பொங்கல் நான்!
உலகத் தோரின் பசியாற்ற
உழைக்கும் உழவர் யாவருமே
நலமாய் வாழ வேண்டுமென
நாம்போற் றும்நாள் ‘பொங்கல்’ நாள்!
கழனி தன்னில் காலமெல்லாம்
கடுமை யாக உழைக்கின்ற
உழவர் தம்மைப் போற்றுகிற
உயர்ந்த நாளே ‘பொங்கல்’ நாள்!
குடங்கள் பானை செய்கின்ற
குயவர் உழைப்பைப் போற்றிடவே
உடனோர் புதிய பானையினை
ஓடி வாங்கும் ‘பொங்கல்’ நாள்!
வயலில் உழவன் உழுகையிலே
வற்றா(து) உழைக்கும் மாடுகளின்
உயர்வைப் போற்றும் திருநாளாய்
ஒளிரும் ‘மாட்டுப் பொங்கல்’ நாள்!
பாடு பட்டே நன்குழைக்கும்
பாச முள்ள உறவுகளை
நாடிச் சென்று போற்றுதலே
நாமும் ‘காணும் பொங்கல்’ நாள்!
தரையில் உழைப்பைப் போற்றிடவே
தமிழர் கண்ட பொங்கல்நாள்:
உரைத்தால் இந்த உயர்பண்பு
உலகில் இங்கே எவர்க்குண்டு?
– கே.பி. பத்மநாபன்
சிங்காநல்லூர்