டப்பென டமால் டிப்பென டிமீல்!
விழியன்
பத்து மாடியிலும்
இதேதான் பேச்சு. லிப்ட் ஆப்பரேட்டர் ஒரு ஒட்டகச்சிவிங்கியா? அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். ஏராளமான அரசு
அலுவலகங்கள் உள்ளே இருக்கின்றன. பத்து
மாடிக் கட்டடம். மொத்த கட்டடத்திற்கும் ஒரே ஒரு லிப்ட் மட்டுமே உள்ளது.
அதற்கு வெகு நாட்களாக சரியான லிப்ட் இயக்குபவர் கிடைக்கவில்லை. பெரிய லிப்ட். ஒரே சமயம் இருபது பேர் வரையில் போகலாம். வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் இரண்டு மூன்று நாட்களிலேயே நடையைக் கட்டிவிடுவார்கள். ஒட்டகச்சிவிங்கி எப்படி லிப்டை இயக்கும் என ஒரே குழப்பம். அதனிடம் எப்படி எந்தத் தளத்திற்குப் போவது என்று சொல்வது? அது சரியாகக் கேட்குமா?
முதலில் அவ்வளவு பெரிய ஒட்டகச்சிவிங்கி எப்படி லிப்ட்டிற்குள் போகும் என எல்லோருக்கும் குழப்பம். அந்தக் கட்டடத்தில் பணி புரிந்த அத்தனைபேரும் வளாக வாசலில் காத்திருந்தனர். ஒட்டகச்சிவிங்கி ஆடி அசைந்து வந்தது. கழுத்தில் ஒரு பெரிய பை. அதில் வெளியே தெரியும்படி காய்கறிகள் இருந்தன.
“டேய், அது லஞ்ச் பாக்ஸ்ன்னு நினைக்கிறேன்” என்றார் ஒருவர்.
ஒட்டகச்சிவிங்கி இதைக் கேட்டுத் திரும்பி,
“ஆமா, மதியம் சாப்பிடணும் இல்ல” என்று சொன்னதும் கேட்டவர் மயங்கிவிட்டார். ஆவென பாதிக்கூட்டம் வாயைப் பிளந்தது. கட்டட நுழைவு வாயிலில் தன் பையில் இருந்த அடையாள அட்டையைக் காட்டியது. கதவு திறந்தது. அது மூன்று மாடி உயரத்திற்கு இருந்தது. மூன்றாம் மாடி கண்ணாடியில் இருந்து பார்த்தால் அதன் முகம் நன்றாகத் தெரிந்தது. அது எப்படி உள்ளே போகும் என ஆவலுடன் காத்திருந்தனர். காலின் அடிப் பகுதியை மடக்கி சிறிய கதவின் வழியே நுழைத்தது. அது ஒட்டகச்சிவிங்கிக்கு சின்ன கதவு என்பதைக் கவனத்தில் கொள்க. கால் மடங்கி குட்டியானது. மற்ற கால்களையும் உள்ளே விட்டது. இன்னும் குட்டியானது. நான்கு கால்களும் உள்ளே சென்றதும் மொத்த உடலும் சின்னதானது. லிப்ட்டின் அருகே சென்றது. பையில் இருந்து ஒரு சாவியைப் போட்டு லிப்ட்டைத் திறந்தது. லிப்டிற்குள் சென்றதும் இன்னும் சின்னதாகிவிட்டது. அங்கே ஒரு ஸ்டூல் இருந்தது, அதில் உட்கார்ந்து கொண்டது.
இந்த அதிசயக்காட்சி எல்லாம் இரண்டு மூன்று நாள்களில் அடங்கிவிட்டது. மற்றொரு அலுவலக ஊழியரைப் போல பார்க்கத் துவங்கிவிட்டனர். ஆனால், ஒட்டகச்சிவிங்கியிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. லிப்ட்டிற்குள் ஏறி எந்தத் தளம் என்பதைத் தமிழில்தான் சொல்ல வேண்டும். “ஒன்று”, “அய்ந்து”, “எட்டு”, “பத்து” என்று சொல்லிவிட்டால் சரியான பட்டனை அழுத்தி அங்கே இறக்கிவிடும்.
“பைவ்”
“பைவ்”
“பைவ்”
எத்தனை முறை சொன்னாலும் அசையாது. அப்படியே நிற்கும்.
“அய்ந்து” என்று சொன்னதும் வலது முன்னங்காலைத் தூக்கி பட்டனை அழுத்தும். அதே போல யாராச்சும் இறங்கும்போதும் ஏறும்போதும் வலது காலை நீட்டி லிப்ட் கதவுகள் மூடாமல் பார்த்துக்கொள்ளும். இல்லையேல் டப்பென மூடிக்கொள்ளும்.
ஒட்டகச்சிவிங்கி பணியில் சேர்ந்த முதல் இரண்டு வாரங்களாகக் கலெக்டர் ஊரில் இல்லை. பயிற்சிக்கு வெளியூர் போயிருந்தார். அதற்குள் வளாகத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஒட்டகச்சிவிங்கி பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஒட்டகச்சிவிங்கி லிப்ட்டிலேயே சாப்பிட்டுவிடும். கழிவறைக்குப் போகாது. அடக்கி வைத்துக்கொண்டு பணி முடிந்தபின் மாலை காட்டுப்பகுதியில் போகும். மணி 6:00 ஆச்சு என்றால் லிப்ட்டை பூட்டிக்கொண்டு கிளம்பிடும். அய்ந்து நிமிடம் மட்டுமே போனால் போகட்டும் என எல்லோரும் இறங்கும்வரை காத்திருக்கும். இல்லையெனில் பத்தாவது மாடி என்றாலும் படிக்கட்டுகளில் தான் இறங்கிவர வேண்டும். கலெக்டரின் உதவியாளர் ஒட்டகச்சிவிங்கி கடுமையாகச் சத்தம்போட்டார்.
“கலெக்டர் வரார்ரு… ஒரு பதற்றம் இல்லை? அவர் கீழ வந்து பத்துநிமிடமா நிற்கிறார். நாளையில் இருந்து அவர் வரும்போது லிப்ட் கீழ திறந்து இருக்கணும்”
கலெக்டர் எப்ப வருவாருன்னும் தெரியாதாம். அதுவே ஓர் ஏற்பாடு செய்துடுச்சு. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு வெள்ளை நாய் சுத்திக்கிட்டு இருக்கும். அதுகிட்ட கலெக்டர் காரைக் காட்டி, அது கட்டட வாளகத்திற்குள் நுழையும்போது ஒரு ஊளையிடு என்று சொல்லிவிட்டது. திட்டம் வெற்றி. ஆனாலும் கலெக்டரின் உதவியாளர் ஏதாச்சும் திட்டிக்கிட்டே இருப்பார்.
ஒரு நாள் காலை நாய் ஊளையிட்டது. நான்காம் தளத்தில் இருந்த லிப்ட் சர்ரென தரைத்தளத்திற்கு வந்துவிட்டது. எப்போதும் கலெக்டருடன் இருக்கும் அவரின் உதவியாளர் காரில் இருந்து இறங்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். “சார், நீங்க மேல போங்க, நான் என்னென்னு பார்த்துட்டு பத்து நிமிடத்தில் வரேன்” என்று கலெக்டரிடம் கூறினார்.
விறுவிறுவென கலெக்டர் லிப்ட்டின் அருகே சென்றார். ஒட்டகச்சிவிங்கி சரியாகக் காத்திருந்தது. உள்ளே வந்ததும், உதவியாளருக்காகக் காத்திருந்தது. “அவர் வரலை” என்றார். கதவினை மூட ஒட்டகச்சிவிங்கி அனுமதித்தது. ஆனால், ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தத் தளம் என்று சொன்னால் தான் பட்டனை அழுத்தும்.
“போகலாம்”
“போகலாம்…” மீண்டும் அதையே சொன்னது.
“சொல்றேன் இல்ல, போ”
“சொல்றேன் இல்ல, போ” என்று லிப்டைப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி சொன்னது.
“ஏய்..”
“ஏய்” என்று லிப்டைப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி சொன்னது.
“எங்கே போகணும்னு சொல்லுங்க” என்று பணிவாகக் கேட்டது. கலெக்டர் பதில் ஏதும் சொல்லாமல் 8 ஆம் எண் பட்டனை அழுத்த கையை நீட்டினார். இடது முன்னங்காலால் மறித்தது. வேகமாக மீண்டும் கைகளை எடுத்துச்சென்றார். தட்டிவிட்டது.
“என்னிடம் எந்தத் தளம் என்று கூறினால் உடனே சென்றிடலாம்” என்றது.
“உனக்கு நான் சொல்லமாட்டேன்” என்று கோபமாகக் கத்தினார்.
“அய்யா, முதலில் கோபமாகப் பேச வேண்டாம். மன்னிப்புக் கேட்டுவிட்டு, தளத்தின் எண்ணைச் சொல்லவும்” என மீண்டும் பணிவாகக் கேட்டது.
கலெக்டர் அப்படி சொல்வது போலத் தெரியவில்லை. திடீரென கையெடுத்து ஆரஞ்சு நிறப் பட்டனை அழுத்தினார். அது அடுத்த நொடி உச்சபட்ச வேகத்துடன் பதினோறாம் மாடிக்குச் சென்றது. மொத்தமே 10 மாடிகள்தானே? ஆமாம், பிய்த்துக்கொண்டு லிப்ட் மொட்டைமாடிக்கும் 10 அடிக்கு மேலே போய் நின்றது. இல்லை மிதந்தது. ஆனால், உள்ளே இருந்த கலெக்டருக்கு இது தெரியாது. ஒட்டகச்சிவிங்கிக்கு இது தெரியும்.
“சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர். நான் சொல்றத கேட்கமாட்டியா? உடனே திற”
“இப்ப திறந்தா கீழ விழுந்துடுவீங்க. மன்னிப்புக் கேளுங்க. சக ஊழியராகப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“அவ்ளோ திமிரா உனக்கு? உன் வேலை இன்னைக்கோட காலி” என மிரட்டினார்.
“முதல்ல நான் அனுமதிச்சாத்தான் வெளிய போகமுடியும். மன்னிப்புக் கேளுங்க கலெக்டர்”
இப்படியே வாக்குவாதம் நடந்தது. கலெக்டரின் உதவியாளர் கலெக்டர் எங்கே என்று பதறியபடி தேடினார். லிப்ட்டில் 11ஆம் மாடி எனக் காட்டியதும் அதிர்ந்தார். மொத்த அலுவலகமே மொட்டை மாடிக்கு ஓடியது. அந்தரத்தில் லிப்ட் பெட்டி இருப்பதைப் பார்த்து வாய் பிளந்தனர். உள்ளே யார் யார் இருக்கின்றார்கள், லிப்ட் எப்படி மேலே சென்றது என்று குழம்பினார்கள்.
“இப்பவும் ஒரு மன்னிப்புக் கேட்டா கீழ போயிடலாம்”
கலெக்டர் பதிலே பேசவில்லை.
மதியமாச்சு… தன் மதிய உணவைச் சாப்பிட்டது ஒட்டகச்சிவிங்கி. ரெண்டு கேரட்டை நீட்டியது. “சாப்பிடலைன்னா மயக்கம் வந்திடும்” என்றது. கலெக்டருக்கு முட்டிக்கிட்டு வந்தது. கோபம் அல்ல. சூச்சூ. ஆனாலும் மன்னிப்புக் கேட்பதாக இல்லை. ஒட்டகச்சிவிங்கி ஒரு பழைய எம்.ஜி.ஆர் பாடலை முணுமுணுத்தது. இன்னும் பழைய பாடல்களை முணுமுணுத்தது. திடீரென பக்கத்து ஆலையில் இருந்து சத்தம். மணி ஆறு ஆயிற்று. வேலை நேரம் முடிந்தது.
“இப்பவும் ஒரு மன்னிப்புக் கேட்டா கீழ போயிடலாம்” கலெக்டர் பதிலே பேசவில்லை.
சாவியைப் போட்டதும் கதவு திறந்தது. அப்போதுதான் கலெக்டருக்கு ஒட்டகச்சிவிங்கி சொன்னது புரிந்தது. இறுக்கமாக கம்பியைப் பிடித்துக்கொண்டார். டிப்பென ஒட்டகச்சிவிங்கி ஒரு காலினை வெளியே நீட்டியதும் அது பெரிதாக வளர்ந்தது. அந்தரத்தில் இருந்து மொட்டை மாடியில் கால் வைத்தது. மற்றொரு காலையும் நீட்டியது. அதன் இயல்பான உருவத்திற்குத் திரும்பியது. மீண்டும் தன் வாயினால் லிப்ட் சுவிட்சை அழுத்தி கதவை மூடியது. ஏய்! ஏய்! எனக் கத்தினார்கள். லிப்ட்டைப் பூட்டி அதன் சாவியை வாயில் வைத்துக்கொண்டது. யாருமே எதிர்பாராத வண்ணம் 10ஆம் மாடியில் இருந்து தொப்பெனக் கீழே குதித்தது. அடி எதுவும் படவில்லை. வாயில் இருந்த சாவியை நாயிடம் கொடுத்தது.
“நன்றி நண்பா, உன் உதவிக்கு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. அதன் பிறகு யாரும் அந்த ஒட்டகச்சிவிங்கியைப் பார்க்கவே இல்லை. அதைவிட முக்கியம்… அந்த வளாகத்தில் எல்லோருக்கும் மரியாதை வழங்கப்பட்டது. கலெக்டரை ஒரு க்ரேன் வந்து காப்பாற்றியது. “மன்னிக்கவும் மன்னிக்கவும்”னு அவர் சொல்லிட்டே இருந்தாராம்.