உலக நாடுகள்
சாலமன் தீவுகள் (SOLOMON ISLANDS)
- தலைநகரம் ஹோனியரா (Honiara)
- ஆங்கிலம், வட்டார வழக்கு மொழிகள் பேசப்படுகின்றன.
- மக்கள் மெலனீசியன் என்றழைக்கப்படுகின்றனர்.
- கிறித்தவ சமயத்தவர் அதிகம் வசிக்கின்றனர்.
- நாணயம் சாலமன் தீவு டாலர்
- பிரதமராக டன்னி பிலிப் (Danny Philip) உள்ளார்
- ஆளுநராக ஃப்ராங் காபுய் (Frank Kabui) உள்ளார்
இது ஒரு தீவு நாடு. மலாய்தா, நியூ ஜார்ஜியா, சாந்தா குரூஸ் ஆகிய முக்கியமான தீவுகளை உள்ளடக்கிய நாடு. ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கி.பி. 1568 இல் கண்டுபிடிக்கப்பட்ட இத்தீவுகள் 1890 இல் பிரிட்டனின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டன. இரண்டாம் உலகப் போரின் சில நிகழ்வுகள் இங்கே நடைபெற்றுள்ளன. 1976 இல் சுயாட்சி வழங்கப்பட்டது. 1978 ஜூலை 7 ஆம் தேதி பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.
தேசிய பாராளுமன்றக் கட்டிடத்தை அமெரிக்க அய்கிய நாடுகள் அன்பளிப்பாகக் கட்டிக் கொடுத்துள்ளன. மிகப் பெரிய நிலநடுக்கமும் சுனாமியும் ஏப்ரல் 2, 2007 இல் இத்தீவுகளைத் தாக்கியுள்ளன. இதில் பெரிதும் பாதிப்படைந்தது சிறிய ஜிஸோ (Gizo) தீவாகும்.
புவியியல் அமைப்பு
தென்மேற்குப் பசுபிக் பெருங்கடலில் 15 முக்கிய தீவுகள் மற்றும் எண்ணற்ற சிறிய தீவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வடமேற்கில் போகைன்வில்லே, வடக்கே சாலமன், கிழக்கே பாபுவா நியூகினியா எல்லைகளாக உள்ளன.
கல்வி
சாலமன் தீவுகளில் கட்டாயக் கல்வி என்பது கிடையாது. 60 சதவிகிதக் குழந்தைகளே ஆரம்பப் பள்ளிக்குச் செல்கின்றனர்.
தொழில்
விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. நெல் மற்றும் இதர தானியங்கள், பனை எண்ணெய், கொப்பரைத் தேங்காய், கோகோ முக்கிய விளைபொருள்களாகும். மேலும், மீன் பிடித்தலும் விவசாயம் சார்ந்த உற்பத்தித் தொழில்களும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன. தாமிரம், நிக்கல், தங்கம் போன்ற கனிப்பொருள் வளங்களும் உள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி
மீன், பனை எண்ணெய், கொப்பரைத் தேங்காய் முதலியன முக்கியமான ஏற்றுமதிப் பொருள்களாகும். எந்திரங்கள், எரிபொருள்கள், போக்குவரத்துச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்கள், தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கின்றனர்.
– மலர்