பிடிச்சிக்கோ
விழியன்
ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்த ஆறு பேரும் ஒன்றாகப் படிக்கின்றார்கள். இப்போது ஆறாம் வகுப்பிற்குச் சென்று ஒரு மாதம் கடந்துவிட்டது. அதே பள்ளி வளாகம். ஆறு பேருமே மாலை வேளையில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். அன்று ஒன்றாகக் கூடினாலும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். காலையில் அவர்கள் பள்ளியில் நடந்த காட்சிகளை மனதிற்குள் ஓட்டிக்கொண்டு இருந்தனர்.
“எப்படித் தினமும் அவளால் பள்ளிக்கு வரமுடியும்?” என பேச்சு துவங்கியது. அவள் என்பது சூர்யாவைக் குறித்தது. சூர்யா இன்று காலையில் தான் வகுப்பில் சேர்ந்தாள். சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்தில் அய்ந்தாம் வகுப்பு வரையில் படித்துள்ளாள். அங்கே ஆறாம் வகுப்பு இல்லை. அருகாமையிலுள்ள சில பள்ளிகளில் தேடிவிட்டு இங்கே வந்திருக்கின்றாள்.
சூர்யா ஒரு மாற்றுத்திறனாளி. நடக்க முடியாது. அவள் வகுப்பிற்குள் வந்த காட்சியை அவ்வளவு எளிதாக அந்த ஆறு பேரால் மறக்க முடியாது. சூர்யாவின் அம்மா அவளை இடுப்பில் அமர வைத்துக்கொண்டு வகுப்பறை வாசலில் நின்றார். வாசலிலிருந்து தவழ்ந்து வந்து முதல் வரிசையில் அமர்ந்தாள். ஜெயா அவளுக்குக் கைகொடுத்துத் தூக்கி அமர வைத்தாள். காலை இடைவேளையின் போது அவள் அம்மா வந்தார், மீண்டும் மதியமும் வந்தார். சூர்யாவை கழிப்பறைக்கு அழைத்துச் செல்ல வந்தார். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், ஆறாம் வகுப்பறை முதல் மாடியில் இருந்தது.
“என்ன இன்னைக்கு விளையாடப் போகப் போறதில்லையா நாம?” என்றான் மருது.
சம்பந்தமே இல்லாமல், “சூர்யாவை நம்ம செட்டில் சேர்த்துக்கலாமா?” என்றாள் ஜெயா.
ஆறு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நட்புக் குழுவில் யாரையும் எளிதாக விடமாட்டார்கள். எல்லோருடனும் நெருக்கமாகப் பழகுவார்கள். ஆனாலும் இவங்க மட்டும் தனியா ஒரு செட்டு என ஒன்றாகச் சுற்றுவார்கள். அவர்களது வீடுகளும் அருகருகே இருப்பதால் எந்தச் சிக்கலும் எழவில்லை.
சூர்யாவின் ஊர், குடும்பம் பற்றி விவரம் ஏதும் தெரியவில்லை. மறுநாள் முதல் வேலையாக இதனை ஆறு பேரும் சூர்யாவிடமே பெற்றனர். சூர்யா ஒரே குழந்தை. சூர்யாவின் உடல்நிலை இப்படி இருப்பதால் அவள் அப்பா விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். தனியாளாக அம்மா வளர்க்கின்றார். வேலை? இவளைப் பார்த்துக்கொண்டே ஏதேனும் வேலை செய்ய வேண்டும். ஒரு மாதம் தாமதமாகச் சேரக் காரணம் – படிக்கும் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றப் போராட்டம் நடத்தி இருக்கின்றார் சூர்யா. பேசிப்பேசி இவர்கள் குழுவில் இவளை இணைத்துக்கொண்டார்கள். சூர்யாவிற்கும் முழுச் சம்மதம்.
வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குள் நுழைந்ததும் பெண்களுக்குக் கராத்தே வகுப்பு இருக்கு என்று எல்லா மாணவிகளும் சென்றுவிட்டனர். சூர்யா மற்ற மாணவர் களுடன் வகுப்பில் இருந்தாள். காலை இடைவேளையின்போது சூர்யாவின் அம்மா வந்து அவளை கழிப்பறைக்கு அழைத்துச்சென்றார். அன்று மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது மருது உடைந்தான்.
“நீங்க எல்லாரும் பைகளை எனக்குக் கொடுத்துட்டீங்க. நாலு பைகள் தான், ஆனா அதையே என்னால தூக்கிட்டுப் போக முடியல. சூர்யா அம்மா தினமும் சூர்யாவைத் தூக்கிட்டு மாடிப்படி ஏறி ஏறி இறங்கறாங்க. அவங்க சுமையை கொஞ்சமாச்சும் குறைக்கணும்“.
‘ஆமாம்’ என இசைந்தனர். ஜெயா இன்னும் வேகமாகத் தலை அசைத்தாள்.
அம்மா சுமக்கின்றாள் – வீட்டிலிருந்து பள்ளிக்கு, பள்ளியிலிருந்து மாடிக்கு, மாடியிலிருந்து மீண்டும் கழிவறைக்கு, மீண்டும் மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு என ஒவ்வொரு காட்சியாக அசை போட்டனர் அனைவரும். அம்மாவின் பாரத்தைக் குறைக்கணும்…
மறுநாளே இதற்கான செயலில் இறங்கினார்கள். ஆறு பேர் முடிவெடுத்தால் பத்தாது என வகுப்பறையே இந்த ஆலோசனையில் இறங்கியது. படிப்பில் அதிக ஆர்வமில்லாத ஹரி இதில் நிறைய முனைப்பு காட்டினான். பல யோசனைகளைக் கூறினான். அவனே ஏழாம் வகுப்பு மாணவத் தலைவனிடம் பேசுவதாக வாக்களித்தான். முதல் மாடியில் இருக்கும் ஆறாம் வகுப்பினைத் தரை தளத்திற்கும், ஏழாம் வகுப்பினைத் தரை தளத்திலிருந்து முதல் தளத்திற்கு மாற்றுவது என்று திட்டம். வகுப்பறையில் மாட்டி வைத்திருந்த பொருள்களை ஒரு நாள் காலையில் சீக்கிரம் வந்து மாற்றிடத் திட்டமிட்டனர். தலைமை ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். மற்ற ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும். செய்தி அறிந்த ஆரிபா டீச்சர் தலைமை ஆசிரியரிடம் விளக்கி சம்மதம் பெற்றுத் தந்தார். 90 நிமிடத்தில் மாற்றிவிட்டனர். சூர்யாவின் அம்மா மாடிப்படி ஏறும்போது தடுத்து நிறுத்தி “இனி நீங்க மாடிக்கு அவளைச் சுமக்க வேண்டாம்மா” என அன்பாகக் கூறினார்கள்.
அம்மாவின் பாரத்தைக் குறைக்கணும்…
சூர்யா பள்ளியில் சேர்ந்த மூன்றாவது வாரத்தில் ஒரு நாள் காலை, ஆறு பேரும் தலைமை ஆசிரியர் அறையில் நின்றார்கள்.
“என்னாச்சு? இங்க என்ன செய்றீங்க?”
“நம்ம டாய்லெட்களை இன்னும் சுத்தமா வெச்சிருக்கணும். சூர்யா தவழ்ந்து போக முடியல. வகுப்பறையில் இருந்து டாய்லெட்டுக்குப் போற பாதையும் கரடுமுரடா…”
சில விநாடிகள் அமைதியாக இருந்தது அறை. மேலே உத்திரத்தில் மின்விசிறியின் சத்தம் மட்டும் கேட்டது.
“சரி செய்திடலாம்டா கண்ணுங்களா… வகுப்புக்குப் போங்க…”
“நாளைக்கே சரி செய்திடலாமா?”
“மேஸ்திரிகிட்ட பேசறேன்… 2-3 நாளில் செய்திடலாம்“
வகுப்பில் செய்தி பரவியதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இப்போதும் காலையும் மாலையும் மட்டும் சூர்யாவின் அம்மா பள்ளிக்கு வருகின்றார். மற்ற தேவைகளை ஆறாம் வகுப்பு நண்பர்களே நிறைவு செய்கின்றார்கள். சூர்யாவின் அம்மாவும் ஓர் ஆலையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள். முன்னர்தான் நடுநடுவே வரவேண்டி இருந்ததால் எங்குமே சேர்த்துக்கொள்ளவில்லை.
சூர்யாவைப் பள்ளிக்கு அழைத்துவருவதற்கும் வீட்டில் விடுவதற்கும் மாணவர்கள் ஓர் ஏற்பாடு செய்தார்கள். ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்கள் யாரிடம் எல்லாம் சைக்கிள் இருக்கோ அவர்களில் தலா இருவர் சூர்யாவின் வீட்டிற்குக் காலையில் சென்று அவளைச் சைக்கிளில் அமர்த்தி அழைத்து வருவார்கள். அதற்கான அட்டவணையும் போட்டிருந்தார்கள் ஆறாம் வகுப்பு நண்பர்கள். சூர்யாவின் அம்மாவிற்குப் பறப்பது போல இருந்தது. அவருக்குச் சிறகு முளைத்ததுபோல இருந்தது.
அம்மாவின் பாரத்தைக் குறைக்கணும்…
பள்ளி விழா ஒன்றில் சூர்யாவிற்கு மற்றோர் இன்ப அதிர்ச்சியை மாணவ நண்பர்கள் கொடுத்தார்கள். அவளாக இயக்கும் ஒரு நான்கு சக்கரச் சைக்கிளைப் பரிசாக ஏற்பாடு செய்திருந்தனர். அதற்குப் பல இடங்களில் பேசி மாணவர்கள் சேமிப்பில் இருந்து பணம் சேர்த்து வாங்குவதாக இருந்தது. ஆசிரியர்கள் கூட்டாகச் சேர்ந்து பாதி தொகை தருவதாகச் சம்மதித்தனர். விழாவிற்கு உள்ளூர் கல்வி அதிகாரி ஒருவர் தலைமை தாங்கினார். குழந்தைகளின் முன்னெடுப்புகளைப் பாராட்டினார்.
“சூர்யா நன்றாகப் படிக்கின்றார் எனக் கேள்விப்பட்டேன். நன்றாக படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய வாய்ப்புகளும் வசதிகளையும் ஏற்படுத்தி தரணும். இவங்க பள்ளிக்குள்ள சக்கர நாற்காலி வருவதற்கும் எல்லா இடங்களுக்கும் பள்ளிக்குள் போவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. ரொம்ப மகிழ்ச்சி..” என சொல்லும்போதே சூர்யா கையை உயர்த்தினார். “ஏதோ சொல்லணும்னு நினைக்கிற.. சொல்லும்மா” என்றார்.
“என் நண்பர்களுக்கும் பள்ளிக்கும் நன்றி. என்னைவிட எங்க அம்மாவுக்குத்தான் பாரம் குறைஞ்சிருக்கு. இன்னொன்னு நல்லா படிக்கிற பசங்களுக்கு மட்டும்தான் ஊக்குவிப்பா சார்? படிக்கணும்னு ஆசைப்படற எல்லாருக்கும் ஏற்பாடு இருக்கணும். அதோட எல்லோருக்கும் படிக்கணும்னு ஆசையையும் ஏற்படுத்தணும் சார்”
‘உண்மை உண்மை’ எனத் தலையாட்டிய அவர் கைதட்ட ஆரம்பிக்க, பள்ளியே எழுந்து நின்று கைதட்டியது. கூட்டத்தில் இரண்டு உயிர்கள் கண்ணீர் சிந்தின. ஒன்று, பூரிப்பில் சூர்யாவின் அம்மா. குலுங்கிக் குலுங்கி அழுதார்; மற்றொன்று சூர்யாவின் தோழி ஜெயா.
ஜெயாவின் டைரிக்குறிப்பில் அடிக்கோடிட்ட வரிகள் இவை:
“முதல் நாள் சூர்யா வகுப்பிற்கு வந்தப்ப, வகுப்பில் அமர்ந்ததும் என் கைகளை கெட்டியாப் பிடிச்சிக்கிட்டா, என்னைக் கைவிடாதன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. கை விட்டுடவே மாட்டேன்”.