கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை…
கலங்காமலே
கண்டம் தாண்டுமே! என்று ஒரு திரைப்படப் பாடலில் எழுதியிருப்பார் கவிஞர் நா.முத்துக்குமார்.
நெடுந்தொலைவு பறக்கும் பறவைகள் ஏராளம். பறவைகள் பற்றிய ஆய்வின் மூலம் நமக்கு அறிவியல்பூர்வமாகவே இத் தகவல்கள் உறுதியாகக் கிடைத்துவிடுகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட இத்தகைய இடப்பெயர்வுகளில் கடந்த மாதம் (2022 அக்டோபர்) அதிகத் தொலைவு கடந்த சாதனை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 13 அன்று வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்காவில் இருந்து புறப்பட்ட பட்டை வால் மூக்கன் வகைப் பறவை(Bar-tailed godwit) ஒன்று 11 நாட்கள் 1 மணி நேரம் இடைவிடாது பறந்து, அக்டோபர் 24 அன்று ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள டாஸ்மேனியாவின் ஆன்சன்ஸ் விரிகுடாவை வந்தடைந்தது. அது கடந்த தொலைவு 13560 கி.மீ, அதாவது 8436 மைல். (இதற்கு முன்பு அளக்கப்பட்டுள்ள அதிகபட்சத் தொலைவு 13050 கி.மீ.தான்)
இந்தத் தொலைவை, சராசரியாக மணிக்கு 51 கி.மீ. வேகத்தில் பறந்து கடந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்ன தெரியுமா பிஞ்சுகளே! இவ்வளவு தொலைவைக் கடந்த இந்தப் பறவையின் வயது 5 மாதங்கள் மட்டுமே! ஜெர்மனியின் மாக்ஸ் பிளான்க் நிறுவனத்தைச் சேர்ந்த பறவையியல் ஆய்வாளர்களின் ஆய்வில் இத்தகவல் கிடைத்துள்ளது. 234684 என்ற எண்ணிடப்பட்ட வில்லை அணிந்த பட்டை வால் மூக்கனின் இந்தப் பயணம் செயற்கைக் கோள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொலைவைக் கடக்கும் வழியில், மரங்கள் இல்லை; அது தரையிறங்கவில்லை; தூங்கவில்லை; ஓய்வெடுக்கவில்லை; சாப்பிடவும் இல்லை.
யம்மாடி… நமக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குக் கொண்டு செல்லும் உணவுப் பையில் நொறுக்குத் தீனி இல்லாவிட்டாலே சோர்ந்துபோய் விடுகிறோம். இது எத்தனை நாளு… எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கு..?!
– டார்வின்