பழகுமுகாம் : எழுபத்து நான்கு பிஞ்சுகள்! எத்தனை ஆயிரம் நினைவுகள்?
தொகுப்பு : உடுமலை
தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2.5.2023 அன்று சின்னச்சின்ன பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.
அன்று தொடங்கி 6.5.2023 வரை நடைபெற்ற பழகு முகாமில் பங்கேற்ற பட்டாம்பூச்சிகள் மொத்தம் 74.
அந்த பெரியார் பிஞ்சுகளுக்கான “பழகு முகாம்’’ பல்கலைக்கழகத்தில் காலை 10:30 மணியளவில் தொடங்கியது.
தொடக்கத்திலேயே மின்சாரம் நின்றுபோனது! அதன் காரணமாக சிறார்கள், பதற்றப்பட்டு விடாமல் இருக்க, மின்சாரத்திலிருந்தே கேள்வி – பதில் வகுப்பு தொடங்கப்பட்டது.
“மின்சாரம் என்பது என்ன? அதைக் கண்டுபிடித்தவர் யார்? இவ்வுலகம், அதனால் அடைந்து வரும் மேம்பாடுகள் என்னென்ன?” என்று அவர் ஸ்விட்ச் போட்டவுடன், பளிச்சென்று எரியும் விளக்குகளாக மாணவர்கள் பதில் அளித்தார்கள். சிறார்கள் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தொடக்க விழா முடிந்து மதிய உணவு நேரம் வர, உணவு உண்டுவிட்டு சிறார்கள் அனைவரும் நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர்.
மாணவர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் குப்பையிலிருந்து கலைப்பொருள்கள் செய்யும் கலையையும் பழைய நாளிதழ்களைப் பயன்படுத்தி கூடை செய்யும் கலையையும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா கற்றுத் தந்தார். மாலை வந்தது. சிற்றுண்டியும் தேநீரும் வந்தது! அத்தோடு விஷ்ணு பாலாஜி, ஆரா ஆகிய பிஞ்சுகளுக்குப் பிறந்தநாளும் வந்தது. கேக் வெட்டபட்டது.
“நீண்ட நீண்ட காலம்…” ஆஹா, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து!
“பெரியார்” திரைப்படம் திரையிடப்பட்டது. சிறுவர்கள் அந்தச் சிந்தனைகளோடு தூங்கச் சென்றனர்.
இரண்டாம் நாளில் காலை 5:00 மணிக்கு எழுந்த சிறார்கள், ஓட்டப்பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் அவர்களது ஆர்வத்தின் அடிப்படையில் சிலம்பம், நீச்சல் கராத்தே, ஏரோபிக்ஸ், நடனம் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
உள்விளையாட்டு அரங்கில் அன்று ஒரு வித்தியாசமான விளையாட்டு. ‘பீப்பீ’ ஊதியபடியே ஒரு கோமாளி வந்தார்.
கோமாளி சிரிப்பு ஊட்டத்தானே வருவார்? பயப்படுத்தும் படியாக வந்தார்! ஆனாலும் சிறுவர்கள் சற்று நேரத்தில், கோமாளியாக வந்த திரைப்படக் கலைஞர் அன்பரசியுடன் நெருங்கி ‘கலாய்க்க’ ஆரம்பித்தனர். ‘ஏன் பயம்?’ என்ற கேள்விக்கு பேய் மாதிரி இருந்தது என்று ஒருவர் பதில் சொல்ல, “பேய் உண்டா? இல்லையா?’’ என்பதே வருப்பின் தலைப்பானது வகுப்பு முடிந்ததும்” பேயாவது, கீயாவது என்று தலைமுடியைத் தட்டிவிட்டுக்கொண்டனர் மாணவர்கள். தொடர்ந்து எந்திரவியல் வகுப்பு! அதில் “எந்திர மனிதன்’’ எப்படி வேலை செய்கிறான் என்னும் விளக்கம் கிடைத்தது.
மாலை மழை பெய்ததால், இரவு உணவின் போது பிள்ளைகளுக்கு குடிக்க வெந்நீரும் வழங்கப்பட்டது. வந்தவர்கள் அனைவரும் நம் குடும்பத்துக் குழந்தைகள் என்ற உணர்வு அன்றோ!
அடுத்த நாள், விடிந்தும் பிஞ்சுகள் தஞ்சாவூர் அரண்மனைக்கு அழைத்துச் சொல்லப்பட்டனர். மராட்டிய மன்னர்களின் ஓவியங்கள், ஓலைச் சுவடிகள், பழங்கால உடைகளைக் கண்டு குதூகலித்தனர். கலைக்களஞ்சியத்தைக் கண்டு துள்ளிக் குதித்தனர். திரும்பிப் பார்த்தால் 1965ஆம் ஆண்டு கரையொதுங்கிய திமிங்கலம் ஒன்றின் எலும்புக்கூடு யப்பா!… 92 அடி நீளம்!
பின் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியதும். கேள்வி கேட்கும் வழக்கத்தைச் சிறார்கள் எ தி ர் காலத்தில் கைக்கொள்ளும் வகையில் கவிஞர் கவிஞர் அவர்கள் கலகலப்பாகக் வகுப்பெடுத்தார்.
வகுப்புகள் முடியும். கீ-போர்டு வாசிக்கும் ஆற்றல் கொண்டிருந்த பெரியார் பிஞ்சு இனியன் தமிழ் வாசிக்க, காவிரி போல ஒவ்வொருவர் காதிலும் இசைவெள்ளம்! அதேபோல ஆராவும், இசைப்பிரியும் எஞ்சாமி… எஞ்சாமி பாடலைப் பாடினர். அறிவுமதி, கவின்மலர், பறை, யாழினி ஆகியோர் “கருப்பு நிறத்தினிலே எங்கள் பெரியார்’’ என்று பாடி அசத்தினர்.
அடுத்த நாள் பழகுமுகாமின் ஹைலைட்டாக வந்தது மு.க. கலை வாணனின் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
அவசரமான நேரங்களில் முடிவெடுப்பது, மூளையைக் கூர்மைப் படுத்துவது, ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து விளையாடுவது, தமக்குள் ஏற்படும் சிக்கல்களை சிக்கலில்லாமல் எப்படிக் களைவது போன்ற பண்புகளை, திறன்களை உருவாக்கும் கலையைக் கற்றுத் தந்தார் கலைவாணன்!
ஆர்கிடெக்ட் கூடத்தின் பின்புறத்தில் பிஞ்சுகள் அனைவரும் செம்மரக் கன்றுகள் நட்டனர்; கூட்டமாகச் சேர்ந்து சுவரோவியம் வரைந்தனர்; விளையாடினர்; கொண்டாடினர். ஆசிரியர் தாத்தாவுடன் உரையாடினர்; அய்ந்து நாட்கள் ஓடிய வேகம் அபாரமானது. எத்தனை நினைவுகள், நட்புகள், துள்ளல், அனுபவம், அறிவு, பண்பு, அனைத்தையும் ஒன்று திரட்டி தங்கள் மூளைக்குள் ஏந்திச் சென்றனர் பெரியார் பிஞ்சுகள்!.
பெரம்பலூர் மாவட்டத்திலிந்து பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பங்கேற்ற மாணவிகள் வானதி, ராதை, ஜாருனாஸ்ரீ, சன்மிதா ஆகியோரின் கருத்து
எங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள். நீச்சல் பயிற்சி, காலை உடற்பயிற்சி, அறிவியல் விளக்க நிகழ்ச்சி, மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, லில்லி புஷ்பம் அம்மாவுடன் கலந்துரையாடல், கவிஞர் உரையாடல், பிரின்சு உடன் Game
, ஒவ்வொரு வேளையும் வழங்கிய உணவு மிகவும் மகிழ்ச்சி, பெரியார் திரைப்படம்,Group Photo, Joker drama, Fire less cooking, Art & Craft class,
, அய்ன்ஸ்டீன் அரங்கில் நடந்த நிகழ்ச்சிகள், Animation Lab, Astronomy Class, Wall paint, Key Board Music, Telescope
விளக்கம், Dance Programme.
தகவல்: பெ. நடராஜன், ப.க. தலைவர்.
நன்றிக் கடிதம்
அன்புள்ள ஆசிரியர் தாத்தாவுக்கு வணக்கம்., பழகு முகாமில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி நீச்சல். மேலும் முகாமில் சிலம்பம், கராத்தே, ஏரோபிக்ஸ் இவற்றை நான் கற்றுக்கொண்டேன். என் நண்பர்கள், கவிஞர் அய்யா, பிரின்சு அய்யா மற்றும் ஆசிரியர்கள் சூழ எனது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றதை நினைந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. மந்திரம் எதுவுமில்லை; அனைத்தும் தந்திரமே என்று அறிந்துகொண்டேன். இடையில் பெரியார் திரைப்படத்தின். கடைசிக் காட்சி எங்கள் கண்ணில் நீர் வரவைத்தது. பெரியாரைப் பின்பற்றினால் ஜாதி – தீண்டாமை இருக்காது. இறுதி நாளில் நடைபெற்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நகைச்சுவையாகவும், அறிவுப் பூர்வமாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது. இந்த முறை தங்கை அகராவுடன் வந்தேன், அடுத்த முறை தம்பி தீராவுடன் வருவேன்.
உங்கள் அன்புப் பேத்தி,
அ. ஆரா, VII-A
நாள்: 08.05.2023
திண்டுக்கல்
பெற்றோர் மகிழ்ச்சி!!
மைக்ரோஸ்கோப் முதல் டெலஸ்கோப் வரை
2023 மே, 2-முதல் 6 வரை தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வெற்றிகரமான 14ஆம் ஆண்டு பெரியார் பிஞ்சு பழகுமுகாமில் எனது மகன் ஆனந்த பிரபாகரன் கலந்து கொண்டான்.
சிந்தனையைத் தூண்டும் வகையில் டெலஸ்கோப் வைத்து அதன் பயன்பாடு, கையில் கட்டியுள்ள கயிறுகளில் உள்ள பாக்டீரியாக்களை மைக்ராஸ்கோப் மூலம் குழந்தைகளுக்குக் காண்பித்தல், இரத்த வகைகள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதைக் குழந்தை களிடம் நேரடியாகச் செய்து காட்டுதல் போன்று அறிவியல் ஆய்வாளர்களைக் கொண்டு அறிவியல் ரீதியாகப் பல உண்மைகள் விளக்கிக் காட்டப்பட்டன.
மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி மூலம் மூடநம்பிக்கை குறித்து விளக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் நன்கு புரிந்து உணரும் வகையில் பெரியாரியல் சிந்தனை அவர்களின் உள்ளங்களில் விதைக்கப்பட்டது. குழந்தைகளுடன் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா தங்கியிருந்து கலந்துரையாடினார். இறுதி நாளில் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடினார். இறுதி நாள் நிகழ்ச்சியில் அதிரடி அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் குழந்தைகள் தங்குவதற்குசிறப்பான தங்குமிடம், அறுசுவை உணவுகளை வழங்கியும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நிருவாகத்திற்கும், துணை வேந்தர், பேராசிரியர்கள், ஊழியர்கள், மற்றும் தன்னார்வலர்களுக்கும், குழந்தைகள் வீட்டுக்கு வரமுடியாது என அடம்பிடிக்கும் வகையில் தங்கள் குழந்தைகள் போல் நடத்திய பேராசிரியர்கள் அனுஷ்யா, சித்ரா, றிஸிளி, பெரியார் திடல் பவானி, குழந்தைகளின் நண்பராக முகாமைச் சிறப்பாக வழி நடத்திய பிரின்சு என்னாரெசு பெரியார், குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறிய உடுமலை வடிவேல், கலைவாணன் அய்யா அவர்களுக்கும், பழகு முகாமுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும் பெரியார் பிஞ்சுகளின் சார்பாக இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க பெரியார்! வெல்லட்டும் திராவிடமாடல்!
வழக்குரைஞர் சு.தம்பிதுரை, மதுரை