மனிதகுலம் பகுத்தறிவால் மாண்பு பெற வேண்டும்!
அன்புடனே அனைவரையும்
அணைத்துவாழ வேண்டும்!
ஆசையுடன் சினமதையும்
அடக்கிவாழ வேண்டும்!
பண்புடனும் பணிவுடனும்
பழகிவாழ வேண்டும்!
பாசநேசத் துடனெதையும்
பகிர்ந்துவாழ வேண்டும்!
உண்மையென்றும் உரைப்பதென்று
உறுதிபூண வேண்டும்!
உழைத்துவுண்டு வாழ்விலென்றும்
உயர்வுகாண வேண்டும்!
நன்மைசெய்யும் மனிதர்தம்மை
நாம்மதிக்க வேண்டும்!
நன்றி சொல்ல மறப்பதையே
நாம்மறக்க வேண்டும்!
புண்படவே பேசுவதைப்
புறக்கணிக்க வேண்டும்!
பூமணக்கும் வாய்மலர்ந்து
புகழ்ந்துரைக்க வேண்டும்!
தண்டனிடும் பாழடிமைத்
தளையகற்ற வேண்டும்!
தன்மானம் வீரத்துடன்
தலைநிமிர்த்த வேண்டும்!
தன்னலத்தை முழுவதுமாய்த்
தவிர்த்தொழிக்க வேண்டும்!
தழைத்துவோங்கிப் பொதுநலமே
தான்செழிக்க வேண்டும்!
வன்முறையில் இறங்குபவர்
வாலறுக்க வேண்டும்!
வறுமை ஓய்ந்து எளியவரின்
வாழ்வினிக்க வேண்டும்!
தொண்டுசெய்து மகிழும்மனத்
தூய்மைபெற வேண்டும்!
துயரங்கண்டு துவண்டிடாத
துணிச்சல்பெற வேண்டும்!
மண்டுகின்ற மடமையிருள்
மாற்றம் பெற வேண்டும்!
மனிதகுலம் பகுத்தறிவால்
மாண்புபெற வேண்டும்!
– தளவை இளங்குமரன்