திசையறிவோம் – பாடத்திலும் பாடத்திலும்!
பாபு பி.கே, அறிவியல் பரப்புநர்
எனது பயிற்றுவிக்கும் முறை வேறு மாதிரியானது. சிலர் பெரும்பாலும் கீழிருந்து மேல், உள்ளிருந்து வெளியே என்றே தொடங்குவார்கள். அதாவது, அடிப்படையில் இருந்து தொடங்குகிறார்கள். அது சரிதான், தவறு இல்லை.
ஆனால், அயற்சியையும், நம்பிக்கையின்மையையும், குறிக்கோள் எது என்று தெரியாமையையும் தரக் கூடும். எனவே, நான் முதலில் இறுதி இடம் எது, அதிலிருந்து தொடக்க இடம் வரைக்கும் என்னென்ன இருக்கின்றன, அவற்றை எந்தப் பாதையில் சென்று நாம் அறிந்து கொள்ளப் போகிறோம் என்று ஒரு பறவைப் பார்வையினைக் காட்டி விடுவேன்.
இப்பொழுது கற்றுக் கொள்பவர்களிடம் மாதிரி வரை படம் ஒன்று அவர்கள் மனதில் இருக்கும். ஏதேனும், ஓர் இடத்தில் இருந்து நாம் விலகி வேறொரு தலைப்பினை அறிந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், எந்த இடத்தில் இருந்து விலகுகிறோம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டு தங்கள் வழிகாட்டி வரைபடத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். பின் எப்பொழுது திரும்ப வந்து, திட்டமிட்ட பாதையில் கற்கத் துவங்குகிறோம் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
நான் ஒரு புத்தகத்தைப் படிக்கும் முன், உறுதியாக ஆசிரியர் உரை, பதிப்புரை, முன்னுரை, பொருளடக்கம் ஆகியவற்றைப் படித்து விட்டுத்தான் புத்தகத்தைப் படிப்பேன். பொருளடக்கம் மிக இன்றியமையாதது. அதுதான் எனக்கு வழிகாட்டி.
வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போகும் மற்றவர் எப்படியோ தெரியாது, நான் அந்த இடத்தின் வரைபடத்தைப் பார்த்து, புவியியல் அமைப்பினை அறிந்து கொள்வேன். சுற்றியுள்ள முக்கியமான இடங்கள், நகரங்கள், நாடுகளை அறிந்து கொள்வேன். மேலதிகமாக, மொழி, உணவுமுறை, தட்பவெப்பம், சட்டம், ஒழுங்கு, தனிநபர் பாதுகாப்பு என்றெல்லாம் படித்தறிந்து கொள்வேன்.
போகின்ற இடத்தில் அப்படியே இருக்காது என்றாலும், அந்த அறிவு எனக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். போய்ப் பார்த்துக் கொள்ளலாம், போய் பட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வரைபடம் அறிதல் நமக்கு ஒரு பறவைப் பார்வையில் இடங்களைப் பதிய வைக்கும்.
இன்றைய தலைமுறையினருக்கு வரைபடம் அறிதல் (Map Reading) எந்த அளவிற்கு சொல்லித்தரப்படுகிறது என்று தெரியவில்லை. என் பள்ளிப் பருவ காலத்தில் கூட பத்து மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டும் என்ற அளவிலேயே சொல்லித் தரப்பட்டது. ஆனால், நானும் என் தங்கையும், பூமியுருண்டை, உலக இந்திய வரைபடங்கள், அட்லஸ் களஞ்சியம் போன்றவற்றை வைத்து, நாடுகளின் பெயர்களைச் சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கச் சொல்லி விளையாடுவோம்.
விளையாட்டாய்த் தொடங்கியது, பிற்பாடு நாடுகளின் பெயர்களோடு நின்று விடாமல், அவற்றின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொழில்நுட்பம், சிறப்புகள், விளைபொருள்கள், தட்பவெப்பம் என்றெல்லாம் அறியத் துவங்கி எங்கள் அறிவு விரிவு செய்யப்பட்டது.
பறவைப் பார்வையில் மட்டுமே நமக்குப் பரவலாக என்ன இருக்கிறது என்று தெரிய வரும். எதை நாம் தேர்ந்தெடுத்து அறிய வேண்டும், எதை எங்கிருந்து அணுகலாம், ஒவ்வொன்றிற்குமிடையே இருக்கும் தொடர்புகள் என்ன, தொலைவுகள் என்ன என்பது போன்ற சிந்தனைகள் எல்லாம் ஏற்படும்.
அதாவது, நான் சொல்வதைப் பின்தொடர் என்று நேர்கோட்டில் அழைத்துச் செல்லாமல், அவர்கள் பார்வைக்குப் பரவலாக இருப்பதைச் சொல்லி விட்டு, நான் உங்களை இந்த வழியில் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டால், அவர்களுக்கு நாம் மற்ற வாய்ப்புகளையும் தெரியப்படுத்தியவர்களாக இருப்போம். குறைந்தளவு, அப்படிப் பார்க்கப் பழக்கப்படுத்தியவர்களாகவாவது இருப்போம்.
பறவைப் பார்வையில் பார்த்தறிவது என்பது வாழ்க்கைக்கும் பயன் தரக்கூடியது. பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்ப்பது, கூட்டத்தில் யார் இருக்கிறார், என்ன நிகழ்கிறது என்று அறிந்து கொள்வது, திட்ட மேலாண்மைகளில் திட்டங்களைப் பார்வையிடுவது என்று அதன் பயன் விரிவடையும்.
சில நாள்களுக்கு முன், ஒரு பள்ளியின் மாணவர்களோடு இருக்கையில், ஒரு வரை படத்தின் திசைகள் என்னென்ன என்று கேட்கும் பொழுது அவர்கள் குழம்பினார்கள். வரைபடம் அவர்களுக்குத் தெரியும் என்றாலும், சிந்தையில் நிற்கும் வண்ணம் இல்லை. பயிற்சி வேண்டும் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
“உங்கள் பிறந்த நாள், விழா நாள்களின் போதெல்லாம் உங்களுக்குப் புத்தாடை எடுத்துத் தருவார்கள் அல்லவா? அதற்குப் பதிலாகவோ அல்லது அதன் விலையைக் குறைத்துக் கொண்டோ உங்களுடைய அறிவை மேம்படுத்தப் பயன்படும் பொருள்களை வாங்கித் தரச் சொல்லிக் கேளுங்கள்.
அட்லஸ் வாங்கி முன்னட்டை தொடங்கி பின்னட்டை வரை படியுங்கள் உடன் பிறந்தோர், நண்பர்களோடு, நாட்டின் பெயர் சொல்லி அது எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டு பிடித்து விளையாடுங்கள்”.
இதனைப் படிக்கும் பெற்றோரும், ஆசிரியரும், தங்கள் குழந்தைகளானாலும் சரி, மற்ற குழந்தைகளானாலும் சரி, அவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் தருவதாக இருந்தால், அறிவை வளர்க்கும், சிந்தனையைத் தூண்டும், திறன் வளர்க்கும், புத்தகங்கள், பொருள்கள் ஆகியவற்றை வாங்கிப் பரிசளியுங்கள்.
குழந்தைகளுக்கு ‘மேப் ரீடிங்’ என்பது முக்கியம். மேல்நாட்டிலே சின்னச் சின்ன குழந்தைகளுக் கெல்லாம் முதலில் இதைத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள். நம்முடைய நாட்டிலே ஒரு நாட்டைப் பற்றியோ, ஓர் ஊரைப் பற்றியோ கேட்டால் அவர்களுக்குத் தெரிவதில்லை. விண்வெளிக்கலம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது என்றால் அது எந்த பகுதியிலிருந்து புறப்பட்டது என்பதை அட்லசைப் பாத்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று முதல் ‘Map’ (வரைபடம்) பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அது உங்கள் வருங்காலத்துக்கு உதவும்.
வாழ்த்துகளுடன் உங்கள் தாத்தா,
கி.வீரமணி
பெரியார் பிஞ்சு, டிசம்பர் – 2002