சிறுவர் கதை : குட்டியானையின் சுதந்திரம்!
வசீகரன்
அந்தக் காட்டில் ஒரு யானைக் கூட்டம் இருந்தது. எங்கு சென்றாலும் அந்த யானைகள் ஒற்றுமையாக, இணைந்து செல்லும். ஒரே நேர்கோடு பிடித்த மாதிரி நடந்து சென்றுவிட்டு, பின் நெடுந்தொலைவிலிருந்து அதே பாதையில் வழிமாறாமல் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்பவை.
அந்த யானைக் கூட்டத்தில் புதிதாய்ப் பிறந்த இரண்டு குட்டி யானைகள் இருந்தன. ஒரு குட்டியின் பெயர் வம்பி. இன்னொரு குட்டியின் பெயர் சம்பி.
சம்பி, வம்பி இரண்டுமே அந்த யானைக் கூட்டத்திலுள்ள அத்தனை யானைகளுக்கும் ரொம்ப செல்லம். எனவே, இரண்டு குட்டி யானைகளும் மகிழ்வோடு வளர்ந்து வந்தன.
ஒருநாள் சம்பி சொன்னது. “டேய்… வம்பி. இந்த அம்மாமார்கள் தினமும் ஒரே வழியில் நடந்து சொல்கிறார்களடா. எனக்கு ரொம்பவும் வெறுப் படிக்கிறது. வா… நாம ரெண்டு பேரும் தனியாக இந்த வனத்தை ஒரு வலம் வந்துவிடலாம்’’ என்றது.
வம்பி அதிர்ந்து போனது. “சம்பி… உனக்கென்ன மூளை பிசகிவிட்டதா? நாம் நம் கூட்டத்தை விட்டு விலகிச் சென்றால், பெரிய பெரிய ஆபத்துகள் எல்லாம் இருக்கின்றன. உயிருக்கே உலை ஆகிவிடும். எனவே, அந்த ஆசையை விட்டொழி!’’ என்றது.
சம்பி சிரித்தது.
“நீ சரியான பயந்தாங்கொள்ளி வம்பி. இந்தக் காட்டில் உள்ள விலங்குகளில் எல்லாம் நமக்குத்தான் பலம் அதிகம் தெரிந்து கொள். நான் பயப்பட மாட்டேன். நீ வந்தால் வா, வராவிட்டால் போ’’ என்று கூறிவிட்டுத் திருட்டுத்தனமாக யானைக் கூட்டத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டது.
அதைக் கண்டதும் வம்பிக்கு மனம் பொறுக்கவில்லை. வம்பியும் சம்பியைப் பின் தொடர்ந்தது.
தனியே சென்ற குட்டியானை சம்பி, மிக்க மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தது. “ஹையா… ஜாலி!’’ எனக் குதியாட்டம் போட்டது. அதைக் கண்ட முயல்கள், ஆமைகள் எல்லாம் அஞ்சி ஓடின. அதைக் கண்டதும் சம்பிக்கு மேலும் குதூகலமாகிவிட்டது.
பலா மரத்தைக் கண்டதும் சம்பிக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம், வேர்ப் பலாவை கடித்துச் சுவைத்தது. அணில்களும், குருவிகளும் சம்பிக்கு கிச்… கிச்… சொல்லின. அப்போது அங்கே வந்த குட்டி ஒட்டகம், “குட்டி யானையே உன் கூட்டம் எங்கே? நீ ஏன் தனியே வந்தாய்? திரும்பிப் போய்விடு, ஆபத்து’’ என்றது.
சம்பி சிரித்தபடி “ஆபத்தெல்லாம் எனக்கு பலாச்சுளை மாதிரி’’ என்றது. அப்படியே துள்ளிக் குதித்தபடி ஓடியது. தவறிப்போய் ஒரு சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது.
குட்டி ஒட்டகத்திடம் உதவி கேட்டது.
“என் பேச்சைக் கேட்காமல் சிரித்தாயே. இப்போது பார் சேற்றுக் குழியில் விழுந்துவிட்டாய். இதில் இருந்து மீண்டு வெளியில் வர உன்னால் முடியுமா? நேரம் செல்லச் செல்ல குழிக்குள் அமிழ்ந்து போவாய். என்னால் தனியாக உன்னைக் காப்பாற்ற முடியாது. யாராவது வருகிறார்களா பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.
அப்போது ஒரு சிங்கம் கர்ஜித்தபடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “அய்யோ ஆபத்து’’ எனக் கத்தியபடி ஓடிவிட்டது.
சிங்கம் சேற்றுக் குழியில் விழுந்துகிடந்த குட்டியானை சம்பியைக் கண்டது. “ஆகா… யானைக்கறி தின்று ரொம்ப நாளாகிவிட்டதே’’ என நினைத்தபடி நாக்கால் உதட்டைத் தடவிக்கொண்டது.
சேற்றுக்கு அருகே வந்து கம்பீரமாக அமர்ந்தது சிங்கம். காலை நீட்டிப் பார்த்தது. குட்டியானை அதற்கு எட்டவில்லை. “என்ன யானைத்தம்பி, நீரில் குளிக்கலாம். ஆனால், சேற்றில் குளிக்கலாமா? வா வெளியே! எனக்கு ரொம்ப பசியாக இருக்கிறது. என் பசியை ஆற்றிய புண்ணியம் உனக்குக் கிடைக்கும்’’ என்றது.
ஒருபுறம் சேற்றுக் குழி உள்ளே இழுக்கிறது. இன்னொரு புறம் நாக்கை ‘உச்’ கொட்டியபடி சிங்கம் பசிவெறியுடன் அமர்ந்திருக்கிறது. சம்பி நடுநடுங்கிக் கொண்டிருந்தது. வம்பியின் பேச்சைக் கேட்காமல் போனோமே என்று முதல்முறையாக வருந்தியது.
‘நம் கூட்டத்தை நாம் பிரிந்தது எவ்வளவு பெரிய தவறு. சுதந்திரம் என்ற பெயரில் முட்டாளாகிப் போனேனே! அம்மாமார்கள் எல்லாம் என்னைக் காணாமல் தவிப்பார்களே! அவர்கள் பாசம், அரவணைப்பு, கண்டிப்பு, வழிகாட்டுதல் எல்லாம் எத்தனை அவசியமானது என்பது இப்போதுதானே புரிகிறது? என்னுடைய, தன்திமிரால் அழிவைத் தேடிக் கொண்டேனே! இப்படியே இருந்தால் இந்தச் சேற்றிலேயே மூழ்கிச் சாகவேண்டியதுதான். வெளியேறித் தப்பித்தாலும் சிங்கத்தின் வயிற்றுக்குள்தான் போகவேண்டும். என் நிலைமை இப்படியாகிவிட்டதே’ என வருந்தியது சம்பி.
அப்போது யானைக் கூட்டத்தின் வருகையை அதன் பிளிறல்கள் உணர்த்தின. கூட்டமாக யானைகள் படைபோல் வருவதைப் பார்த்துவிட்டு, சிங்கம் எழுந்து ஓடிவிட்டது.
சேற்றுக் குழியில் கிடந்த சம்பியைக் காப்பாற்ற யானைகள் கை கோத்தன. மரக்கிளைகளை முறித்து சேற்றின்மீது போட்டன. நிறைய கிளைகளை முறித்துப்போட்டதும் சேற்றின் மேற்பகுதி இறுக்கமாகிவிட்டது. அதன் வழியே சம்பியை மீட்டன அம்மா யானைகள்.
“ஏன் இப்படிச் செய்தாய் சம்பி? நம் கூட்டமே நமக்குப் பலம். உன்னைப் பின்தொடர்ந்து வந்து வம்பி உனக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தெரிந்துகொண்டு எங்களிடம் வந்து சொன்னதால்தான் உன்னைக் காப்பாற்ற முடிந்தது. தானாக முடிவெடுக்கும் வயது இன்னும் உனக்கு வரவில்லை, புரிந்துகொள்’’ என்றது அம்மா யானை.
“இல்லம்மா – இனி நான் உங்க சொல் பேச்சுக் கேட்பேன். ஒற்றுமையை மதிப்பேன்’’ என்றது.
தன் உயிரைக் காப்பாற்றப் பணியாற்றிய வம்பியை ஒட்டி உறவாடி அணைத்துக் கொண்டது
ஒன்றுபட்டால் வாழ்வு;
விலகிச் சென்றால் வீழ்வு.