விளையும் பயிர்..
பூச்சிப் பிரியர்
பெற்றோரின் கட்டாயத்திற்காகப் பள்ளி சென்றார். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார். பள்ளி விட்டதும் பட்டாம்பூச்சி , வண்டு, வெட்டுக்கிளி போன்றவற்றைப் பிடித்துப் பேரின்பம் கொள்வார்.
பிடித்த பூச்சிகளை வீட்டிற்குக் கொண்டுவந்து அவை என்ன செய்கின்றன? என்ன சாப்பிடுகின்றன? எப்படிச் சாப்பிடுகின்றன என்று கவனித்துப் பார்ப்பார்.
விதவிதமான பூச்சிகளின் படம் கொண்ட ஒரு புத்தகம் வைத்திருப்பார். அந்தப் புத்தகத்தின் படத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பூச்சிகளைப் பிடித்துவிட்டார். ஒவ்வொரு பூச்சியைப் பிடித்ததும் புத்தகத்தில் அதன் படம் தேடி, இது என்னால் பிடிக்கப்பட்டது என எழுதி தேதியும் குறித்து வைப்பார்.
ஒரு நாள் ஒரு மரத்தின் பட்டையை உரித்துப் பார்த்தார். அதன் உள்ளே அபூர்வமான இரண்டு பூச்சிகள் இருந்தன. வலது கையில் ஒரு பூச்சியையும் இடது கையில் இன்னொரு பூச்சியையும் பிடித்துக் கொண்டார். அப்போது இன்னொரு பூச்சி கண்ணில் பட்டதும், வலது கையிலிருந்த பூச்சியை வாயில் வைத்துக் கொண்டு மூன்றாவது பூச்சியைப் பிடிக்க முயற்சி செய்தார்.
வாயில் வைத்த பூச்சி தன் கொடுக்கினால் அவரது நாக்கில் ஒருவிதத் திரவத்தை வெளியிட்டது. நாக்கு எரிந்ததும் த்தூ த்தூ என பூச்சியைத் துப்பினார். பூச்சி பறந்து சென்றது.
இப்படியெல்லாம் சிறுவயதில் ஆர்வம் கொண்ட இவர் பிற்காலத்தில் புழு, பூச்சி, தாவரம், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பல உண்மைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு எடுத்துச் சொன்ன சார்லஸ் ராபர்ட் டார்வின்.