சிறார் கதை : தவறு
இனியன்
இந்த ஆண்டில் பள்ளி திறந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஆறாம் வகுப்பின் அறையில் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்ததால் அனைத்துக் குழந்தை களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டும், சிரித்து விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
அப்போதுதான் தமிழழகி வகுப்பறை வாசலில் தன் அப்பாவுடன் வந்து நின்றாள். அதுவரை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்த குழந்தைகள் அனைவரும் சில வினாடிகள் அமைதியானார்கள். அன்றுதான் அவள் முதல்முறையாக வகுப்புக்கு வருவதால் தமிழழகியின் அப்பா, வகுப்பறையின் வாசல்வரை வந்துவிட்டுச் சென்றார்.
வகுப்புக்குள் நுழைந்ததும் அனைவரையும் பார்த்து மென்மையாகச் சிரித்துவிட்டு “என் பெயர் தமிழழகி” எனச் சொல்லித் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். உட்கார இடம் தேடியபோது, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த பர்வீன் பாத்திமா பக்கத்தில் இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார்ந்தாள். சிறிது நேரத்திலேயே இருவரும் நன்றாகப் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
வகுப்புகள் தொடங்கப் போவதற்கான முதல் மணி அடித்ததும் அவசரம் அவசரமாகத் தன் தலையில் போட்டிருந்த முக்காடு துணியைக் கழட்டிச் சுருட்டிப் பைக்குள் வைத்தாள் பர்வீன் பாத்திமா.
“ஏன் பர்வீன், இப்படிச் செய்யற? அது அழகாகத்தானே இருந்தது” எனக் கேட்டாள் தமிழழகி.
“மூன்று நாளுக்கு முன்னமே தமிழ் மிஸ் கிளாஸ்ல முக்காடு போட்டுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு திட்டினாங்க. முதல் பீரியட் வேற அவங்களோடதுதான். அதான் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன்” என்றாள் பர்வீன் பாத்திமா.
இதைக் கேட்டதும், ‘மிஸ் ஏன் அப்படிச் சொல்லணும்’ என்ற கேள்வி எழுந்தது. அன்று முழுவதும் வகுப்புகள், விளையாட்டுகள் என இருந்தாலும் அந்தக் கேள்வி குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தாள் தமிழழகி.
கடைசி மணி அடித்ததும் அனைவரும் வகுப்பை விட்டு வெளியே ஓடத்தொடங்கினர். ஆனால், பர்வீன் பாத்திமா மட்டும் பொறுமையாகப் பையில் வைத்திருந்த துணியை எடுத்து, தலையில் மாட்டிக்கொண்டிருந்தாள். அவள் வரும்வரை தமிழழகியும் காத்திருக்க, இருவரும் இணைந்தே வெளியே வந்தனர்.
பர்வீன் பாத்திமா தினமும் ஆட்டோவில் வருவதால் ஆட்டோ நிற்கும் இடத்திற்குச் சென்றாள். தமிழழகியை அழைத்துச்செல்ல அவளது அம்மா தென்றல் காரில் வந்திருந்தார்.
முன்பக்க இருக்கையில் தமிழழகி ஏறி உட்கார்ந்ததும் காரை ஓட்டத் தொடங்கினார் தென்றல். “முதல் நாள் பள்ளியின் வகுப்புகள் எப்படி இருந்தது?” – அம்மா கேட்டார்.
பர்வீன் பாத்திமா பக்கத்தில் போய் உட்கார்ந்ததையும், அவள் தலையில் முக்காடு மாதிரி போட்டிருந்ததையும், முதல் மணி அடித்து மிஸ் உள்ளே வரும் முன்பே அந்த முக்காடைக் கழட்டி பையில் வைத்துக் கொண்டதையும், பிறகு கடைசி மணி அடித்ததும் எடுத்து மாட்டிக்கொண்டதையும் வரிசையாகச் சொல்லிவிட்டு,
“முக்காடு போட்டிருந்தா, ஏம்மா மிஸ் அதைக் கழட்டச் சொல்லணும்? அது புரியவே இல்லைம்மா. அன்னிக்கு ஒரு நாள், நாம எல்லாரும் உட்கார்ந்து நியூஸ் சேனல் பார்த்துட்டு இருந்தப்பக்கூட நீங்களும் அப்பாவும் ஏதோ பெயர் சொல்லிப் பேசிகிட்டு இருந்தீங்களே. அந்தப் பெயர் என்னம்மா?” எனக் கேட்டாள் தமிழழகி.
“அதோட பெயர் ஹிஜாப். அப்பறம், அதை உங்க மிஸ் கழற்றச் சொன்னதும் ரொம்பத் தப்பு”
“தப்புன்னு ஏன் சொல்றீங்கம்மா?”
“நீ ஸ்கூலுக்குப் போகும் போது, உன் நெத்தியில் தாத்தா திருநீறு வச்சி விட்டார்ல, அதை உங்க மிஸ் அழிக்கச் சொன்னாங்களா?”
“இல்லம்மா, மதியம் விளையாடும் போது வியர்வை பட்டு அதுவாதான் அழிஞ்சி போச்சி.”
“உனக்கு எப்படி, தாத்தா திருநீறுபூசி அனுப்புறாங்களோ, அது மாதிரிதான் பர்வீன் பாத்திமா வீட்டுலேயும் ஹிஜாப் மாட்டி அனுப்பியிருப்பாங்க.”
”அப்படியாம்மா?”
“ஆமா, உனக்கு திருநீறு வச்சிக்க விருப்பம் இருக்கா என்ன? தாத்தா வச்சிவிடுறாருன்னுதானே வச்சிட்டுப் போறே? அதேபோல அவளுக்கும் விருப்பம் இருக்கா- இல்லையான்னு கேட்காமல்கூட அவங்க வீட்டில் மாட்டி அனுப்பியிருக்கலாம். உன் கிளாஸ்ல கிட்டதட்ட மற்ற எல்லாருமே நெத்தியில் திருநீறு, குங்குமம், செந்தூரம்ன்னு வச்சிட்டுதானே வந்திருப்பாங்க? அவங்க எல்லாருமே விருப்பத்துடன்தான் வைத்திருப்பாங்கன்னு சொல்ல முடியாதுதானே? ஏன்னா எல்லார் வீட்டிலேயும் குழந்தைகளைக் கேட்டு இது போன்ற செய்கைகளை யாருமே செய்வதில்லை, இல்லையா? அப்படியிருக்கும்போது உங்களை எல்லாம் எதுவும் சொல்லாமல் அவளுக்கு மட்டும் ஏன் சொல்லணும்?”
“அது சரி, ஹிஜாப்புன்னா என்னம்மா?”
“இஸ்லாமியர்கள் தலையில் போடும் முக்காடு துணியைத்தான் ஹிஜாப்புன்னு சொல்வாங்க. அதை பெண்களும், பெண் குழந்தைகளும் மட்டும்தான் தலையில் மாட்டணும்ன்னு சொல்வாங்க. ஆனா, அதை மாட்டிக்கவா வேண்டாமா என்பதை அந்தப் பெண்கள்தான் முடிவெடுக்கணும். அந்த முடிவை அவர்களை எடுக்கவிடாமல் கட்டாயப்படுத்தி தலையில் மாட்டித்தான் ஆகணும்ன்னு வீட்டில் சொல்லி அனுப்புவாங்க. உனக்கு எப்படி தாத்தா திருநீறு வச்சி அனுப்புறாரோ அதுபோலத்தான் இதுவும். அதனால்தான் அவங்க மாட்டிகிட்டே இருப்பாங்க.” என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்த போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய வண்டியை நிறுத்தினார்.
“ஓஹோ! அப்ப ஏம்மா, டீச்சர் அதக் கழற்றச் சொன்னாங்க?” என்று தமிழழகி கேட்டாள். அதற்குள், சிக்னலில் பச்சை விளக்கு எரிய, காரை ஓட்டிக்கொண்டே பதில் சொன்னார் அம்மா.
”ஸ்கூல்ல மத அடையாளங்களோடு இருக்க கூடாதுன்னு சொல்லி கழற்றச் சொல்லியிருப்பாங்க. ஆனா, உங்கள் நெற்றியில் இருக்கும் எதுவுமே உங்க தமிழ் மிஸ்க்கு மத அடையாளமாகத் தெரிந்தும் இருக்காது. உணர்ந்தும் இருக்க மாட்டாங்க”
“மத அடையாளம்ன்னா என்னம்மா?”
“நம்ம நாட்டில் நிறைய மதங்கள் இருக்குல, அதுல ஒவ்வொரு மதத்திலும் பல பேர் இருக்காங்க. அவங்க அவங்களோட மதத்தை அடையாளப்படுத்திக்க உரிமை கொடுக்கப்பட்டு இருக்கு. ஏன்னா நம்ம நாடு, மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அவற்றை மதிக்க வேண்டியது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை. யாரும் யாரையும் நீங்கள் ஏன் இதை வைத்துள்ளீர்கள், இதையேன் மாட்டி இருக்கீங்கன்னு கேள்வி கேட்கக்கூடாது. அதையெல்லாம் நீக்குங்கன்னு சொல்லவும் கூடாது.”
“ஒரு வேளை எங்க தமிழ் மிஸ் மாதிரி அதையெல்லாம் நீக்குங்கன்னு சொன்னா நாம என்னம்9மா செய்யணும்?”
“ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு அவங்க சார்பா நாமதான் கேள்வி கேட்கணும்.”
“அப்படிக் கேள்வி கேட்டா திட்டமாட்டாங் களாம்மா?”
“முதலில் திட்டத்தான் செய்வாங்க. ஆனா, அவங்க திட்டாம இருக்கணும்ன்னா, நீ உங்க கிளாஸ் மெட்ஸ்கிட்டேயும் பேசணும்”
“என்ன பேசணும்?”
“நம்ம வீடுகளில் எப்படி பெரியவங்கள் திருநீறு, குங்குமம்ன்னு வச்சி அனுப்புறாங்களோ, அதுபோலதான் பர்வீன் பாத்திமா வீட்டுலேயும் ஹிஜாப் போட்டு அனுப்புறாங்க அவ்வளவுதான். அதுக்காக அவளை மட்டும் கழட்டச் சொல்றது தப்பு. அவள் ஹிஜாப் மாட்டியிருகிறது தப்புன்னா நாம நெத்தியில் வச்சியிருகிறதும் தப்புதானே”ன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிப் புரிய வைக்கணும். பிறகு தமிழ் மிஸ்கிட்டே எல்லாரும் சேர்ந்து கேள்வி கேளுங்க. அப்படிச் செய்யும் போது கட்டாயம் புரிஞ்சிக்குவாங்க. அவங்க செய்யுறது தப்புன்னு உணர்ந்துக்குவாங்க.”
”சரிம்மா அப்படியே செய்யுறேன்” என்று தமிழழகி சொல்லி முடிக்கும்போது காரை வீட்டு வாசலில் நிறுத்தினார் தென்றல். இறங்கும்போது தமிழழகிக்கு முத்தம் வைத்துக் கொஞ்ச, மகிழ்ச்சியாக வீட்டுக்குள் ஓடினாள்.