அறிஞர்களின் வாழ்வில்…
எல்லோருக்கும் பொது
மாஸ்கோ நகரின் கிரம்லின் மாளிகையில் முடி திருத்தும் கடை ஒன்று இருந்தது.. அங்கு விவசாயி, தொழிலாளி, உயர் பதவியிலிருப்பவர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் முடிதிருத்தம் செய்யச் செல்வர்.
ஒரு நாள், ரஷ்ய அதிபராயிருந்த லெனின் சென்றபோது 6 பேர் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஏழாவது நபராக வந்த லெனினைப் பார்த்து அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு வணக்கம் தெரிவித்த லெனின், அங்கிருந்த செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டார்.
உள்ளே முடிதிருத்தம் செய்து முடித்தவர் வெளியே வந்ததும் வரிசையிலிருந்த 6 பேரும், அதிபர் அய்யா, நீங்கள் உள்ளேபோய் முடிதிருத்தம் செய்து கொள்ளுங்கள் என்றனர்.
உடன்படாத லெனின், நீங்கள் 6 பேரும் வரிசையில் காத்திருக்கும்போது இப்போது வந்த நான் முன்னே செல்வது விதிமுறையை மீறியதற்குச் சமமாகும். நாட்டை ஆள்பவன் என்றாலும் சாதாரண குடிமகன் என்றாலும் வரிசை ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். விதியைத் தளர்த்தினால் நாட்டின் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறினார். தனது முறை வரும்வரை காத்திருந்து சென்றார்.
வரிசை என்பது எல்லோருக்கும் பொது. உயர்பதவிகளில் இருப்பவர்களுக்காக விதியைத் தளர்த்தக்கூடாது என்றதோடு, தானும் வரிசையில் அமர்ந்து வந்து விதிமுறைகளைப் பின்பற்றியவர் லெனின்.