உழவரை மதிப்போம்!
கோழி கூவும் நேரத்தில்
கூழைச் சிறிது அருந்தியபின்
மேழி தன்னை ஏந்திடுவார்
மேன்மை நிறைந்த நல்லுழவர்!
ஏரைப் பூட்டி உழுததன்பின்
ஏற்றம் இறைத்தே நீர்பாய்ச்சிச்
சீரைப் பெற்ற நிலத்தினிலே
செந்நெல் தன்னை விதைத்திடுவார்!
காலம் நேரம் தவறாமல்
களைகள் நீக்கி உரமிட்டு
நீல வான வெயிலின்கீழ்
நிதமும் பாடு பட்டுழைப்பார்:
கதிரை அறுக்கும் பருவத்தில்
கண்ணும் கருத்து மாயிருப்பார்;
அதிகம் சிதறிப் போகாமல்
அரியநெல் மணிகள் சேர்த்திடுவார்:
உதிரம் சிந்தி அவர்சேர்க்கும்
ஒவ்வொரு மணி*யும் பெருஞ்செல்வம்;
நிதியாம் அதனை உலகுக்கே
நேசத் தோடே தந்திடுவார்;
உணவை உண்ணும் நேரத்தில்
உழவர் உழைப்பை எண்ணிடுவோம்;
உணவை வீணாய் ஆக்காமல்
உழவர் உழைப்பை மதித்திடுவோம்!<
– கே.பி. பத்மநாபன்,
கோவை