ட்டி-சர்-நிர்-தோர்-கர்
விழியன்
ட்டி பறந்துகொண்டு இருந்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பிரம்பினைப் பிடித்துக்கொண்டு பறந்தான் ட்டி. அந்தப் பிரம்பு நான்கு அடி நீளம் இருந்தது. குட்டிப் பையனைவிட உயரமாக இருந்தது. அந்தக் குட்டிப் பையனின் பெயர் ட்டி. ட்டி ட்டி ட்டி என அம்மா கொஞ்சிக்கொண்டே சோறு ஊட்டுவார். ட்டிக்கு மீன் குழம்பு என்றால் ரொம்பவும் பிடிக்கும். பால்கோவாவைக் கிலோ கணக்கில் சாப்பிடுவான். அதெல்லாம் விடுங்க. இப்போது பிரச்சனையே பிரம்புதான். நாளைக்கு ட்டியை பள்ளியில் சேர்க்க இருக்கின்றார்கள். கூடவே இந்தப் பிரம்பையும் கொடுக்கப் போறாங்க. ‘படிப்பு வரலைன்னா இதை வெச்சு வெளுத்திடுங்க’ன்னு அவங்க அப்பா சொல்லப்போகிறாராம். ட்டி அந்த பிரம்பைத் தன் பக்கத்தில் நிற்க வைத்துப் பார்த்தான். அவன் தலைக்கு மேலே கொஞ்சம் பெரியதாக இருந்தது. அவன் அப்பா ஏன் அப்படிச் சொன்னார் என அவனுக்கு புரியவில்லை. படிப்புன்னா அடித்துச் சொல்லித் தருவதோ என நினைத் தான். பள்ளிக்குப் போகலாமா வேண்டாமா என யோசித்தான். குடுகுடுவென பாட்டி வீட்டிற்கு ஓடிவிடலாமா என்று யோசித்தான்.
‘நாம ஏன் ஓடணும்? இந்த குச்சி தானே பிரச்சனை இதனை ஓடவிடுவோம் என நினைத்தான் ட்டி. பிரம்புக் குச்சியைப் பிடித்தான். யாரும் கவனிக்கவில்லை. அதனைத் தூக்கிக்கொண்டு ஓடினான். பிரம்பினை இரண்டு கைகளில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான். ஒரு பள்ளத்தைத் தாண்டும்போது கீழே விழ இருந்தான். கைகளில் பிரம்புக்குச்சி இருந்ததால் கொஞ்சம் தடுமாறினான். ஆனால், மாறாகக் கீழே விழுவதற்குப் பதில் அவன் பறந்தான். அப்படித்தான் இப்போது ட்டி பறந்துகொண்டு இருக்கின்றான். தொம் மென குச்சி கீழே விழுந்தது. ட்டிக்கு அடிபட வில்லை. அவன் விழுந்தது வைக்கோல் மீது. எப்படி இங்கே வந்தோம் என யோசித்தான். ஆனால், அதற்கு முன்னால் அவனுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவன் வீட்டில் இருந்த பிரம்பு போல அங்கே ஆயிரம் பிரம்புக் குச்சிகள் இருந்தன. ட்டிக்குத் தெரிந்த பெரிய எண் பத்துதான். ‘ஆ’ என்று வாயைப் பிளந்தான்.
“ட்டி பயப்படாதே! நாங்கள் உன் நண்பர்கள்தான்”
“என்னை அடிக்கப்போறீங்க… அப்புறம் என்ன நண்பன்னு குண்பன்னு சொல்லிகிட்டு” என்றான் வெடுக்கென.
“எங்களுக்கு என்ன ஆசையா – உன்னையும் உன்னைப் போன்ற குழந்தை களையும் அடிக்க?”
பிரம்புகள் சார்பாக ஒரு பளபள பிரம்பு பேசியது.
“அதெல்லாம் இருக்கட்டும், என்னை ஏன் இங்கே தூக்கிட்டு வந்தீங்க?” என்றான் கோபமாக ட்டி.
அங்கே மவுனம் நிலவியது. “உனக்கு ஒரு வாய்ப்புத் தரலாம்னு இருக்கோம். உன்னை இந்தப் பிரம்பை கையில் வைத்து கையை ஓங்கினால் என்ன ஆகும்னு நீ முடிவு செய்யலாம். ஓங்கும் போது ‘சர்’ என்று நீ சொன்னால் அடிக்க ஓங்குபவர்கள் உடனே அங்கே இருந்து மறைந்து சர்ரென இங்கே வந்து விழுவார்கள். திரும்ப நடந்து செல்லவேண்டும். இது காட்டிற்குள் இருக்கும் இடம். அடுத்ததாக ஓங்கும்போது ‘நிர்’ என்று சொன்னால் ஓங்கியவர் அப்படியே கால்மணி நேரம் சிலையாக நிற்பார். சுற்றி நடப்பது எல்லாம் தெரியும்; ஆனால் அசைய முடியாது. அடுத்ததாக ஓங்கும்போது தோர் என்று சொன்னால் ஓங்கியவர் ஓர் ஆண்டில் எத்தனை நாள்கள் இருக்கின்றதோ அத்தனை உக்கி போட்டுக்கொண்டே இருப்பார். யார் வந்து நிறுத்தினாலும் நிறுத்தமாட்டார். ஓங்கும்போது ‘கர்’ என்று சொன்னால் அதன் பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் மிகவும் கனிவாகப் பேசுவார்கள். எந்தக் கடுமையான வார்த்தையும் அவர்கள் வாயிலிருந்து வராது” என்று விளக்கியது ஒரு பிரம்பு.
இது நல்லா இருக்கே என நினைத்தான் ட்டி. மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தான்.
சர் – சர்ரெனமறைந்து போய் வேறிடத்தில் விழுவார்கள்.
நிர் – சிலையாக நின்றிடுவார்கள்.
தோர் – உக்கி போடுவார்கள்.
கர் – கனிவான வார்த்தைகள்.
எந்த இடத்திலிருந்து பறக்க ஆரம்பித்தானோ அங்கேயே வந்து விழுந்தான். பிரம்பினைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றான். வீட்டில் அனைவருக்கும் குழப்பம் – என்னடா இது, இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறானே என்று.
மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பள்ளியில் சேர்க்கத் தலைமை ஆசிரியர் வரவேண்டும். அவர் ஒரு மணி நேரத்தில் வருவதாகக் கூறினார்கள். ட்டி பள்ளிக்குள் மெல்ல நடந்தான். மூன்றாம் வகுப்பு தொடங்க இருந்தது. ஆசிரியரின் மேசை மீது ஒரு பிரம்பும் இருந்தது. வகுப்பில் ஒரு மாணவனை அழைத்தார். கை நீட்டச் சொன்னார். பிரம்பினை ஓங்கினார். அறைக்கு வெளியே இருந்த ட்டி, ‘சர்’ என்று சத்தமாகக் கத்தினான். நிஜமாகவே அந்தக் கண்ணாடி அணிந்த ஆசிரியர் சர்…ரென மறைந்து அங்கே அடுத்த நொடி காணவில்லை. முதல் பரிசோதனை வெற்றி.
அடுத்த வகுப்பிற்குச் சென்றான். அங்கும் ‘யாரெல்லாம் வீட்டுப் பாடம் செய்யல’ என்று சிலரை நிற்க வைத்திருந்தார். ஒரு குட்டி அக்காவின் கையை நீட்டச் சொன்னார் ஆசிரியர். அவர் பிரம்பை ஓங்கும்போது ‘நிர்’ என்று கத்தினான் ட்டி. அவ்வளவுதான் சிலையாக நின்றார் ஆசிரியர். ‘ஏ ஏ ஏ என்று’ ஒரே சத்தம். அவரை அசைத்துப் பார்க்கின்றார்கள். ஓங்கிய கை இறங்கவே இல்லை. ஆனால், சுற்றி நடப்பது எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்தது. பக்கத்து அறையிலிருந்து ஆசிரியர் ஒருவர் குடுகுடுவென வந்தார். “என்ன சத்தம் என்ன சத்தம்” என்று கத்தினார். அவர் கையிலும் பிரம்பு இருந்தது. ‘தோர்’ என்று கத்தினான் ட்டி. உக்கி (தோப்புக்கரணம்) போட்டார் போட்டார் போட்டுக்கொண்டே இருந்தார். பள்ளியே களேபரமாக இருந்தது.
என்ன நடக்கின்றது என்று யாருக்கும் புரியவில்லை. ட்டியின் அப்பாவும் அம்மாவும் அவனை மறுநாள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கிளம்பிவிட்டனர். ஊரில் இதே பேச்சுதான். ‘எப்படி இது நடந்தது’ என்று குழப்பம். ட்டி சிரித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தான். ‘சர்,’ ‘நிர்’ என்று சொல்லி இருந்தால் என்னவாகி இருக்கும்? ‘நிர்,’ ‘தோர்’ன்னு சொன்னா என்னவாகி இருக்கும் என யோசித்துச் சிரித்தான்.
அன்று இரவு ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அப்போது தட் தட் தட் என கதவு தட்டும் சத்தம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கேட்கவில்லை. ட்டிக்கு மட்டும் கேட்டது. வெளியே வந்து பார்த்தால் அந்தப் பிரம்புகள் எல்லாம் நின்றுகொண்டு இருந்தன.
“ட்டி ஒன்றினைச் சொல்ல மறந்துட்டோம். இந்த மாதிரி வாய்ப்பு உனக்கு இருக்குன்னு யாரிடமும் நீ சொல்லக்கூடாது”
“அச்சோ, சாயிந்திரம்தான் எல்லார் கிட்டையும் சொன்னேனே”
மறுநாள் காலையே வைக்கோலில் பசங்க தொம் தொம்மென விழுந்தனர். ட்டிக்கு சொன்ன வாய்ப்புகளைப் பெற்றனர். ஊரில் உள்ள எல்லா குழந்தைகளும் அந்த வாய்ப்பினைப் பெற்றனர்.
ஆனால்…
ஆனால்..
எல்லோரும் பயன்படுத்தியது ‘கர்’ரினை மட்டுமே.