துணுக்குச்சீட்டு
அவதார் படத்தில் வரும் நவிக்கள் எல்லாம் நிஜமா இருக்காங்களா? இல்லை மனிதர்கள் தான் வேடம் போட்டு வந்திருக்காங்களா? எல்லாமே கிராபிக்ஸா?
அவதார் படத்தைப் பற்றி பேசுறதுக்கு முன்னால மனிதக்குரங்குகள்னு சொல்லப்படுற ape-களை மய்யமா வச்சு எடுக்கப்பட்ட Planet of the Apes படங்கள் பற்றி பார்ப்போம்.
Rise of the planet of the apes படத்திலே, Caesar-ங்கிற குரங்கு, அதை வளர்த்த மனிதரிடம், மரத்தில் ஏற அழகாக அனுமதி வாங்கும். அதில் அந்தக் குரங்கே நடிச்சிருக்குமா? அப்படி விலங்குகளை, அதனோட இயல்பான வாழ்விலிருந்து வெளியேற்றி, ஒரு இடத்தில் நடிக்க வைக்குறதும் தப்புன்னு தானே “இந்தப் படத்தில் எந்த விலங்குகளும், பறவைகளும் துன்புறுத்தப்படவில்லை”ன்னு எல்லாப் படமும் தொடங்கும் போதே போடுறாங்க. அதனாலதான், அந்தப் படத்தில், அசைவுப் பதிவும் முறையை (Motion Capture technique)
பயன்படுத்தியிருக்காங்க.
இந்த முறையில், ஒரு மனிதரின் (மனிதர் என்பது அனைத்துப் பாலருக்கும் பொதுவான சொல்தான், எனவே ஆணோ, பெண்ணோ ஒருவரின்) அசைவுகளைப் பதிவு செய்து, அதைக் கணினி மூலமாக, முப்பரிமாண இயங்குபடமாக (3D Animation) மாற்றுவாங்க. இந்த முறையில், நடிகரோ, நடிகையோ, ஒரு சிறப்பு உடையை அணிந்திருப்பாங்க. அந்த உடையில், 15-20 உணரிகள் (Sensors) பொருத்தப்பட்டு இருக்கும். அந்த உடையில், உணரிகளோட சேர்ந்து, குறியீடுகளும் (Markers) பொருத்தப்பட்டு இருக்கும். இந்தக் குறியீடுகள், ECG எடுக்கும்போது நெஞ்சுல ஒட்டுவாங்களே, அதுபோல இருக்கும். இந்தக் குறியீடுகளின் தடங்காண (Track செய்ய), சின்னதாக நிறைய ஒளிப்பதிவுக் கருவிகளும் பொருத்தியிருப்பாங்க. அதனோட, ஒரு தலைக்கவசமும், நடிகர், நடிகைகள் போட்டு இருப்பாங்க. இதுல, முகபாவங்களைப் பதிவு செய்ய ஒளிப்பதிவுக் கருவிகள் இருக்கும். குறியீடுகளும் உணரிகளும் நடிகர், நடிகையின் அசைவுகளைப் பதிவாக்கி, அதை கணினிக்கு அனுப்பும். பதிவிக்கப்பட்ட அசைவுகளின் விவரங்களை மென்பொருள் மூலமாக, கதாபாத்திரத்தின் முப்பரிமாண இயங்குபடமாக மாற்றும்.
சரி, குரங்கை நடிக்க வைக்குறது தப்புன்னு சொல்றாங்களே… அப்போ எப்படி caesar நடிச்சது?
அந்தக் குரங்குக்குப் பதிலாக, ஒரு மனிதர், அசைவுப் பதிவு முறைக்குத் தேவையான தலைக்கவசம், சிறப்பு உடை அணிந்து, caesarஆக நடிச்சார். அவரது அசைவுகளைப் பதிவு செய்து, மென்பொருள் மூலமாக, caesar-ன் முப்பரிமாண இயங்குபடமாக மாற்றினாங்க. அப்படித்தான் caesar அனுமதி வாங்குச்சு. (இந்த அறிவியல் தொழில் நுட்பம் வளர்வதற்கு முன்னால விலங்குகள் நடிக்கிறதும், விலங்கு மாதிரி வேடம் போட்டு நடிக்கிறதும் தான் வழக்கம். ஆனா இப்போ இல்ல!)
இதே போலத்தான் Avatar படங்களும்! மனிதர்களாக வருவோர் தவிர, நவிக்களாக வருவது எல்லாம் ஒப்பனைகளல்ல… அனைத்தும் இப்படி அசைவுப் பதிவு முறை மூலம் உருவாக்கப்பட முப்பரிமாண (3D) உருவங்களே!