மனித வாழ்க்கையில் உன்னதப் பணிக்காகக் கொடுக்கப்படும் நோபல் பரிசு
சரவணா இராஜேந்திரன்
இயற்கை நமக்கு அவ்வப்போது சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மனிதர்கள் அதை உணர மறுத்து மூடநம்பிக்கை, கடவுள், ஜோதிடம் இன்ன பிற தேவையற்றவற்றைப் படித்தவர்களும் சுமந்து செல்வதுதான் மனித இனத்தின் பின்னடைவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும் மூடத்தனக் காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அறிவியலில் மனிதர்கள் முன்னேறிக் கொண்டே மனித இனத்திற்குத் தேவையானவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்படி பெரும் போராட்டத்திற்கு இடையில் கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு தருபவர்களுக்காக அவர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நோபல் பரிசு போன்றவை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
நோபல் பரிசு என்றாலே பெரியார் பிஞ்சு நவம்பர் இதழ் உங்களுக்கு நினைவிற்கு வரும். சுருக்கமாக, அதே நேரத்தில் அறிவியல் காரணங்களோடு இந்த ஆண்டு நோபல் பரிசு விவரங்கள்:
நோபல் பரிசு என்பது அரிய பல ஒப்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் 1895இல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901இல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்பிரட் நோபல் அவர்களின் உயில்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வாண்டு வருவாயைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
1. மூவருக்கு பகிர்ந்து வழங்கப்பட்ட இயற்பியலுக்கான நோபல் பரிசு
2022ஆ-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எஃப். கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவருக்கும் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட இருக்கிறது.
போட்டான்கள் என்று அழைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் அதிக தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூவருக்கும் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது.
இந்தப் போட்டான்களை மட்டும் மனிதர்கள் தற்போதுள்ள எக்ஸ்_ரே உள்ளிட்ட கதிர்களைப் போன்று கையாளும் முறையைக் கண்டுபிடித்து விட்டால் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிக்கும். அதே நேரத்தில் மனித இனம் வேற்றுக் கோள்களுக்கு நீண்ட நாள் பயணம் செய்யும் போது ஏற்படும் உடலியல் மாற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
2. ஸ்வீடனுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
2022ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு “அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனிதப் பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக” அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதகுலம் எப்போதும் அதன் தோற்றத்தில் ஆர்வமாக உள்ளது. நாம் எங்கிருந்து வருகிறோம்? நமக்கு முன் வாழ்ந்து வந்தவர்களுடன் நமக்கு எப்படி தொடர்பு? ஹோமோ சேபியன்களான நம்மை மற்ற ஹோமினின்களிலிருந்து வேறுபடுத்துவது எது? என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய மனிதர்களின் தோற்றுவாயான _ அழிந்துபோன மூதாதையரான _ நியண்டர்தாலின் மரபணுவை ஆராயத் தொடங்கி, முன்னர் அறியப்படாத டெனிசோவா என்கிற ஹோமினினைக் கண்டறிந்து உள்ளார்.
முக்கியமாக, சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து தற்போது அழிந்து வரும் இந்த ஹோமினின்களிலிருந்து ஹோமோ சேபியன்களுக்கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் பாபோ கண்டறிந்துள்ளார்.
3. வேதியியலுக்கான நோபல் பரிசுகள்
அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியதற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர்.
4. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ். பெர்னான்கே, டக்ளஸ் வாரன் டயமண்ட் மற்றும் பிலிப் எச். டிப்விக் (Ben S. Bernanke, Douglas W. Diamond and Philip H. Dybvig) ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை பொருளாதாரத்திற்காக 53 நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமானியர்களுக்கான பணப் பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படுவதும் தற்போதுள்ள புதுமையான காலத்தில் இந்தப் புதுமைகள் எட்டப்படாத பல நாடுகள் உள்ளன, அவர்களுக்கு தற்போதைய நடைமுறைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு அவர்களின் தேவைகளை முழுமையடையச் செய்து அவர்களையும் நவீனக் காலத்தின் ஓட்டத்தில் இணைக்கும் வகையில் இவர்கள் செய்த ஆய்விற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
5. அமைதிக்கான நோபல் பரிசு
அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவர் ரஷ்யன் மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (Russian Human Rights Organisation Memorial)
மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு(Ukrainian Human Rights Organisation Center for Civil Liberties) என இரு அமைப்புகளிலும் முக்கியப் பங்காற்றி வருபவர்.
பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.
பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். சர்வாதிகாரிக்கு இணையான அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கும் நோக்கில் பெலாரசில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தியவர்.
இதற்காக, வியாஸ்னா என்னும் அமைப்பை உருவாக்கியவர்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக 2011 முதல் 2014 வரை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை அடுத்து 2020இல் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணையின்றி இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், தனது நோக்கத்தில் சமரசமின்றி செயல்பட்டு வருகிறார் அலெஸ் பியாலியாட்ஸ்கி.
6. இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) என்பவருக்கு அறிவிக்கப்-பட்டுள்ளது. வேலை என்று பொருள்படும் ‘லோகுபாசியான்’ (L’occupation’)என்னும் புத்தகத்தை எழுதியதற்காக, இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.