தொடர் கதை – 5 : நீதிமன்றத்தில் வாதிட்ட பூசணிக்காய்
சிகரம்
“பூசணிக்காய்! பூசணிக்காய்! பூசணிக்காய்!” நீதிமன்ற ஊழியர் அழைத்தார். வழக்குரைஞர் பூசணிக்காயை நீதிபதி முன் கொண்டு சென்றார்.
நீதிபதி: நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கலாம்.
பூசணிக்காய்: எங்களில் வெண்பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் சாறு மிகவும் நல்லது. இதன் சாற்றைக் குடிப்பதால் வயிற்றுப் புண் முதல் இரத்தக் கசிவு வரை தடுக்க முடியும்.
சாம்பல் பூசணிக்காய் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துகள் கொண்ட காயாகும். இதில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் சீரணத்தை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
தென்கிழக்கு ஆசியாவில் பலவிதமான உணவுகளில் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ரைபோஃப்ளேவின், தியாமின், தயாசின் மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். பூசணிக் காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் எடை இழப்புக்கு ஏற்றது.
பூசணிக்காய் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுவதால் சீனர்கள் தங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.
பூசணிக்காய் இயற்கையிலேயே வயிறு மற்றும் குடல் சவ்வுகளில் ஏற்படும் புண்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. காரமான உணவுகள் சாப்பிடுவதால் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதன் காரணமாக உண்டாகும் அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பூசணிக்காய் பாக்டீரியா எதிர்ப்பு முகவராகச் செயல்படுவதன் மூலம் வயிறு மற்றும் குடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அகற்ற உதவுகிறது. இது இரைப்பை குடல் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எடையைக் குறைக்க விரும்பினால் கலோரி நிறைந்த உணவுக்கு மாற்றாக இந்த சாம்பல் பூசணிக்காயை எடுத்துக்கொள்ளலாம். இதில் 96% தண்ணீர் மட்டும்தான் உள்ளது. உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது. எனவே, மக்கள் தங்கள் உடல் எடையைப் பழைய நிலைக்குக் கொண்டுவர உதவுகிறது.
பூசணிக்காய் இயற்கையிலேயே இரத்தம் கசிவதைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் நாம் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முடியும். இந்தக் காய் உட்புற இரத்தப்போக்கிலும் பல அதிசயங்களைச் செய்யக்கூடியது. கோடையில் பொதுவாக ஏற்படும் மூக்கு இரத்தப்போக்குகளை நிறுத்த இது உதவுகிறது. அதனுடன் ஹீமாட்டூரியா (சிறுநீரகத்தில் உட்புற இரத்தப்போக்கு இருப்பதால் சிறுநீரில் இரத்தம் கசிவது). உடலில் ஏற்படும் புண்களையும் இரத்தப் போக்கு போன்ற பிரச்சனைகளையும் வெண்பூசணிக்காய்ச் சாற்றை உட்கொள்வதன் மூலம் நிறுத்தலாம்.
இது மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது. இயற்கை மயக்க மருந்தாகச் செயல்படுவதால் மனநோய்களைச் சமாளிக்க உதவுகிறது. நரம்புகள் மற்றும் மூளையில் நல்ல விளைவைத் தரும். எனவே கால் – கை வலிப்பு, பதட்டம், தூக்கமின்மை, நியூரோசிஸ் மற்றும் சித்தப்பிரமை போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான நிலைமைகளைப் போக்க இது பயன்படுகிறது. ஒரு நாளைக்கு ஓர் ஆழாக்கு அளவு சாம்பல் பூசணிக்காய்ச் சாறு குடிப்பது அனைத்து மனஅழுத்தங்களையும் சமாளிக்கவும் அமைதியாக இருக்கவும் உதவுகிறது.
பூசணிக்காய்ச் சாற்றை எலுமிச்சை சாறுடன் கலந்து உடலில் தடவும்போது உடலில் உள்ள கருமையான புள்ளிகளை நீக்கி இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. கூந்தலுக்கும் இந்தக் காய் பல நன்மைகளைக் கொடுக்கிறது.
பூசணிக்காய்ச் சாறு தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வளிக்கிறது. ‘ஷாம்பு’ போட்டுக் குளிப்பதற்கு முன்பு இந்தச் சாற்றைத் தலையில் தடவலாம். தலைக்குப் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யுடன் இந்தப் பூசணிக்காயின் விதைகளையும் சேர்த்துப் பயன்படுத்தி வரலாம்.
பூசணிக்காயைச் சமையல் மற்றும் பல இனிப்பு வகைகளில் பயன்படுத்துகின்றனர். பூசணிக்காயைக் கொண்டு மிட்டாய், ஜாம், கேக், அய்ஸ்க்ரீம், ஜூஸ் தயாரிக்கலாம் எங்களைக் கூழ்மமாக மாற்றி கிரீம் சேர்த்து கேக்குகளைத் தயாரிக்கலாம்.
பூசணிக்காய் மோர்க்குழம்பு மிகவும் சுவையானது; உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பூசணிக்காயை வடகமாக வெய்யிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் புளிக்குழம்பு வைக்கப் பயன்படும்.
பூசணிக்காய் அல்வா உடல்நலத்திற்கு உகந்தது. கெட்டுப் போகாமல் நீண்டநாள் வைத்திருந்து பயன்படுத்த உதவும் காய் பூசணி மட்டுமே! பூசணி விதை உண்பதற்குச் சுவையானது; உடல் நலத்திற்கு உகந்தது. கோடைக்கால வெம்மையை எதிர்கொள்ள ஏற்ற உணவுப் பொருள் பூசணிக்காய். கோடை வெப்பத்தின் பாதிப்புகளிலிருந்து நம் உடலைக் காக்கும் ஆற்றல் கொண்டது பூசணி.
இப்படிப்பட்ட பூசணிகளாகிய எங்களைச் சாலையில் உடைத்துப் பாழாக்குவது மாபெரும் குற்றச்செயல். உடலுக்குப் பல வகையில் பயன்படும் உணவுப் பொருகளைப் பாழாக்கப்படுவதோடு, சாலையில் செல்லும் வாகனங்களை வழுக்கிவிடச் செய்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது.
எனவே, மாண்பமை நீதிமன்றம் பூசணிக் காயைச் சாலையில் உடைத்தும், திருஷ்டி கழிக்க கயிற்றில் தொங்கவிட்டும், இன்னும் பல வகையிலும் பாழாக்குவதைத் தடை செய்திட ஆணை வழங்க வேண்டும்.
நீதிபதி: அருமை! மிகச்சிறப்பான வாதங்கள். நானே பூசணிக்காய் மோர்க் குழம்புக்கு ருசிகன் ஆயிற்றே! அத்தனையும் உண்மையானவை. பாராட்டுகள்!
நாளை மறுநாள் தேங்காய் தன் வாதங்களை வைக்கலாம். அதுவரை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
(தொடரும்)