அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை
ப. மோகனா அய்யாதுரை
மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதேபோல மனிதனின் புலன் உணர்வுகள் என்றால் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும் தொடு உணர்வு மட்டுமே என்று தான் நெடுங்காலமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுவும் இப்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நம் உடல், புலன் உணர்வுகளின்குவியல் என்று நரம்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது 22 முதல் 33 வெவ்வேறு புலன்உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவதாக பலர் வாதிடுகின்றனர்.
நாம் தொடு உணர்வு என்று ஒரே மொத்தமாக குறிப்பிடும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் இருக்கின்றனவாம்.
அவற்றைப் பற்றி இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.
முதலாவதாக, சமநிலை உணர்வு (Equilibrioception). இந்த உணர்வே நம்மை நிமிர்ந்து நடக்கவோ, உட்காரவோ, ஜிம்னாஸ்டிக் போன்ற சமநிலை தேவைப்படும் செயல்களைச் செய்யவோ உதவுகிறது.
அடுத்ததாக Proprioception என்று சொல்லப்படும் தன்னகவுணர்வு. அதாவது நாம் நம் உடலின் சில பாகங்களைப் பார்க்காமலேயே அவற்றைப் பயன்படுத்தி சில வேலைகளைச் செய்கிறோம். எடுத்துக்காட்டாகக் தட்டச்சு கருவியைப் பார்க்காமல் தட்டச்சு செய்கிறோம். நம் கால்களைத் தொடர்ந்து கண்காணிக்காமல் நடக்கிறோம். இவை எல்லாம் அந்த வகை தன்னக உணர்வு தான்.
மூன்றாவதாக Kinaesthesia எனப்படும் தசைநார்களில் அசைவு ஏற்படுத்தும் உணர்வு. நாம் தினமும் ஏதோ ஒரு இயக்கத்தில் இருப்பது கூட இந்த வகை தானாம்.
நமது சுற்றுச்சூழல் குளிராக இருக்கிறதா வெப்பமாக இருக்கிறதா என்பதை எப்போதும் நாம் தெர்மாமீட்டர் கொண்டு அளந்தோ அல்லது உடனுக்குடன் செய்திகளை, பார்த்தோ தெரிந்து கொள்வதில்லை. நம்மைச் சுற்றியுள்ள வெப்பநிலையை உணரும் திறன் நமக்குள்ளே இருக்கின்றது. இதனை Thermoception எனப்படும் வெப்பம் உணரும் திறன் என்கின்றனர் ஆய்வாளர்கள். என்றால் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உணரும் திறன். அது வலியை உணரும் திறன்தான். அதற்கு Nociception என்று பெயராம்.
கால வரிசையை நாம் எப்படி உணர்கிறோம் என்பதை Chronoception என்கின்றனர்.
இவை இந்த வரிசையில் இன்னும் பல புலன்கள் தான் உள்ளன மட்டும் இல்லாமல் மனிதனால் உணர முடியாத மற்ற உயிரினங்களால் மட்டுமே உணரக்கூடிய புலன் உணர்வுகளும் உள்ளன என சிலவற்றை வகைப்படுத்துகின்றனர்.
அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.முதலாவதாக Electroception- நம்மைச் சுற்றியுள்ள மின்புலங்களை உணரும் திறன். சுறா மீன்களால் தம்மைச் சுற்றியுள்ள அதன் தீனிகளின் மின்புலங்களைக் கண்டுணர முடியுமாம்.. வௌவால் போன்ற சில விலங்குகள் மீட்டு ஒலித்தல் மூலமாக புவியின் காந்தப்புலத்தை உணர்ந்து தமக்கான பாதையைக் கண்டுபிடித்துக் கொள்கின்றன. இது அந்த வகை உணர்வே ஆகும்.நாம் எதார்த்தமாக வெளிப்படுத்தும் உணர்வுகளை அய்ந்தாக வகைப்படுத்தியவர் அரிஸ்டாட்டில் என்றும் அதுவே உண்மை என்றும், நாம் இப்போது வரை நம்பி வருகிறோம்.ஆனால் சில நேரங்களில் அய்ம்புலன்களின் மூலம் நாம் உணர்வதும் உண்மையும் வெவ்வேறாகக் கூட இருக்கும்.
எடுத்துக்காட்டாக நாம் ஒரு விமானத்தில் அமர்ந்திருக்கும் போதும், விமானம் புறப்படும் போதும் நாம் பார்க்கும் காட்சிகள் மாறுகின்றன. அதேபோல ஒரு பொருளை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும் அருகில் இருந்து பார்ப்பதற்கும் அளவில் வேறுபாடு இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதன் அளவில் மாற்றமில்லை.
இன்னொரு எடுத்துக்காட்டு நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதன் முகப்பை மட்டும் காண்கிறோம். ஆனால் அதைத் தொடும் போது நமது மூளை அப்பொருளின் பண்புகளைப் பற்றி மேலும் அறிகிறது. பார்த்தல், தொடுதல் ஆகிய இரண்டும் சேர்ந்து புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன
எவ்வாறாயினும் எதைப் பற்றியும் நாம் பார்த்தோ கேட்டோ அல்லது மற்ற உணர்வுகளின் மூலமோ மட்டும் மதிப்பிடுவதில்லை.
உலகத்தைப் பற்றிய நம் அனுபவம் என்பது எப்போதும் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருக்க வேண்டும்.