உலக நாடுகள்: வை.கலையரசன்
நிகரகுவா
நிகரகுவா மத்திய அமெரிக்காவில் உள்ள பெரிய நாடு. இது கரீபியன் கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடல் இரண்டையும் எல்லையாகக் கொண்டு, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ்
நாடுகளிடையே உள்ளது.
இயற்கை அமைப்பு
* நிகரகுவா 1,30,370 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது (1,19,990 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு மீதி நீர்ப்பரப்புகள்).
* நிகரகுவாவின் இயற்கைப் பகுதிகள்: பசிபிக் தாழ்நிலங்கள், மத்திய மலைப்பகுதிகள் மற்றும் கரீபியன் தாழ்நிலங்கள் ஆகும்.
* பசிபிக் தாழ்நிலங்கள்: நாட்டின் மேற்கில், இந்த தாழ்நிலங்கள் பரந்த, வெப்பமான, வளமான சமவெளியைக் கொண்டிருக்கின்றன.
* இங்குதான் நிகரகுவா ஏரி அமைந்துள்ளது. இது மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.
* இங்கு தான் போசாவாஸ் உயிர்க்கோளக் காப்பகம் அமைத்துள்ளது. இது பிரேசிலில் உள்ள அமேசானுக்குப் பிறகு மேற்கு அரைக்கோளத்தில் இரண்டாவது பெரிய மழைக்காடு ஆகும்.
* நிகரகுவாவின் அய்ந்தில் ஒரு பங்கு தேசியப் பூங்காக்கள், இயற்கை இருப்புகள், உயிரியல் இருப்புகள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
*வடக்கு நிகரகுவா காபி, கால்நடைகள், பால் பொருள்கள், காய்கறிகள், மரம், தங்கம் மற்றும் பூக்களை உற்பத்தி செய்யும் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். அதன் பரந்த காடுகளும், ஆறுகளும், புவியியல் சூழலும் சுற்றுலாவிற்கு ஏற்றது.
* மத்திய (ஹைலேண்ட்ஸ்) மேட்டு நிலங்கள் என்பது நிகரகுவா ஏரிக்கும் கரீபியன் தீவுக்கும் இடைப்பட்ட வடக்கில், மக்கள்தொகை குறைவாகவும் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த பகுதியாகும்.
* கரீபியன் தாழ்நிலங்கள் பெரிய மழைக்காடு பகுதி பல பெரிய ஆறுகளால் பாசனம் பெறுகிறது. மக்கள் தொகை குறைவாக உள்ளது. இப்பகுதி, நாட்டின் 57% நிலப்பரப்பையும் அதன் கனிம வளங்களின் பெரும்பகுதியையும் கொண்டுள்ளது. இது பெரிதும் சுரண்டப்பட்டது, ரியோ கோகோ மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய நதி; இது ஹோண்டுராஸ் நாட்டின் எல்லையை உருவாக்குகிறது. இதன் காலநிலைகள் மிக மோசமான சூழலில் அமைந்தவை. இயற்கையான பேரழிவுகள் ஏராளம் ஏற்படுகின்றன.
* கடற்கரைப் பகுதிகள் கடுமையான வெப்பப் புயல்களால் தாக்கப்படுகின்றன. மத்தியப் பகுதி எரிமலை மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் அடர் மழையும் சூறாவளிகளும் கடும் சவாலாக அமைந்துள்ளன.
உயிரினங்கள்
* சுறாக்கள் வாழும் ஒரே நன்னீர் ஏரி மனகுவா ஏரி. காளை சுறாக்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ரியோ சான் ஜுவான் ஆற்றின் வழியாக ஏரிக்குள் நுழைகின்றன. சுறாக்கள் புதிய நீரைப் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் அவை இப்போது ஏரியில் அரிதாகவே காணப்படுகின்றன.
* நிகரகுவாவில் பல்வேறு வகையான விலங்கினங்கள் காணப்படுகின்றன. கரீபியன் கடற்கரையின் தொலைதூரத் தீவுகளில் உள்ள பவளப் பாறைகளில் உள்ள கயோஸ் மிஸ்கிடோஸ் உயிரியல் காப்பகத்தில் மானடீசும் கடல் ஆமைகளும் நீந்துகின்றன.
* நாட்டில் 70-க்கும் மேற்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன, அவை பல ஆபத்தான உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. போசாவாஸ் உயிர்க்கோளக் காப்பகத்தில் 12 வகையான விஷப் பாம்புகளைப் பாதுகாக்கும் மேகக் காடுகள் உள்ளன.
* நிகரகுவாவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்: காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் நீர் மாசுபாடு.
வரலாற்றுச் சுவடுகள்:
* இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாயர்கள் குடியிருந்து வந்துள்ளனர்.
* கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் 1502-ல் இங்கு வந்தார்.
* ஸ்பானியப் புத்தாய்வுப் பயணிகள் அதன் பின்னர் நிகராகுவா ஏரியைக் கண்டறிந்தனர்.
* 1821 வரை, நிகராகுவா ஸ்பெயினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. அவ்வாண்டில் அதன் சுதந்திரம் பிரகடனம் ஆயிற்று. 1938 வரை மெக்சிகோவின் பகுதியாகவும், பின்னர் மத்திய அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாகாணமாகவும் இருந்தது.
* 1938-இல் முழுச் சுதந்திரம் அடைந்தது. அமெரிக்கா, அங்கே படைகளை நிறுத்தி வைத்ததன் மூலம் அரசியல் ரீதியாகத் தலையிட்டது (1912-33). சர்வாதிகார சோமோசா குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டு வந்த (1936-79) நிகராகுவாவைப் பொதுமக்கள் புரட்சிக்குப் பின் சான்டினிஸ்டா கட்சி கைப்பற்றியது. அவ்வாட்சியை, 1981 முதல் அமெரிக்காவின் ஆதரவோடு கான்ட்ரா என்ற ஆயுதமேந்திய கிளர்ச்சிக்காரர்கள் எதிர்த்துவந்தனர். சாண்டி நிஸ்டா அரசு, பொருளாதாரத்தின் பல துறைகளை தேசியமயமாக்கியது.
* ஆனால் 1990இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தது. புதிய கூட்டணி அரசு, பல பொருளாதாரச் செயல்பாடுகளைத் தனியாருக்குக் கொடுத்தது
* நிகரகுவா வேளாண்மை, இலகுரகத் தொழில்கள், வணிகம் ஆகியவற்றின் அடிப்படை யில் அமைந்த, வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டது.
மக்களும் பண்பாடும்
* ஆரம்பகாலக் குடியேறிகள் மெக்ஸி கோவின் மாயாவும் ஆஸ்டெக் மக்களுடனும் தொடர்புடையவர்களாக இருக்கலாம். ஆரம்பகால மக்களின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்று நிக்காராவ்.
* ஆனால் பெரும்பாலான வெளியாட்கள் மக்களை நிகரகுவான்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
* பெரும்பாலான மக்கள் மெஸ்டிசோஸ் அல்லது பூர்வீக மற்றும் ஸ்பானிஷ் இணைந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்கள் கருப்பின அடிமைகளை நிகரகுவாவிற்கு அழைத்து வந்தனர். பல நிகரகுவான்கள் அடிமைகளின் வழித்தோன்றல்கள்.
* அதிகாரப்பூர்வ மொழிகள்: ஸ்பானிஷ், ஆங்கிலம்.
* அங்கீகரிக்கப்பட்ட வட்டார மொழிகளாக மிஸ்கிடோ, சுமோ உள்ளிட்ட மொழிகள் உள்ளன.
அரசமைப்பு முறை:
* ஓரவைச் சட்டமன்றம் கொண்ட குடியரசு.
* குடியரசுத் தலைவரே மாநிலத்துக்கும் அரசுக்கும் தலைவராக இருக்கிறார்.
* குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அய்ந்தாண்டு காலத்திற்கு மக்கள் வாக்கு மூலம் ஒரே சீட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
* நிகரகுவாவின் அதிபராக 2006இல் டேனியல் ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொருளாதாரம்:
* நிகரகுவா மத்திய அமெரிக்காவில் ஏழ்மையான நாடாகும், மேலும் குறைந்த வேலைவாய்ப்பும் வறுமையும் பரவலாக உள்ளது.
* அவர்களின் முக்கியப் பயிர்கள், காபி, வாழை, கரும்பு, பருத்தி, அரிசி, சோளம், எள்.
* நிகரகுவாவின் மிக முக்கியமான ஏற்றுமதிகளில் ஒன்று காபி. இது ஜினோடேகா, எஸ்டெலி, நியூவா செகோவியா, மாதகல்பா, மாட்ரிஸ் ஆகிய இடங்களில் வளர்க்கப்படுகிறது, மேலும் வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா வழியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெஸ்லே மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற பல காபி நிறுவனங்கள் நிகரகுவான் காபியை வாங்குகின்றன.
* அட்லாண்டிக் பெருங்கடலைப் பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் கால்வாயை நிகரகுவா நிர்மாணிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது. இது நிகரகுவாவிற்கு “பொருளாதாரச் சுதந்திரத்தை” வழங்கும் என்று குடியரசுத் தலைவர் டேனியல் ஒர்டேகா கூறியுள்ளார்.
* விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தக் கால்வாய் நாட்டிற்குப் பயனளிக்கும். அதன் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 8% ஆக அதிகரிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.