சாதனை : நான் சேகரித்தது உயிருள்ள பொருள்!
கடிகாரச் சேகரிப்பின் மூலம் உலக சாதனை படைத்த
ராபர்ட் கென்னடியுடன் பெரியார் பிஞ்சுகள் சந்திப்பு!
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராபர்ட் கென்னடி அவர்களின் கடிகாரச் சேகரிப்பகத்தினுள் நுழையும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. காரணம், கைகளைக்கூட சுதந்திரமாக நீட்ட முடியாத அளவுக்கு, எங்கெங்கு காணினும் கடிகாரங்கள் என்று சொல்லும்படியாக, சிறிய இடத்தில் ஏறக்குறைய 2,200 கடிகாரங்கள் இருந்தன. எல்லா கடிகாரங்களும் டிக், டிக் எனும் இனிய கீதத்தை இசைத்து, அந்த நாதத்தைக் காற்றுடன் இரண்டறக் கலக்க வைத்திருந்தது! அப்படியொரு புதிய, அருமையான சூழலில்தான், இந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது! ராபர்ட்டுடன் அவரது இணையர் டீனி, கடிகார மருத்துவர் (Mechanic) நாகராஜ் ஆகியோரும் உடனிருந்தனர். வியப்பிலிருந்து விடுபட்ட பெரியார் பிஞ்சு பறை, முதலில் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
பறை: எதுக்காக இந்தக் கடிகாரங்களை சேகரிக்க ஆரம்பிச்சீங்க?
ராபர்ட்: நான் உன்ன மாதிரி சின்னப்பிள்ளையா இருந்த போது எங்க வீட்டில் ஒரு கடிகாரம் இருந்தது. அந்தக் கடிகாரம் வெள்ளைக்காரத் துரை எங்க தாத்தாவுக்குக் கொடுத்ததாம். அதைப்பற்றி எங்க அப்பா கதை, கதையா என்கிட்ட சொல்லிட்டே இருப்பார். அதனாலயே அந்தக் கடிகாரத்தின் மீது எனக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. சின்ன வயசுலேயே என்னுடைய நண்பர்களிடம், இன்னும் அஞ்சு வருசத்தில அஞ்சு கடிகாரம் சேமிச்சுக் காட்டுவேன் என்று விளையாட்டுப் போல சொன்னேன். அந்த விளையாட்டுப் பேச்சுக்குள் இப்படியொரு கனவு இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது.
தமிழினி தாணு : நிறைய கடிகாரங்கள் இருக்கு! இதில் நிறைய வகை இருக்குமோ?
ராபர்ட்: ம்.. நல்ல கேள்வி, பெண்டுலம் கடிகாரம், பேலன்ஸ் கடிகாரம், வெய்ட் டிரவென் (Weight Driven) கடிகாரம், அனிவர்சரி Anniversary கடிகாரம், மெரைன் (Marine) கடிகாரம், குக்கூ கடிகாரம், மியூசிக் கடிகாரம் என்று பலவகைப்பட்ட கடிகாரங்கள் இங்கே இருக்கிறது.
பறை: இதையெல்லாம் எங்கிருந்து வாங்குவீங்க?
ராபர்ட்: பெரும்பாலும் பழைய பேப்பர் கடைக் காரங்ககிட்டிருந்துதான். அய்ரோப்பிய நாடுகளில் பணக்காரர்கள்தான் இதுபோன்ற கடிகாரங்களைச் சேகரிப்பார்கள். நான் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், சொற்பக் காசை வைத்துக்கொண்டு இந்தக் கடிகாரச் சேகரிப்புக்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்றியிருக்கிறேன்.
கோவன் சித்தார்த்: பேப்பர் கடைகளுக்கு வீடுகளிலிருந்துதானே சென்றிருக்கும். நேரிடையாக வீடுகளில் போய் கேட்டிருக் கீங்களா?
ராபர்ட்: ம்ம் அப்படியும் போயிருக்கிறேன். சில வீடுகளில் தருவார்கள். சிலர், இது எங்க பூட்டன் காலத்து கடிகாரம். ஆகவே தரமாட்டேன் என்று மறுத்திருக்கிறார்கள். சிலர் கடிகாரக் காட்சியகத்திற்கென்று பழைய கடிகாரங்களை அன்பளிப்பாகவும் கொடுத்திருக்கிறார்கள். லண்டனில் இருந்து ஒரு பெண், இன்னிக்கு மதிப்புக்கு 10 லட்சத்துக்கு மேல இருக்கும் மதிப்பு மிக்க மூணு கடிகாரங்களை 10 பைசா வாங்கிக்கொள்ளாமல் சிறப்பு அஞ்சலில் அனுப்பி வைத்தார்.
தமிழினி தாணு : சாதனை செய்யும் அளவு சேகரிப்புங்கற பொழுது எப்படி வந்தது?
ராபர்ட்: நான் சின்னப்பிள்ளை யாக இருந்த போது டேபிள் டென்னிஸ் பிளேயர் ஆகணும் என்று கனவு கண்டேன். அந்தக்காலத்தில் ஜப்பானில் போய்தான் பயிற்சி எடுக்கணும். பொருள் வசதி இல்லாததால் போக முடியவில்லை. அந்த விரக்தியில் வாழ்க்கையில் ஏதாவது ஒன்னு வித்தியாசமா செய்ய வேண்டும் என்று நினைச்சேன். சின்ன வயது ஆசையும் சேர்ந்து இந்தக் கடிகார சேகரிப்பு சாத்தியாமாயிற்று. அதுமட்டுமல்ல, பழங்காலத்துப் பொருட்களைப் பார்க்கிறவங்களுக்கு ஒரு வியப்பு வரும். அதைப் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஒரு காரணம்.
தமிழினி தாணு : உங்க பெற்றோர் என்ன சொன்னாங்க?
ராபர்ட்: அம்மா முழுமையாக எதிர்த்தார். அப்பாவிடம் புகார் செய்தார். அப்பா என்னை விசாரித்தார். நான் இதில் எனக்கு விருப்பம் இருப்பதைச் சொன்னேன். அவர் ஊக்குவித்தார். ஆனால், பத்து கடிகாரத்தைத் தாண்டிய போது கண்டித்தார். இப்படி தடங்கல் மீது தடங்கல்! எல்லா தடங்கல்களையும் மீறி விடாப்பிடியாக முயற்சி செய்தேன்.
கோவன் சித்தார்த்: உங்க மனைவி, பசங்க என்ன சொன்னாங்க?
ராபர்ட்: எனக்கு 1993இல் திருமணம் ஆயிற்று. அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போது, அவங்களுக்கு இந்தக் கடிகாரங்களைப் பார்த்து எதுவும் பிடிபடவில்லை. பிறகு எனது நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவங்க எனக்கு ரொம்ப உதவியாக இருந்தாங்க. பிள்ளைங்களுடன் என்னால் அதிகமாக நேரம் செலவழிக்க முடியவில்லை. அதனாலேயே அவங்க, ‘எப்பவும் கடிகாரங்கள் கூடவேதான் இருக்கீங்க. வீ மிஸ் யூ ஏ லாட்’ அப்படின்னு சொன்னாங்க. அதைப்பற்றி நினைத்தால், இப்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த உலகச் சாதனை செய்வதற்கு எதையாவது தியாகம் செஞ்சாத்தான் முடியும்.
பறை: ஏற்கனவே இருந்த கின்னஸ் சாதனை என்ன? அதை நீங்க எப்படி முறியடிச்சீங்க?
ராபர்ட்: அமெரிக்காவில் வசிக்கும் ஜாக் ஷாப் என்பவர்தான் உலகத்திலேயே மிகப்பெரிய கடிகார சேகரிப்பாளர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. நான் அதை அறிந்ததுமே அதை நாம் முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 2016 இல் விண்ணப்பம் செய்தேன். 2017 இல்தான் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, நவம்பர் 2022, 3 ஆம் தேதி, ஜாக் ஷாப்போட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நான் எட்டினேன் The largest Mechanic Clock Collection in the World என்பதுதான், எனக்கு வழங்கிய சாதனைக்கான சொற்றொடர்!
கோவன் சித்தார்த்: பழைய கடிகாரங்களை நீங்களே சரிசெஞ்சுக்குவீங்களா?
ராபர்ட்: எனக்கு சரிபார்க்கத் தெரியாது. இந்த கடிகாரக் காட்சியகத்தின் நாயகன் இந்த மெக்கானிக் நாகராஜ்தான்! கடிகாரங்களை ஒரு பிள்ளையைப் போலக் கழுவி, மண்ணெண்ணெய் போட்டு துடைத்து வைப்பேன். அவர் சரி செய்வார். அவர் இல்லையென்றால் இந்த உயிருள்ள கடிகாரச் சேகரிப்பே இல்லை என்றுதான் சொல்வேன். நான் இவருக்கு உதவியாக இருப்பேன். இவரு சரியா துடைக்கச் சொல்லி அப்பப்ப என்னையே மிரட்டுவாரு. (சிரிக்கிறார். நாகராஜும் சிரிக்கிறார்) மரவேலை, வார்னிஸ் அடிக்கிற வேலைகளை நான் செய்வேன். இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. இதில் மூன்றாவது நபர் எனது மனைவி டீனி முவரின் பங்களிப்பும் சேர்ந்ததுதான் இந்தக் கடிகாரக் காட்சியகம்! இது 40 ஆண்டுகள் சேகரிப்பு.
பறை: இருப்பதிலேயே முக்கியமான கடிகாரங் களை எங்களுக்குக் காட்டுவீங்களா?
ராபர்ட்: தாராளமாக உலகத்திலேயே யாரும் பார்க்காத கடிகாரங்களை நான் உங்களுக்கு காட்டப்போகிறேன். (அந்தக் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டி பேசுகிறார்) இது 290 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து பட்டறையில் செய்யப் பட்ட கடிகாரம்! அந்தக்காலத்தில் மெசின் கிடையாது. ஆகவே சுத்தியலால் தட்டித்தட்டி செய்யப்பட்டது இது! இந்தக் கடிகாரம் உலகத்தில் நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது! என்னைப் போல 387 கடிகார் சேமிப்பாளர்கள் உலகத்தில் இருக்கின்றார்கள். அத்தனை பேரிடமும் இணையம் வழியாக இதைக் காட்டி, யாரிடமும் இதுபோல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே போல், 50-க்கும் மேற்பட்ட கடிகாரக் காட்சியகங்கள் உலக அளவில் உண்டு. அதில் எதிலும் இந்தக்கடிகாரம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1995இல் இப்போது மயிலாடுதுறையில் ஒரு பழைய பேப்பர் கடைக்காரரிடம் வாங்கியது. அன்றைக்கு அதன் விலை ரூ. 1,100/- அப்போது அது எனக்கு பெரிய தொகை. சிரமப்பட்டுதான் வாங்கினேன். அது விலை மதிக்கமுடியாத கடிகாரம் என்று பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.
(தொடர்ந்து உலகத்திலேயே மிகச்சிறிய பெண்டுலம் கடிகாரத்தை கையில் வைத்துக் காட்டிப் பேசினார். – படம் 2) இந்தக் கடிகாரத்தை 70 ரூபாய்க்கு வாங்கினேன். இது மொத்தமே ஒன்றரை இன்ச் தான். அதற்குள் எத்தனைச் சிறிய பெண்டுலம் பாருங்கள்.
(இன்னொரு முக்கியமான கடிகாரம் என்று கூறி அதை கையில் வைத்தபடி பேசுகிறார். படம் 3) இது 1895 இல் இந்தியன் நேசனல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் தலைவர்களின் படங்களை கடிகாரத்துக்குள் வைத்துத் தரும்படி சுவிட்சர்லாந்து நாட்டுக்கு 200 கடிகாரங்களுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்தக் கடிகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இதைக் காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியிடம் காண்பிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை!
கோவன் சித்தார்த்: கடிகாரங்களுக்கு முன்பு எப்படி நேரம் பார்த்திருப்பாங்க?
ராபர்ட்: அந்தக் காலத்திலிருந்தே சூரிய ஒளி கடிகாரம், நிலாகடிகாரம், தண்ணீர் கடிகாரம், மணல் கரிகாரம் என்பதன் மூலம் மனிதர்கள் நேரத்தைக் கணக்கிட்டனர். 1637 இல் கலிலியோ பெண்டுலம் கடிகாரத்தைக் கண்டிபிடித்தார். அது முழுமையடையவில்லை. அவர் இறந்து 19 ஆண்டுகளுக்குப்பிறகு, கிறிஸ்டியன் யுகன் என்பவர் கலிலியோவின் கண்டுபிடிப்பை முழுமைப்படுத்தினார். 1655 முதல் 1990 வரைக்கும் இந்த பெண்டுலம் கிளாக்கும் மெக்கானிக்கல் கிளாக்கும் தான் உலகத்தையே ஆண்டு வந்தன. இன்றைக்கு மெக்கானிக் கடிகாரமே இல்லை!
கோவன் சித்தார்த்: கடிகாரங்களுக்கு முன்பு எப்படி நேரம் பார்த்திருப்பாங்க?
ராபர்ட்: அந்தக் காலத்திலிருந்தே சூரிய ஒளி கடிகாரம், நிலாகடிகாரம், தண்ணீர் கடிகாரம், மணல் கரிகாரம் என்பதன் மூலம் மனிதர்கள் நேரத்தைக் கணக்கிட்டனர். 1637 இல் கலிலியோ பெண்டுலம் கடிகாரத்தைக் கண்டிபிடித்தார். அது முழுமையடையவில்லை. அவர் இறந்து 19 ஆண்டுகளுக்குப்பிறகு, கிறிஸ்டியன் யுகன் என்பவர் கலிலியோவின் கண்டுபிடிப்பை முழுமைப்படுத்தினார். 1655 முதல் 1990 வரைக்கும் இந்த பெண்டுலம் கிளாக்கும் மெக்கானிக்கல் கிளாக்கும் தான் உலகத்தையே ஆண்டு வந்தன. இன்றைக்கு மெக்கானிக் கடிகாரமே இல்லை!தொடர்ந்து, கடிகாரங்களை சரிபார்க்கக் கூடிய நாகராஜ் பிஞ்சுகளுக்கு கடிகாரத்தின் பாகங்களை தனித்தனியே சுட்டிக்காட்டினார். (படம் 1) பிஞ்சுகளும் மிகுந்த ஆவலுடன் கவனித்தனர். நீண்ட உரையாடலில் பெரியார் பிஞ்சுகள் அவருடன் இருந்த இறுகத்திலிருந்து விடுபட்டிருந்தனர். அடுத்து பேசிய ‘பறை’யின் பேச்சில் அது தென்பட்டது.
பறை: தாத்தா, இடம் ரொம்ப நெருக்கடியாக இருக்கிறதே, இதை விரிவுபடுத்தும் வாய்ப்பு உண்டா?
ராபர்ட்: ஆமாண்டா செல்லம், சின்ன இடத்தில்தான் நிறைய கடிகாரங்களை சேமிச்சு வச்சிருக்கோம். நிறைய பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் இருந்து வந்து பார்க்கலாமா என்று கேட்பார்கள். ஆனால் வசதி இல்லை. அஞ்சு பேர் வந்தாலே இடம் ரொம்ப நெருக்கடி ஆயிடும். இதை பெரிய அளவில் வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். இனி வருகிற தலைமுறைக்கும் பயன்படும். இது என் காலத்தையும் தாண்டி உயிருடன் இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசை! இதை தமிழ்நாடு அரசுக்கு இலவசமாக கொடுத்துவிடலாம் என்றே எண்ணுகிறேன். நம்ம முதலமைச்சருக்கு இதை எடுத்துச் சொல்லுறியா?
திகைப்புடன் தொடங்கி, வியப்புடன் தொடர்ந்து, ராபர்ட்டின் கடைசி ஆசை என்னவென்று தெரிந்ததும் சற்றே சோகத்துடன் நேர்காணல் முடிவது போலிருந்தது. அதற்குள் ராபர்ட்டின் இணையர் டீனி அம்மையார், பிஞ்சுகளை அருமையாக உபசரிக்கத் தொடங்கி விட்டதால், ராபர்ட்டும் அதில் விரும்பி பங்கேற்க வேண்டியிருந்தது. அதனால் மீண்டும் அனைவரும் புத்துணர்வு பெற்றனர். அதே புத்துணர்வுடன் நீண்டகாலம் பழகியவர்களைப் பிரிவதுபோன்ற உணர்வுடன் மூவரிடமும் பிஞ்சுகள் விடைபெற்றனர்.
தொகுப்பு: உடுமலை வடிவேல் &
மரகதமணி, படங்கள்: கமலேஷ்