தேன்மிட்டாயி
விழியன்
“தேன்மிட்டாய்…”
“தேன்மிட்டாய் யாரும் உள்ளூர் கடையில வாங்கக்கூடாது”
“எதுக்கு?”
“உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்-கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டிருக்கு”
“கட்டுப்பாடா? ஏன்”
“ஆமா, கட்டுப்பாடுன்னா… ஊர்ல கூடி உங்க தெருவுல இருக்கிறவங்களுக்குத் தரதில்லைன்னு முடிவு. உங்க வீட்ல எல்லாம் சொல்லுங்க. கோ”
“எதுக்கு கட்டுப்பாடு?”
“கோ கோ…”
சாந்தன், மரியன், கோவிந்த், ஆகாஷ் நால்வரும் சோகமாக நகர்ந்தார்கள். நால்வரும் நான்காம் வகுப்பு படிக்கின்றார்கள். பள்ளிக்குப் போகிற வழியில் வழக்கமாக தேன்மிட்டாய்களை வாங்கிப் பங்குபோட்டுக்கொள்வார்கள். சில்லறை நிறைய இருந்தது என்றால் நான்கு, கம்மியாக இருந்தால் இரண்டு வாங்கி பாதியாகப் பிய்த்து நால்வரும் தின்பார்கள். தேன்மிட்டாயில் தேன் வழியாது, அதனால் பிய்க்கும்போது பிரச்சனை எதுவும் இல்லை. விடுமுறை நாள்களில் இந்தப் பக்கமே வரமாட்டார்கள். ஒரே விளையாட்டுதான். ஒவ்வொரு திங்கட்கிழமையும் கட்டாயம் வாங்கிடுவார்கள். யாருக்குக் காசு கொஞ்சம் கிடைத்தாலும் இப்படித்தான். ஆனால், நான்கினைத் தாண்டமாட்டார்கள். வெளியூரில் இருந்து உறவினர்கள் வந்தால் ஊர்க்காசு தருவார்கள். அதனைச் சேமித்து இவர்கள் வாங்கும் ஒரே பொருள் தேன்மிட்டாய்தான். இந்தக் கடையைவிட்டால் மற்றொரு பெட்டிக்கடை உள்ளது. ஆனால், அங்கே தேன்மிட்டாய் கிடைக்காது. பக்கத்து ஊருக்கு அந்தக் கடைக்காரர் போகமாட்டார். தேன்மிட்டாய் பாக்கெட்டுகள் பக்கத்து ஊரில்தான் கிடைக்கும்.
“டேய், என்னடா… தேன்மிட்டாய் இல்லைன்னு சொல்லிட்டாங்க”
“அதென்ன கட்டுப்பாடுன்னு தெரியலையே”
“நம்ம வீட்ல போய்கூட சொல்லச் சொல்றாங்க”
பேசிக்கொண்டே நால்வரும் பள்ளியை அடைந்தார்கள். தலைமை ஆசிரியர் தாமதமாக அன்று வந்தார். பக்கத்து ஊருக்கு அமைச்சர் வந்திருக்கார் என்று மனு கொடுக்கப் போய்விட்டு வந்திருந்தார். அவர் தாமதமாக வரவே, கிடைத்த நேரத்தில், தேன்மிட்டாய் கொடுக்க மறுத்தது வகுப்பு முழுக்கப் பரவி விட்டது. “அதெப்படி கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க?” என்று மாணவிகள் கேள்வி எழுப்பினார்கள். என்ன செய்யலாம் எனக் கலந்து ஆலோசனை செய்தார்கள். ஒரு திட்டம் தீட்டினார்கள். அதற்குத் தேவையாக இருந்தது மூன்று புதிய நோட்டுகளும் கொஞ்சம் சில்லறையும்.
மறுநாள் காலையில் தாமோதரன் அண்ணனுக்காகக் காத்திருந்தார்கள். அவர் தண்ணீர் கேன் போடுகின்றார். தேன்மிட்டாய் கடைக்கும் தண்ணீர் கேன் போடுவார். நால்வரும் காத்திருந்து அவரிடம் மூன்று நோட்டுகளை நீட்டினார்கள். “அந்தக் கடையில பொட்டலம் கட்டக் கொடுத்திடண்ணா. காசு ஏதாச்சும் கொடுத்தா வாங்கிக்கோங்கண்ணா” எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டனர். கடைக்காரரும் நோட்டுகளை வாங்கிகொண்டார். “நோட்டில் ஒரு பக்கம் மட்டும் எழுதி இருக்குண்ணே, பார்த்து காசு கொடு” என்றார் தாமோதரன். ‘அட, போப்பா’ என காசு எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டார் கடைக்காரர்.
முனையில் இருக்கும் மாடிவீட்டில் இருந்த பெண்மணி, உடைத்த கடலை கால் கிலோ வாங்கிக்கொண்டு இருந்தார். குடுகுடுவென ஓடி வந்த சாந்தன், “அண்ணா, நேத்து கொடுத்தீங்க இல்ல தேன்மிட்டாய் அதுக்கு சில்லறை” எனச் சொல்லி காசினை வைத்துவிட்டு ஓடிவிட்டான். முடி கொட்டி வழுக்கையாக இருக்கும் _ ஊர் நாட்டாமை, ரவை பாக்கெட்டை வாங்கும்போது மரியன் ஓடிவந்தான். “அண்ணா, நேத்து சில்லறை அதிகம் கொடுத்திட்டீங்க. சொச்சத்தை நீங்களே வெச்சிக்கோங்க” எனச் சொல்லி சில்லறையை பாட்டில் மீது வைத்துவிட்டு ஓடிவிட்டான். “என்னடா இதெல்லாம்” எனக் கடிந்துகொண்டார் நாட்டாமை. “அவனுங்க விளையாட்றாங்க தலைவரே” என்று விளக்கினாலும் கேட்டுக்கொள்ளவில்லை. பொட்டலத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
வழக்கம்போல காலை ஏழு மணிக்கு கடையைத் திறக்க வந்தார் கடைக்காரர். உடன் அவருடைய மகனும் வந்திருந்தான். ஊரே அவர் கடையின் முன் கூடியது. யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோர் கைகளிலும் நேற்று கடைக்காரர் கொடுத்த பொட்டலத்தின் தாள் இருந்தது. “என்னடா இதெல்லாம்” என நாட்டாமை முதலில் நீட்டினார். கூட்டம் கூடி இருக்கவே, ஊரில் இருந்த எல்லாப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் கூடிவிட்டனர்.
பெரியவர்களின் கைகளில் இருந்த தாளினை எல்லோரும் வாங்கினார்கள். நாட்டாமை நீட்டிய தாளினை வாங்கினான் கடைக்காரரின் மகன். எழுத்துக்கூட்டி வாசித்தான்.
“தீ ண்டா மை.. தீண்டாமை ஒ.. ரு… ஒரு.. பாவச்செயல் பாவச்செயல்.. தீண்டாமை ஒரு பாவச்செயல்”
இவன் வாசிக்கும் அதே நேரம், ஊரில் இருந்த எல்லாக் குழந்தைகளும் இளைஞர்களும் வாசித்தார்கள். “தீண்டாமை ஒரு பாவச்செயல்”
“தீண்டாமை ஒரு பாவச்செயல்”
“தீண்டாமை ஒரு பாவச்செயல்”
அந்தப் பகுதியே அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தது. முந்தைய தினம் நான்காம் வகுப்புக் குழந்தைகள் இதைத்தான் எல்லாப் பக்கங்களிலும் எழுதி இருந்தார்கள்.
“என்ன இருந்தாலும் அவங்க…” என நாட்டாமை வாயெடுக்க, மீண்டும் அப்பகுதியில் எல்லோர் குரலும் ஒலித்தது.
“தீண்டாமை ஒரு பாவச்செயல்”. ஊரே அமைதியானது.
“ஆமாம். எல்லோரும் சமம்தானே…” என்றான் கடைக்காரச் சிறுவன். ஊரே வெட்கித் தலைகுனிந்தது.