அன்றாட அறிவியல்
ஃப்ரிட்ஜில் ஹாட்பேக் வைச்சா என்னாகும்?
பாபு. பிகே
Insulated Hot Pot – இல் உணவை வச்சு, ஃப்ரிட்ஜ்ல வைக்கிற புத்திசாலிகள் யாராச்சும் இருக்கீங்களா?
“வேற பாத்திரமே கிடைக்கலை, இதுதான் இருந்துச்சு, இன்னொரு பாத்திரத்துக்கு மாத்த சோம்பேறித்தனம், அதுனாலதான் அப்டியே வச்சுட்டேன்னு” என்று காரணம் சொன்னாலும் சரி…. இல்ல… தலைப்புல சொன்னமாதிரி தெரிஞ்சே செஞ்சாலும் சரி…
நீங்க வைங்க, வைக்காமப் போங்க. ஆனா, எதைச் செஞ்சாலும் அதோட விளைவுகள் என்ன, செயல்கள் என்னன்னு புரிஞ்சு செய்ங்க.
இன்சுலேட்டட்னு சொன்னாலே, ஒருபக்கம் இருக்கற வெப்பநிலை மறுபக்கம் கடத்தப்படாது என்று நமக்குத் தெரியும். ஃப்ரிட்ஜில் உணவை வைப்பது எதற்கு என்றால், உணவின் வெப்பநிலையைக் குறைத்து, அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்து உணவைக் கெடுத்து விடாமல் பாதுகாக்கத்தான்.
இப்படி இன்சுலேட்டட் டப்பாக்குள் உணவை வைத்து ஃப்ரிட்ஜுக்குள்ளே வைத்தால், உள்ளிருக்கும் உணவு குளிரூட்டப்படாது. எனவே, ஏற்கனவே அவ்வுணவில் இருக்கும் பாக்டீரியாக்கள் அது பாட்டுக்கு நன்கு வளர்ந்து உணவைக் கெடுத்து விடும்.
சூடா வச்சா கெடாதில்லையா என்று கேட்டா, சூடா வைக்கிறதுன்னா எதுக்கு ஃப்ரிட்ஜுக்குள்ள வைக்கணும்? உணவு கெடாம இருக்கனும்னா, பாக்டீரியாக்கள் வளராத அளவுக்கு ஒன்னு சூடா இருக்கணும்; இல்லைன்னா குளிரா இருக்கணும். ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியாது.
அடுத்து, ஃப்ரிட்ஜுக்குள்ளே சூடான உணவை கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது அறைவெப்பநிலைக்கு வந்ததுக்கு அப்புறம்தான் வைக்கணும்.
ஏன்னா,
1. அந்தச் சூடு ஃப்ரிட்ஜுக்குள்ளே இருக்கற மத்த உணவுப் பொருள்களைப் பாதிக்கும்.
2. உணவில் படிப்படியா வெப்பநிலை மாறாம, துரிதமா மாறும்போது, அதில் இருக்கும் சத்துகள் போய்விடும்.
3. ஃப்ரிட்ஜுக்குள்ளே அதிகப்படியான வெப்பநிலையைப் பராமரிக்க, கம்ப்ரெஸ்ஸர் அதிகநேரம் இயங்க வேண்டியிருக்கும். கரண்ட் செலவும் கூடும், கம்ப்ரெஸ்ஸரின் ஆயுளும் குறைந்துவிடும்.
4. பாக்டீரியா வளர வாய்ப்பாகும்.<