சிங்கப்பூர், மலேசியா போல சென்னையும் மாறும்!
வணக்கத்திற்குரிய மேயர் ஆர்.பிரியா
“பெரியார் பிஞ்சு’’ மாத இதழ் வாசகர்கள் மாதந்தோறும் ஓர் ஆளுமையை என்றவாறு சந்தித்துப் பேசவைக்கும் புதிய பகுதி இந்த இதழிலிருந்து தொடங்குகிறது.
அந்த வகையில் இந்த மாதம், திராவிடர் இயக்கத்தின் கொள்கை விளைச்சல்களில் மிகமுக்கியமான ஆளுமையாக இருக்கும், சென்னைப் பெருநகர மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் ஆர்.பிரியா அவர்களை சென்னையில் வசிக்கும் 7 பெரியார் பிஞ்சுகள் ரிப்பன் மாளிகையில் கடந்த டிசம்பர் 19 அன்று மாலை சந்தித்தனர்.
“எல்லாருக்கும் வணக்கம்! இன்னிக்கு ரொம்ப பெரிய மனுசங்களெல்லாம் என்னை இண்டர்வியூ பண்ண வந்திருக்கீங்க!” என்று புன்முறுவலுடன் மேயர் தொடங்கிவிடவே, பிஞ்சுகளும் இயல்பாகி, உரையாடத் தொடங்கிவிட்டனர்.
யாழ்செல்வன்: உங்கள் பள்ளிப் பருவத்தைப் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?
மேயர்: நான் சென்னையில்தான் பிறந்தேன். என்னுடைய பள்ளிப் பருவம் நன்றாகத்தான் சென்றது. சென்னையில் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படிச்சேன். கல்லூரிக் கல்வியும் சென்னையில்தான்.
அன்பு தமிழச்சி: சென்ற ஆண்டு புயலில் எங்களது அன்றாட வாழ்க்கை முறை கேள்விக்குறியாகிப்போனது. இப்ப அப்பிடியில்ல! இது எப்படி சாத்தியாமாச்சு?
மேயர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள், அந்த மாதிரி இந்தாண்டு ஏற்படக்கூடாதுன்னு சொன்னாரு. அதைக் கவனத்தில் கொண்டு நாங்க சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். இந்த ஆறு மாதத்திற்குள்ள நாங்க பணிகளை நிறைவேற்றி இருக்கோம். அதனாலதான் இந்த ‘அவுட்புட்’ கிடைச்சது.
அன்பு தமிழச்சி: அவசர காலங்களில் இரவில்கூட வெளியில் வர்றீங்க. குடும்பத்தில் உங்களை மிஸ் பண்ணுவாங்களா, குறிப்பாக உங்க பொண்ணு?
மேயர்: அது இருக்கத்தான் செய்யும். மேயர் அப்பிடின்றது ரொம்ப பெரிய பொறுப்பு. மக்கள் பணி என்று வந்துவிட்டால் இப்படியெல்லாம் இருக்கத்தான் செய்யும்.
அறிவுமதி: நீங்க மேயர் ஆவேன்னு எதிர்பார்த்தீங்களா? எந்தளவுக்கு இதை மேம்படுத்தலாமுன்னு நினைக்கிறீங்க?
மேயர்: நான் மேயராவேன்னு கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. மாண்புமிகு முதல்வர் அவர்களும் சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் நிறைய புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறார். சென்னை எனக்கு ரொம்பப் புடிச்ச நகரம். எனக்கும் சென்னையை இன்னமும் அழகுபடுத்த வேண்டும்: பள்ளிகளையும் பூங்காக்களையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.
யாழினி: மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள் என்னென்ன?
மேயர்: தனியார் பள்ளிகள் போலவே சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு முதல் Logo அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக வகுப்புத் தலைவர்கள், (Class leaders) பள்ளித் தலைவர்கள் (School leaders) என்று அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். கடந்த பள்ளி ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விழுக்காட்டளவில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது.
ஆஸ்தா சரவணன்: உற்சாகமான உழைப்புக்கு ஏற்ற உங்கள் உணவுப் பழக்கம் என்ன?
மேயர்: பழங்கள் நிறைய சாப்பிடுவேன். உலர் உணவுகள் எடுத்துக்கொள்வேன். இறைச்சி உணவும் நிறைய சாப்பிடுவேன்.
ஆஸ்தா சரவணன்: மேயர் ஆனதும் உங்களுக்கு முதலில் தோன்றிய என்னம் என்ன?
மேயர்: சென்னை அப்பிடிங்கறது சின்ன நகரம் கிடையாது. மாண்புமிகு முதல்வர் எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தி ருக்காங்க. எந்த வகையிலும் நான் அதை தவறவிட்டுவிடக்கூடாது என்பதுதான் முதல் சிந்தனையாக இருந்தது.
ஆண்டன் பிரபாகரன்: புயல், மழையில் நீங்க எப்படி பயப்படாம வெளியில் வந்து இரவு பகலா வேலை செய்யறீங்க?
மேயர்: புயல் வரும்போது மரங்கள் விழும். காத்து அடிச்சு மேற்கூரை தகடுகள் பறக்கும். இந்த மாதிரியான பாதிப்புகள்தான் அதிகம். அதனால் முன்கூட்டியே எந்தெந்த மரமெல்லாம் பழுதானது என்று நாங்க கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துட்டோம். இப்படி முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்ததால் துணிச்சலுடன் நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்கிறோம். அதுமட்டுமல்ல, நான் பொதுமக்களின் பிரதிநிதி. அவங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் என்னுடைய கடமையை நான் செய்யணும்.
சமத்துவமணி: கடற்கரையைச் சுத்தம் செஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இருந்தாலும், மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை போடத்தான் செய்யறாங்க. இதை எப்படி தவிர்ப்பீங்க?
மேயர்: நாங்க மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யறோம். அதையும் தாண்டி ஒவ்வொரு கடையாகச் சென்று பரிசோதித்து, சட்டமீறல் இருந்தால் தண்டம் விதிக்கின்றோம். இது விரைவில் மாறும்.
யாழினி: தென் சென்னை மாதிரி வடசென்னை எப்போது மாறும்?
மேயர்: வடசென்னையைப் பொறுத்த வரை நிறைய புதிய திட்டங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். நானும் வடசென்னை பொண்ணுதான். அதனால் வடசென்னை சீக்கிரமே மாறும்!
அறிவுமதி: பெரியார், அம்பேத்கர் பற்றி உங்கள் கருத்து?
மேயர்: இருவருமே மாமனிதர்கள். பெரியாரைப் பொறுத்தவரை அவரது கொள்கையானாலும், அவரது அணுகு முறையானாலும் அதற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. எனக்கு பெரியார் அய்யா ரொம்ப, ரொம்பப் பிடிக்கும். பெரியார் எல்லாரும் சமம் அப்பிடிங்கறதுல ரொம்ப நோக்கமாக இருந்தாங்க. அதே மாதிரி அம்பேத்கரும் எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கணும் அப்பிடின்னு ரொம்ப நோக்கமாக இருந்தாங்க. அதனால என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில், இரண்டு பேரும் எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க.
ஆஸ்தா சரவணன்: சென்னையின் மேம்பாடு குறித்து யோசின்ன எந்த நாட்டுக்காவது பயணிக்கும் என்னம் உண்டா?
மேயர்: நிச்சயமாக, அண்மையில்கூட டெக்சாசில் இருந்து ஒரு மேயர் வந்திருந்தாங்க. நீங்க பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவங்க ஊரில் இருக்கும் ஆற்றைச் (River) சீர்செய்த விதம் பற்றிச் சொன்னாங்க. நமது கூவம் நதிக்காக அங்கு சென்று பார்த்துவருகிற திட்டம் இருக்கிறது.
யாழ்செல்வன்: தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிற மழைநீர் வடிகால் பணிகளைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?
மேயர்: மழை நீர் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் வடிகால் வழிகளில் செல்லும்படி செய்திருக்கிறோம். மொட்டை மாடிகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் வருகிற நீரைச் சேகரிக்க ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தும்படி ஊக்கப்படுத்துகிறோம். பூங்காக்களில் தேங்கி வீணாகும் மழைநீரை அந்தப் பூங்காவிற்குள்ளேயே ஒரு பகுதியில் சேகரித்து அந்தத் தண்ணீரையே எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் “ஸ்பான்ஞ் பார்க்” திட்டம். தற்போது ஆய்வில் இருக்கிறது.
அறிவுமதி: மேயராவதற்கு முன்னாடி உங்கள் குறிக்கோள் என்ன?
மேயர்: நான் பொறந்து வளர்ந்த பகுதியில் அந்தப் பகுதி மக்களுக்குச் சேவை செய்யவதற்காக மாநகராட்சி உறுப்பின ராகணும்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி நான் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்றுதான் இருந்தேன்.
யாழ்செல்வன்: எங்களைப் போன்ற மாணவர்களுக்கு சிறப்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
மேயர்: மாணவர்கள் விளையாடுவதற்கேற்ப பூங்காக்களைத் தயார் செய்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு சிறப்புப் பூங்காவை தயார் செய்திருக்கிறோம். நமது மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்தப் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார். விளையாட்டுத் திடல்களை மேம்படுத்திக் கொண்டு வருகிறோம். இப்போது கூட சென்னை நகரத்தில் 28 பள்ளிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்புக்காக எல்லா பள்ளிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சமத்துவமணி: மலேசியா, சிங்கப்பூர் போல தூய்மையான சென்னை சாத்தியமா?
மேயர்: சென்னை மாநகராட்சியில் குப்பைகள் உண்மையிலேயே மிகப்பெரிய சவால்தான். ”உங்க வீட்டிலெல்லாம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாகப் பிரிச்சுத் தருகிறீர்களா? என்று மாணவர்களையே திருப்பிக் கேள்வி கேட்டதும், அனைவரும் “ஆமாம்’’ கீகீஎன்றுதலையாட்டினர். இப்போது கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. இந்த இரண்டுமே சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. ஏற்கெனவே பெருங்குடியில் ”பயோமைனிங் ப்ராசஸ்” போய்கிட்டு இருக்கு. குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கிறோம். இப்போது அதே திட்டத்தை கொடுங்கையூரிலும் கொண்டு வரப்போகிறோம். இது மட்டுமில்லாமல் நனைந்த பகுதிகளிலிருந்து சிஎன்ஜி எரிவாயு தயாரிக்கிறோம். சென்னையும் சிங்கப்பூர், மலேசியா போல விரைவில் மாறும்.
அறிவுமதி: தங்களை சின்னப்பிள்ளை என்று விமர்சனம் செய்தார்களே, அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
மேயர்: முதல் நாளிலிருந்து தி.மு.க.வில் இருக்கும் முன்னோடிகளாகட்டும், பொதுமக்களாகட்டும் நன்றாகப் பாராட்டும்படிதான் இதுவரையிலும் என்னுடைய கடமைகளைச் செய்துகொண்டு வருகிறேன். இப்போதுகூட சிலர் அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால், நான் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.
அறிவுமதி: உங்க ‘ரோல் மாடல்’ யார்?
மேயர்: என்னுடைய “ரோல் மாடல் மாண்புமிகு முதல்வர் அவர்கள்தான்! ஏன்னா, அவங்க மேயரா இருந்திருக்காங்க. அப்போது சென்னைக்கு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாங்க. அதனால் நான் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு என்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
நேர்காணல் முடிந்ததும் மேயரிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு பிஞ்சுகள் விடைபெற்றனர்.