உண்ணாவிரதம் உடலுக்கு உகந்ததா?
– சிகரம்
உண்ணாமல் இருப்பது பல்வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. மதநோக்கில், மதக்கோட்பாட்டின்படி ஒருவேளை அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் என்று மேற்கொள்ளப்படுகின்றது. சிலர் உடல் நல நோக்கம் என்று எண்ணி ஒரு வேளை அல்லது ஒரு நாள் உண்ணாமல் இருப்பதும் வழக்கத்தில் உள்ளது. தனது எதிர்ப்பைக் காட்ட அல்லது தனது நோக்கம் நிறைவேறும்வரை உண்ணாமல் இருப்பதும் உண்டு.
ஆனால், எந்த நோக்கத்திற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டாலும் அது உடலுக்கும் அறிவுக்கும் உகந்த செயல் அல்ல. தந்தை பெரியார் அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதைக் கண்டித்தார். எத்தனையோ வகையான போராட்டங்களை மேற்கொண்ட அவர், உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டும் மேற்கொள்ளவில்லை. காரணம், அது ஒரு கோழைத்தனம் என்பதோடு, பகுத்தறிவிற்கும் உகந்ததல்ல என்பதுதான்.
நமது வயிற்றுக்குள் சுரக்கும் சுரப்பிகள் அதனதன் வேலையைத் தவறாது செய்து வருகின்றன. அப்படியிருக்கும் போது, வேளை தவறாது உணவு உண்ண வேண்டியதும் கட்டாயம் ஆகும். இல்லையெனில் அச்சுரப்பிகளினால் உடல் நலம் பாதிக்கப்படும்.
குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருக்கவே கூடாது. அதுவும், சர்க்கரை நோய்க்கு உரிய மாத்திரை எடுத்துக் கொள்கின்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. இருந்தால், உடலுக்குத் தேவையான சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து, உடல்நிலை பாதிக்கப்படும்.
ரம்ஜான் விரதம் இருப்பது, அமாவாசை, கார்த்திகை விரதம் போன்ற விரதங்கள் இருப்பதும் உடல் நலத்திற்குக் கேடு ஆகும். உணவு என்பது உயிர்வாழவும், நலம் பேணவும், நோய் தடுக்கவும் கட்டாயம். உரிய நேரத்தில் உரிய அளவு கட்டாயம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். வேளை மாறி உண்பதும், வேளை தவறி உண்பதும் தவறு ஆகும். நேரம் தவறாது உண்பது கட்டாயக் கடமையாகும்.
செரியாமை போன்ற நிலைகள் வரும்போது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவைத் தவிர்க்க வேண்டும். அப்போதுகூட, நீர் உணவுகளை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
மாதம் ஒரு நாள், வாரம் ஒரு நாள் வயிற்றை வெறுமையாக வைத்தல் நலம் என்ற கருத்து, மருத்துவ ரீதியாகவும், உடல் நல நோக்கிலும் தவறு.
பள்ளியில் படிக்கும் பிஞ்சுகள் வேளை தவறாது சத்தான உணவையும், தூய நீரையும் தேவையான அளவிற்குக் கட்டாயம் உண்ண வேண்டும். உண்ணாவிரதம் என்பது உடலுக்கு உகந்ததல்ல.