தொடர் கதை – 6 : நீதிமன்றத்தில் வாதிட்ட தேங்காய்
சிகரம்
தேங்காய் தனது கருத்துகளைத் தெரிவிக்க நீதிமன்ற வாயிலில் காத்திருந்தது.
நீதிமன்றப் பணியாளர், “தேங்காய்! தேங்காய்! தேங்காய்!’’ என்று மூன்று முறை அழைத்தார்.
தேங்காய் நீதிபதிமுன் சென்றது. தேங்காயைப் பார்த்த நீதிபதி,
“உங்கள் வாதங்களை நீங்கள் முன் வைக்கலாம்!” என்றார்.
“அய்யா எளிய மக்கள் முதல் எல்லோரும் என்னை நன்கு அறிவர். நான் தென்னை மரத்தின் விளைவு. தென்னை மரம் தன்னிடமுள்ள அனைத்துப் பொருளாலும் மக்களுக்குப் பயன்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் நான்.
நான் இளசாக இருக்கும்போது இளநீர் என்று அழைக்கப்படுகிறேன். இளநீர் சிறந்த பானம். அதில் நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளன. கோடை வெய்யிலுக்கு உரிய இயற்கை குளிர்பானம் இளநீர். எத்தனையோ இரசாயனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் இளநீர் தூய்மையான, சத்தான, உடல் நலம் காக்கும் குளிர்பானம். இளந்தேங்காய் முற்றியபின், அதிலுள்ள நார்களை அகற்றியபின், மூன்று கண்களுடன் முற்றிய தேங்காயாய் உருவாகிறேன்.
எனது நார் கயிறு, மெத்தை, மிதியடி என்று பல நார்ப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது.
எனது ஓடு அகப்பை செய்ய, பனைவெல்லம் செய்யப் பயன்படுகிறது. சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் நான் பயன் படுவேன்.
என்னை உடைத்தால் உள்ளே இருக்கும் வெண்ணிறப் பருப்பு வெளியில் வரும். அதைப் பச்சையாகவும் மென்று சாப்பிடலாம். அதன் துருவல் பல இனிப்புப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. பருப்பை அரைத்து சட்டினி, துவையல், இனிப்பு சேர்த்து சுவைக்கட்டி செய்யலாம்.
நன்கு முற்றிய, உலர்ந்த பருப்பைச் செக்கில் இட்டு ஆட்டினால் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதன் மூலம் சமைக்க, தலையில் தேய்க்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறேன்.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறேன்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறேன்.
கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறேன்.
உடலின் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறேன்.
உடலின் நீர்ச்சத்தைச் சீராக்க வைக்கிறேன்.
பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறேன்.
எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறேன்.
தோல் புற்றுநோயைக் தடுக்கிறேன்
தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறேன்.
தினமும் சிறிது மென்று சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு மற்றும் எண்ணெய்ப் பொருட்களை ரத்தத்தில் கலந்து தோலின் பளபளப்புத் தன்மையைக் கூட்டுகிறேன்.
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறேன்.
என்னிடம் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடலையும் சருமத்தையும் பாதுகாக்கிறது. அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியைக் குறைக்கிறது. காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்புத் தன்மையைக் குறைப்பதற்கு பயன்படுகிறேன்.
என்னிடம் உண்டாகும் பூவைச் சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பைக் குணப்படுத்தலாம்.
புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை உடலிலிருந்து வெளியேற்றுகிறேன்.
இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் தேங்காய் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்கு அதிகரிக்கிறேன்.
இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப் படுத்து கிறேன். செரிமானத்தைத் தூண்டுகிறேன். குடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன். மலச்சிக்கலைக் குணமாக்குகிறேன். சீறுநீரகப் பாதிப்பைக் குறைக்கிறேன். மேலும் சிறுநீரகத் தொற்று நோய்களையும் குணப்படுத்துகிறேன்.
எனவே, மாண்பமை நீதிமன்றம் என்னை உடைத்து சாலையில் நாசமாக்கும் செயலைத் தடுக்க வேண்டும். மக்களுக்கு நல்லுணவாகப் பயன்படும் என்னைச் சாலையில் நசுக்கிப் பாழாக்குவது குற்றமல்லமா? உணவுப் பொருள் பாழாவதோடு, சாலையில் செல்வோர் வழுக்கி விழுந்து அடிபடும் ஆபத்தும் உள்ளது. எனவே, தேங்காயை மூடநம்பிக்கையின் பிடிப்பில் பாழாக்குவதைத் தடை செய்யும்படி தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்’’ என்றது தேங்காய்.
தேங்காய் கூறியவற்றைக் கேட்ட நீதிபதி,
“அருமை! அருமை! தேங்காய்ச் சட்டினியின் சுவையால் காலையில் இரண்டு இட்லிகளைக் கூடுதலாகச் சுவைத்தேன் “என்று சொல்லி நீதிமன்றத்தை கலகலப்பாக்கிய நீதிபதி,” உங்கள் தரப்பு வாதங்களை மிகச் சிறப்பாக எடுத்து வைத்துள்ளீர்கள்.
இந்த வழக்கு அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்வாதம் புரிவோர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டு, தங்கள் கருத்துக்களைக் கூறலாம்” என்று அன்றைய அமர்வை நிறைவு செய்தார்.
(தொடரும்)