விந்தை உலகம் : உயிரனங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரி
ப. மோகனா அய்யாதுரை
நீர் நிலைகள் என பொதுவாக நாம் கடல், ஏரி, குளம், கிணறு போன்றவற்றைத் தான் சொல்வோம். இவற்றில் பல வியப்புகளும் விசித்திரங்களும் நிறைந்த சில நீர்நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் அறியாதோர்க்குப் பல ஆச்சரியங்களையும், மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ஏரிதான் இந்த நாட்ரான் ஏரி (Natron Lake) நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்து இந்த ஏரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோமா?
சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், அதே நேரத்தில் கொஞ்சம் பயங்கரமாகவும் இருக்கும் இந்த ஏரி ஆப்பிரிக்கா கண்டத்தில் கென்யாவை எல்லையாகக் கொண்ட தான்சானியா (Tanzania) நாட்டின் வட பகுதியில் உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு 1040 ச.கி.மீ. ஆகும். அதாவது இந்த ஏரியானது 57 கி.மீ. நீளமும் (35 மைல்), 22கி.மீ. அகலமும் (14 மைல்) கொண்டது. இதன் ஆழம் 1 அடி முதல் அதிகளவு 9.8 அடி வரை உள்ளது. அதாவது அதிகளவாக மூன்று மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் ஏற்படும் நீர் ஊற்றே ஏரியில் நீர் சேரக் காரணம். இது ஒரு காரத்தன்மை வாய்ந்த உப்பு ஏரி ஆகும்.
உப்பு என்றால் நீங்கள் நினைப்பது போல சமையலுக்கு பயன்படும் உப்பு அல்ல; நாம் வேதியியல் பாடத்தில் அமிலம், காரம் (உப்பு) என்று படித்திருப்போம் அல்லவா அதே தான். அதன்படி ph மதிப்பு 7க்கு குறைவாக இருந்தால் அமிலம். 7க்கும் அதிகமாக இருந்தால் காரம். காரம் பொதுவாக உப்பாகவே இருக்கும். அது எளிதில் நீரில் கரையும் ஆற்றல் உடையது. இந்த ஏரியில் உள்ள நீரின் phமதிப்பு 10.5லிருந்து 12 வரை இருக்கின்றதாம். ph மதிப்பு 12 என்றால் மிக வலிமை மிகு காரம் என்று குறிப்பிடுவர். ஆதலால் உலகிலேயே அதிக உப்புத் தன்மை வாய்ந்த ஏரிகளில் இந்த ஏரிதான் முதலிடம் இப் பண்பால் இந்த ஏரிக்கு சோடா ஏரி என்ற புனைப்பெயரும் உண்டு. ஆதலால், இந்த உப்பு நீரை எதிர்த்து உயிர்கள் வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இந்த அதிகக் காரத்தன்மை வாய்ந்த உப்புக்குக் காரணம்… அந்த ஏரியின் நீர் நீண்ட காலமாக வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் அதிக அளவு நீர் ஆவியாகி உப்பை நீரிலே விட்டுவிடுகிறது. முக்கியமாக இந்த ஏரியை ஒட்டி உள்ள எரிமலையும் இதற்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த எரிமலையிலிருந்து வெளியேறுகிற எரிமலைக் குழம்பு (லாவா) இந்த ஏரியில் அதிகம் படிந்துள்ளது. அந்த லாவாவிலிருந்து இந்த ஏரியில் அதிக அளவு சோடியம் கார்பனேட் டெகாஹைட்ரேட் (Sodium Carbonate Decahydrate) மற்றும் சோடியம் செஸ்கியுகார்பனேட் டைஹைட்ரேட் (Sodium Sesquicarbonate Dihydrate) போன்ற கார உப்புக்கள் நீரில் அதிக அளவு கரைந்துள்ளன. பொதுவாக உப்புத் தன்மை வாய்ந்த ஏரிகளில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் உப்புகளே தான் காணப்படும். ஆனால் இந்த ஏரியில் இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் உப்பின் அளவு மேற்குறிப்பிட்ட உப்பை விட மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட லாவா மற்றும் நீர் ஆவியாகி உருவான உப்புகளைத்தான் நாட்ரான் (Natron) என்று அழைக்கின்றனர். இதன் பொருட்டே இந்த ஏரிக்கு நாட்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்ரானை பயன்படுத்தி எகிப்தியர்கள் மம்மிகள் என்று சொல்லக்கூடிய இறந்த உடல்களைப் பதப்படுத்தினர்… அதே மாதிரி இந்த ஏரியில் நாட்ரான் உப்புகள் காணப்படுவதால் இந்த நீர் மனித உடலையே பதப்படுத்த வல்லது. ஏன் சொல்லப்போனால் இந்த நீரை அருந்தும் மனிதனையே இறப்புக்குள்ளாக்கி அவனைப் பதப்படுத்தி சிலைபோல் மாற்றிவிடும் தன்மை கொண்டதுதான் இந்த ஏரி.
அப்படி என்றால் விஷத்திற்கு ஒப்பான இந்த ஏரி நீரை அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அருந்தினால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். இறந்த சிலை போல் மாற வேண்டியதுதான். ஆம், பறவைகள் அருந்தும் உப்பு நீர் உடல் முழுதும் பரவி அப்பறவையை அப்படியே உறைய வைக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த ஏரி நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸில் இருந்து 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாம். நம் உடலைக் காயப்படுத்துவதற்கு இந்த வெப்பநிலையே போதுமானது. இது ஏன் அவ்வளவு சூடாகக் காணப்படுகிறது என்றால் அந்த ஏரியைச் சுற்றி வெந்நீர் ஊற்றுகளும், அந்த நீரில் காணப்படும் உப்புகளே காரணம்.
மேலும் இந்த ஏரியில் ஆல்ஹா என்று அழைக்கப்படும் ஒருவித பாசியும் அதிக அளவு காணப்படுகிறது. அந்த பாசியில் உள்ள நிறமிகள் காரத்தன்மையுள்ள உப்புகளுடன் வினைபுரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. இந்தப் பாசிகளைத் தவிர இந்த உப்பு நீரின் சூழலை ஏற்று வாழக்கூடிய ஒரே ஒரு மீன் இனம் அல்கோலாபியா (Alcolapia) என்று அழைக்கப்படும் கார டெலபியாஸ் மீன்கள் மட்டுமே.
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஏரியை ஒரே ஒரு பறவையினம் மட்டும் தங்களது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு ஆண்டுதோறும் முட்டையிட்டு தன் இனத்தைப் பெருக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா… ஆம், அந்த பறவையின் பெயர் ஃபிளமிங்கோ. ஆண்டுக்கு 30 இலட்சம் அளவில் இந்தப் பிளமிங்கோ பறவைகள் இந்த ஏரியில் கூடுகின்றன. ஆதலால், இப்பறவைகளின் தாயகமாக இந்த நாட்ரான் ஏரி திகழ்கிறது.
மற்ற பறவைகள் எல்லாம் இந்த ஏரி நீரை அருந்திவிட்டு உறைந்து போய் சிலையாக நிற்கும் போது படத்தில் உள்ள இந்தப் பறவை மட்டும் எப்படி இந்தக் கார உப்பு நீரை எதிர்த்து கம்பீரமாக வாழ்கிறது என்கிறீர்களா? சரிதான். இந்தப் பிளமிங்கோ பறவை நாரை வகையைச் சேர்ந்த ஒரு பறவை இனம். இவை அந்த நாட்ரான் ஏரியின் சூழலை எதிர்த்து வாழக்கூடியவை. அங்குள்ள பாசிகள், அல்கோலாபியா மீன் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. இப்பறவைகள் நீரைச் சுத்தமாக வடிகட்டி அதாவது பில்டர் செய்து குடிக்கவல்லவை. அதற்கு அவற்றின் அலகில் சிறப்பாக அமைந்து உள்ள ஒருவித சல்லடை போன்ற சவ்வு தான் காரணம். இதனாலே அந்தக் கார உப்பு நீர் இந்தப் பறவைகளை ஒன்றும் பாதிக்கச் செய்ய முடிவதில்லை. மேலும் இந்த பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பநிலை அந்த ஏரியில் உள்ளது. பிளமிங்கோ பறவைகள் ஏரியின் கரையோரத்திலே கூடுகள் கட்டுகின்றன. ஏரியின் பலத்தால் இந்த இடம் அவற்றுக்கு பாதுகாப்பாகவே உள்ளது.
இந்த ஏரியை ஒட்டி சலே என்ற பழங்குடி மக்கள் மட்டும் வாழ்கின்றனர். இவர்கள் இந்த ஏரியை மிகுந்த பயத்துடன் எதிர்நோக்குகின்றனர். இந்த ஏரியில் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளதாக இவர்களால் நம்பப்படுகிறது. ஆதலால் அவர்கள் இந்த ஏரியை பயத்துடன் வணங்குகின்றனர். அறிவியல் ரீதியாக இந்த ஏரி குறித்து நாம் அறிந்துவிட்ட பிறகு நமக்கு இதில் மர்மம் எதுவும் இல்லை என்ற உண்மை புரிகிறது அல்லவா?