கண்டுபிடிப்பு
த.மரகதமணி
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. ஒன்றிய அரசும் 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்துகள் குறித்து வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சிகரமாக உள்ளது.
சாலைகளில் விபத்து என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏராளமான மக்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அரசும் சாலை விபத்துகளைத் தடுக்க பல எக்சரிக்கைகளைச் செய்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறது.
சாலை விபத்துகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிகப்பெரிய காரணம் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றொரு காரணம் தூக்கமின்மையால். வாகனம் ஓட்டும்போது தன்னை அறியாமல் தூங்கிவிடுவது.
இவ்வாறு வாகனம் ஓட்டும்போது தூங்கிவிடாமல் இருக்க, கண் இமையை மூடினால் உடனடியாக அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியைக் கண்டுபிடித்துள்ளார், தூத்துக்குடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர்.
அந்த மாணவர் பெயர் உவைஷ். தூத்துக்குடி மாவட்டம் சாந்தி நகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சம்சுதீன். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உவைஷ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். தூக்கத்தினால் 40 விழுக்காடு வாகன விபத்துகள் நடைபெறுகின்றன.. எனவே, இவற்றைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ‘ஆன்ட்டி ஸ்லீப் கிளாஸ்’ என்னும் கண்ணாடியைக் கண்டுபிடித்துள்ளார். இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகக்குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவில், ‘இன்ஃப்ரா ரெட் ஃபிரீகுவன்சி சென்சார்’, ‘பேட்டரி’, கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்தி உவைஷ் கண்டுபிடித்துள்ள இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டும்போது தூக்கம் காரணமாக கண் இமையை ஒருவர் மூடினால் அதில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பான் (Alarm) அவர்களை தூக்கத்திலிருந்து விடுபடச் செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடும்.
இந்தக் கண்ணாடி, வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, இரவு நேரப் பணியில் ஈடுபடுவோர், இரவு நேரக் காவலாளிகள் ஆகியோருக்கும் உதவக்கூடியது என்கிறார் மாணவர் உவைஷ்.
விலை மதிப்பில்லா உயிரை விபத்தில் இருந்து காக்க அறிவைப் பயன்படுத்திச், சிந்தித்து, இப்படி ஒரு கண்ணாடிக் கருவியைக் கண்டுபிடித்த மாணவரை அனைவரும் வாழ்த்துவோமா பிஞ்சுகளே!
நீங்களும் இதுபோல் அறிவியல் சாதனைகள் புரிய வாழ்த்துகள்!