கோமாளி மாமா-33 : மு.கலைவாணன்
விடுமுறை நாள் மாலை நேரம் வழக்கம்போல கதை சொல்வதற்கு கோமாளி மாமா நல்லதம்பி தோட்டத்திற்கு வந்தார்.
அவர் பின்னாலேயே மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூன்று பேரும் தோட்டத்திற்கு வந்துவிட்டார்கள்.
“வாங்க! வாங்க! இன்னைக்கு நாம எல்லாருமே சரியான நேரத்துக்கு வந்துட்டோம்” என வரவேற்றார் கோமாளி.
“ஆமா மாமா… இன்னும்கூட முன்னாடியே வந்திருப்போம். நேத்து எங்க பள்ளிக்கூடத்திலே நடந்ததைப் பத்தி பேசிக்கிட்டே வந்தோம் மாமா!” என்றாள் மல்லிகா.
“அப்படி என்ன நடந்தது? நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று ஆவலாகக் கேட்டார் கோமாளி மாமா.
“எங்க பள்ளிக்கூடத்திலே நேத்து மதியம் தீ அணைப்புத் துறையிலேயிருந்து சில பேரு வந்து பள்ளி மைதானத்திலே பேரிடர் மேலாண்மைன்னா என்ன… அது வந்தா என்ன செய்யணும்னு சொல்லிக் காட்டுனாங்க மாமா!” என்றாள் மல்லிகா.
“ஆகா! நல்ல செய்தியா இருக்கே! அதுவும் புயல், வெள்ளம், மழைன்னு நம்மளை மிரட்டிக் கிட்டிருக்கிற இந்த நேரத்திலே இதைப் பத்தி எடுத்து சொன்னது ரொம்ப நல்லதுதானே” என்றார் கோமாளி.
“ஆமா! மாமா… பேரிடர்ல இயற்கைப் பேரிடர் செயற்கைப் பேரிடர்னு ரெண்டு இருக்காம். நீங்க சொன்ன மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் சுனாமி இதெல்லாம் இயற்கைப் பேரிடர். ஜாதி, மதக் கலவரம், தீ விபத்து, வெடி விபத்து இதெல்லாம் செயற்கைப் பேரிடர் அப்படின்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லே… இயற்கைப் பேரிடரை நம்மாலே தடுக்க முடியாது. அதுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நம்மளை எப்படிப் பாதுகாத்துக்க முடியும்னு விளக்கமாச் சொன்னாங்க.
செயற்கைப் பேரிடர் வராம நம்மாலே தடுக்க முடியும்னும் சொன்னாங்க. அதாவது அடுத்தவங்களை ஜாதி, மத, பாகுபாடு பாக்காம சக மனிதர்களா மதிக்கவும், அன்போட நேசிக்கவும் செய்தாலே போதும்; செயற்கைப் பேரிடர் ஏற்படாதுன்னு எடுத்து சொன்னாங்க.” என தன் பள்ளியில் சொன்னதை தெளிவாகச் சொன்னாள் மல்லிகா.
“பரவல்லியே… நல்ல செய்திகள் நிறைய தெரிஞ்சுக்கிட்டீங்க. அதை எங்களுக்கும் தெளிவாச் சொன்னீங்க. ரொம்ப நன்றி… மல்லிகா” என்று கோமாளி சொல்லி முடிப்பதற்குள்… “மாமா! நீங்க கதை சொல்லுங்க மாமா… மல்லிகா ரொம்ப நேரமா பள்ளிகூட டீச்சர் மாதிரி கிளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கு” என்று சலித்துக்கொண்டான் செல்வம்.
“செல்வம்… மல்லிகா சொன்னது ரொம்ப ரொம்ப அவசியமானது. உங்களை மாதிரி குழந்தைகளும், என்னை மாதிரி பெரியவங்களும் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல். இப்ப மல்லிகா சொன்னதை ஒட்டி ஓர் உண்மைத் தகவலை இன்னைக்கு நான் கதையா சொல்லப் போறேன்.” என்றார் கோமாளி.
“அப்படியா! சொல்லுங்க… சொல்லுங்க” என்று கோமாளி மாமாவின் அருகில் மூவரும் உட்கார்ந்தனர்.
“மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் நகரம். அங்கே அமெரிக்காவுக்குச் சொந்தமான யூனியன் கார்பைடுங்கிற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கிற தொழிற்சாலை இருந்தது.
அந்தத் தொழிற்சாலையிலே 38 ஆண்டு களுக்கு முன்னே அதாவது 1984 டிசம்பர் 3 ஆம் நாள் அதிகாலையில மீத்தைல் அய்சோ சயனேட் என்கிற நச்சு வாயு கசிந்தது.
இந்த விபரீத செயற்கைப் பேரிடர் விபத்தினால அஞ்சு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டாங்க. உடனடி உயிரிழப்பா ஏறத்தாழ 2,259 பேர் அந்த நச்சு வாயுவின் பாதிப்புனால இறந்து போனாங்க.
அதுக்கடுத்த இரண்டு வாரத்துல மேலும் 8000 பேர் இறந்தாங்க. மேலும் 8000 பேர் இந்த வாயு பாதிப்பின் பின் விளைவுகளாலே உண்டான நோய்களாலே பாதிக்கப்பட்டு இறந்தாங்க.
போபால் பேரழிவுன்னு சொல்லப்பட்ட இந்தப் பேரிடர் உலகத்தில உள்ள தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பேரழிவுகளிலேயே ரொம்ப அதிகமான பாதிப்பை உண்டாக்கின பேரழிவா இன்னைக்கு வரைக்கும் கருதப்படுது.
மீத்தைல் அய்சோ சயனேட் என்கிற நச்சு வாயு கசிஞ்ச அந்த நேரத்திலே போபால் ரயில் நிலையத்திலே குலாம் தஸ்தகீர் என்ற நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர்) வேலையில இருந்தாரு.
போபால் ரயில் நிலையத்தின் வழியா லக்னோவில இருந்து மும்பை போற ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துட்டு வெளியே வந்தார்.
காற்றிலே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த அவரு அவசர அவசரமா சிக்னல் அறைக்கு ஓடுனாரு.
எப்படியாவது மும்பை போன ரயிலை லக்னோவிலே தடுத்து நிறுத்தலாம்னு நினைச்சு முயற்சி செய்தாரு. ஆனா அதுக்குள்ள அந்த ரயில் லக்னோவை விட்டுக் கிளம்பி போபாலை நோக்கிச் செல்லத் தொடங்கிடுச்சு.
தஸ்தகீரால் ஒண்ணும் செய்ய முடியலே. லக்னோ-_ மும்பை ரயில் போபால் ஸ்டேஷனில் வந்து நின்னுடுச்சு. அதிலே இருந்து இறங்கிய பயணிகளுக்கு விஷ வாயுவினால இருமல் கண் எரிச்சல்… ஏற்பட்டு சுருண்டு சுருண்டு விழுந்து இறந்தாங்க. ஓடுன சில பேரு சீக்கிரமாவே இறந்தாங்க. கொஞ்ச நேரத்திலே போபால் ரயில் நிலையத்தின் உள்ளே வெளியேன்னு 191 பிணங்கள். அந்தக் காட்சி அவரை நிலை குலையச் வெச்சுது.
பதற்றத்தோட சிக்னல் அறைக்கு ஓடுனாரு. அங்கே அவருக்குக் கீழே வேலை செய்யக் கூடிய சிக்னல்மேன் வாயில ரத்தம் வழிய செத்துக் கிடந்தாரு.
தஸ்தகீருக்கு ஒண்ணுமே புரியலே. அவரை ஓரமா நகர்த்திப் போட்டுட்டு எந்த ரயிலும் போபால் வழியா வந்துவிட வேண்டாம்னு முன்னே பின்னே இருக்கிற ரயில் நிலையத்துக்கெல்லாம் தகவல் அனுப்பத் தொடங்கினாரு.
அதையும் மீறி ரயில்கள் வந்தால் ஜன்னலை மூடி வரும்படியும்… எக்காரணத்தை முன்னிட்டும் போபாலில் ரயில் நிற்க வேண்டாம் எனவும் யாரும் ஜன்னலைத் திறக்காமல், ரயில் வேகமாகப் போய்விட வேண்டுமெனவும் எச்சரித்தார்.
அதனால் அடுத்தடுத்து போபால் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயிலில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் பிழைத்தனர்.
அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்து பார்த்தபோது நிலைய அதிகாரி தஸ்தகீர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையில் பிடித்தபடி இறந்துகிடந்தார்.
அவர் மட்டும் இல்லை என்றால் போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரம் கூடியிருக்கும்.
இஸ்ஸாம் மதத்தைச் சேர்ந்த தஸ்தகீர் இறந்து போன பல ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராகப் புதைக்கப்பட்டிருந்தாலும்…
ஜாதி, மதம் என எதையும் பார்க்காமல் பேரிடர் நேரத்திலும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்காமல் அடுத்தவர் நலனுக்காகக் கடைசி நேரம் வரை உழைத்தவர் எனப் போற்றப்பட வேண்டியவர் தஸ்தகீர்.”
கோமாளி மாமா சொல்லச் சொல்ல, பரப்பரப்புடனும், கண்களில் வழிந்த கண்ணீருடனும் கேட்டுக் கொண்டிருந்தனர் மூவரும். போபாலின் கொடூரமும், தஸ்தகீரின் உயிர்த்தியாகமும் அப் பிஞ்சுகளின் மனதைப் பிசைந்தன. சொல்லிக் கொண்டிருந்த கோமாளி மாமாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து அவரின் ஒப்பனையையும் கூடக் கொஞ்சம் கலைத்திருந்தது. மீண்டும் பேசத் தொடங்கினார்.
“சரி, கண்ணைத் தொடச்சுக்கங்க, தன்னலம் மறந்து பொது நலன் காக்கும் குலாம் தஸ்தகீர் அவர்களுடைய எண்ணம் நமக்கும் இருக்கணும்.
செயற்கைப் பேரிடர் ஏற்படாமல் இருக்க ஒவ்வொருத்தரும் கவனமா இருக்கணும்.
தடுக்க முடியாத பேரிடர் ஏற்படும்போது அடுத்தவர் நலனில் அக்கறையுள்ள மனிதர்களாக எல்லாரும் செயல்படணும்.” என்று சொல்லி முடித்தார் கோமாளி மாமா.
பேரிடர்க் காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பேருண்மையை உணர்ந்தவர் களாகப் புறப்பட்டனர் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும்.
(மீண்டும் வருவார் கோமாளி)