியின் முடிவில் செர்ரி லிவிஸ் தெரிவித்துள்ளார்.
என்னதான் பனிக்கட்டியால் அழுத்தம் அதிகரித்து பாறை வெடித்துச் சிதறினாலும் எப்படி மிகச்சரியாக இரண்டாகப் பிளக்க முடியும் என்று செர்ரி லிவிஸிடம் பல ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் செர்ரி லிவிஸ் மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடங்கி உள்ளார். பனி யுகம் என்பது உலகில் 20 லட்சம் ஆண்டுகளாக பூமியில் இருந்தது. வட துருவத்தில் இருந்து பனி அதிகரித்து முழுப் பூமியையுமே மூடிய சூழலையே பனியுகம் என்கிறோம். ஆனால், இமயமலை இருந்த காரணத்தால் இந்திய தீபகற்பத்தில் பனியுகம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆகையால் பனியுகப் பாதிப்பு அடையாளங்கள் இங்கே காணப்படவில்லை.