உலகப் புகழ் பெற்றவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய வீரர் ஓசே ரிசால் (JOSE RIZAL)
– சாரதாமணி ஆசான்
முன்னுரை: ஆயிரக்கணக்கான விண்மீன்கள் வான்வெளியை வலம் வருகின்றன; ஆனால் 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி நம் உள்ளங்களில் நீங்கா இடம்பெறுவது வால்நட்சத்திரம் (Comet) ஒன்றுதான். அதுபோல் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், உலக வரலாற்றிலும் வால் நட்சத்திரமாக விளங்கியவர்தான் ஒசே ரிசால். வாழ்ந்தது 35 ஆண்டுகள். ஆனால், சாதித்தது பலநூறு ஆண்டுகாலம் வாழும் மனிதகுலத்திற்கான நெறிமுறைகள்.
பெற்றோரும் இளமையும்:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இக்குறள் கருத்தை – மெய்ப்பித்தவர்தான் இவரது தந்தை பிரான்சிஸ்கோ மெர்காடோ ரிசால். (Francisco Mercado Rizal) இவரது அன்னை டயோடோரா அலான்சோ (Teodora Alonzo) அன்பிலும், பண்பிலும் பொறுமையிலும் சிறந்தவர். 1861ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் மெய்சிக் ஸ்டாகுருஸ் எனும் இடத்தில் ஒசே ரிசால் பிறந்தார். 3 வயதில் அன்னையிடம் எழுத்துகளைக் கற்றார். 5 வயதில் எழுதும் திறனும் 8 வயதில் கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவர் வாழ்நாளில் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஊக்கம் அளித்தார். ஏனெனில், கல்வி இல்லாதவன் அடிமைப் படுத்தப்படுவதுடன் அடக்கி வைக்கப்படுகிறான். இதனை அவரது கவிதை வரிகள் வாயிலாக அறியலாம். அவ்வரிகள்:
தரமான கல்விதான் அமைதியை நல்கும் உரமான வாழ்வும் உயரிய பண்பும்
கல்வியால் சிறக்கும்
கல்வி ஒன்றுதான் நம்பிக்கை இதயங்களில் மகிழ்ச்சியை ஊட்டும் அல்லல்பட்ட சமுதாயத்தின் பாதுகாப்புப் பாசறை கல்வியே! நாட்டில் எல்லோருக்கும் தரமான கல்வி கற்பிக்கப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் கல்விக் கண் திறந்தவர்தான் ஒசே ரிசால்.
இவரது வாழ்வின் திருப்புமுனை:
தனது உறவினர் ஒருவருக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லச் சதித்திட்டம தீட்டியதாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டார் இவரது தாயார். செய்யாத குற்றத்திற்காக அதிகாரத்தின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது இருப்பிடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாந்தா குருஸ் (Santa Cruz) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதில் என்ன கொடுமை என்றால் சிறைச்சாலைக்கு காலம்பாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவும் நடந்தே செல்லும்படி அதிகாரிகளால் ஆணையிடப் பட்டார். இரண்டாண்டு காலம் வெஞ்சிறையில் வாடினாலும் எந்தவொரு கலக்கமும் இல்லாமல் சிறையில் தன்னடக்கத்துடனும் தனித்தன்மையுடனும் வாழ்ந்து குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை அடைந்தார் இவரது தாயார். தாயார் சிறையில் வாடியபோது இவருக்கு வயது 11. அந்த வயதிலும் இந்த நிகழ்வு இவர் உள்ளத்தில் ஆழப்பதிந்தது. பிற்காலத்தில் இவரைப் பன்முகத் திறனாளராக மாற்றியது இந்நிகழ்வு. நாடு கடத்தப்பட்டாலும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆட்பட்டாலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் அமைதியாக எதிர்கொள்ளும் வலிமையை இவர் பெற்றது இதற்குப் பின்னர்தான்.
பெற்ற பட்டங்கள் – பயணித்த நாடுகள்:
இவர்தம் 16ஆம் வயதில் இளநிலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் சான்டோ டோமாஸ் (Santo Tomus) பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத் தம் பெயரைப் பதிவு செய்தார். தம் சொந்த நாட்டில் படிக்கும் வாய்ப்பிருந்தும் தம் இனத்து மாணவர்கள் அதாவது பிலிப்பினோ இனத்து மாணவர்கள் தரக்குறைவாக நடத்தப்படும் நிலை கண்டார். சம நீதியும், சம வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார். மேல் படிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று தமக்குக் கிட்டிய வாய்ப்பைப் பயன்படுத்தி 23 வயதில் மருத்துவர் பட்டம் பெற்றார். இவர் அடைந்த பெருமைகள் – பெற்ற பட்டங்கள் அனைத்தும் தம் நிலையை உயர்த்தவோ – உயர் பதவிகளை அடையவோ பயன்படவில்லை. மாற்றாக தம் இனம், ஸ்பெயின் நாட்டின் அடக்குமுறையிலிருந்து மீண்டெழவும் _ உயர்கல்வி கற்று ஏனைய நாடுகளுக்கு இணையாகச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவும் பயன்பட்டது.
இனவுணர்வும் இனமானமும்: நலிவுற்ற பிலிப்பினோ இனம் உலக அரங்கில் இருக்கும் இடம் தெரியாமல் ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட இவ்வினம் விழிப்புற்றெழும் வகையில் இவர் தமது எழுத்தாற்றலை ஆயுதமெனக் கையாண்டார். 1887ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நோலி மி டேன்கேரே (NOLI ME TANGERE) எனும் புதினத்தை அங்கதம் (Satire) எனும் இலக்கண முறையில் எழுதினார். இப்புதினம் மக்கள் உள்ளங்களில் புரட்சிக் கனலை உருவாக்கியது. அடக்கப்பட்ட மக்கள் விழிப்புற்றெழுந்தனர். பிலிப்பைன்ஸ் தன்னாட்சி பெற இவரது எழுத்துகள் பெரும் துணை புரிந்தன. அதைத் தொடர்ந்து மத குருமார்களின் விவேகமற்ற செயல்களுக்கும் – ஸ்பெயின் நாட்டு ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைக்கும் சாட்டை அடியாக 1891இல் எல்ஃபிலிபஸ்டி ரிஸ்மோ (ELFILIBUSTERISMO) என்ற அற்புத நாவலை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் அடாவடி நடவடிக்கைகளைத் தம் கதாபாத்திரங்கள் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டியதால் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டார். கருத்துவெள்ளம் இவர்தம் எழுத்துகள் வாயிலாக கடல்திறந்த மடைபோல் கரைபுரண்டு ஓடக்கண்டனர் அதிகார வர்க்கத்தினர். புரட்சிப் புயல் எழும்பும் முன்னர் இவரை 1892ஆம் ஆண்டு டேபிடன் (DAPITAN) என்ற இடத்திற்கு நாடு கடத்தினர். கனிந்த நெஞ்சமும் உயர்ந்த குறிக்கோளும் கொண்ட ரிசால் இதனால் கலக்கமடையவில்லை. தம் இன உயர்வுக்காக இவர் அங்கு (டேபிடன் நகரில்) இடைவிடாது உழைத்தார்.
அங்கு இவர் விவசாயத் தொழில் நுட்பங்களை உணர்ந்து விவசாயத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்; ஒரு மருத்துவ மனைக்குப் பொறுப்பேற்று நடத்தினார். மாணவர்களுக்கு முறையான கல்வியைச் சிறந்த முறையில் கற்பித்தார். மாணவர்களுக்கு ஆங்கிலம் – ஸ்பானியம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.
இவர் தமது வாழ்நாளில் சிறந்த கலைஞராக, கட்டிட வல்லுநராக, பொருளியல் நிபுணராக, இசை வல்லுநராக, இயற்கையை வரவேற்பவராக, புதின ஆசிரியராக, உளவியல் அறிஞராக, அறிவியல் மேதையாக, சமுதாய சீர்திருத்தச் சிந்தனையாளராக, தொழில் முனைவோராக, பொருளியல் அறிஞராக, வரலாற்று ஆசிரியராக, படைப்பாளியாக, தேசப்பற்றாளராக, கொள்கைப் பரப்பாளராக, தத்துவ மேதையாக, சிறந்த சிற்பியாக, உயர்ந்த பாடகராக சுருங்கச் சொன்னால் பன்முகக் காவலராக விளங்கினார்.
இத்தகு ஆற்றல் படைத்த இவர் 1896ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் நாள் தமது 35ஆம் வயதில் தம் இன மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க அமைதிவழி காட்டிய காரணத்தால் ஸ்பெயின் நாட்டு ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்ந்தவர்கள் என்றும் சாவதில்லை. இவர் இறப்பிற்குப் பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் தன்னாட்சி பெற்றனர். தன்னிகரில்லா இவரது தன்னலமற்ற உழைப்பு உலக வரலாற்றில் இன்று அழியாத இடம் பெற்றுள்ளது.
இவர் தற்கால இளைய சமுதாயத்தினருக்கு விட்டுச் சென்ற உன்னத மொழிகள் வருமாறு: நான் என் நாட்டையே முழுவதும் நேசிப்பதால் வேறு எதையும் நேசிக்க விரும்பவில்லை; என் நாட்டின் முன்னேற்றம் பற்றிய எண்ணங்களே என் உள்ளம் முழுதும் நிறைந்திருப்பதால் பிற எண்ணங்கள் என் சிந்தனையில் தோன்றுவதில்லை. என் உதடுகள் என் இன மக்களாகிய பிலிப்பினோஸ் மக்களின் பெயர்களை மட்டுமே உச்சரிப்பதால் பிற மக்களின் பெயர்களை உச்சரிக்க மறந்துவிட்டன. இக்கால இளைய தலைமுறை தம் நாடு, இனம், மொழி ஆகியவற்றின்பால் தணியாத பற்றுக்கொண்டு எழில்மிகு வாழ்வு வாழவேண்டும் என்பதே இவ்வரிகள் வாயிலாக இவர் சொல்லிச் சென்ற உண்மை.
நாட்டினர் வெகுமதிகள்: இன்று பிலிப்பைன்ஸ் நாட்டினர் இவர் கூறிச்சென்ற சமத்துவ எண்ணங்களையும் – சிறந்த குறிக்கோள்களையும் அனைத்துப் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றின் பாடத்திட்டத்தில் அனைவரும் பயின்று பயன்பெறும் வண்ணம் சேர்த்துள்ளனர்.
இவரது புகழை வளர்க்கும் வண்ணம் நாடு முழுதும் நினைவுச் சின்னங்களை அமைத்தனர். மேலும், நாட்டின் நாணயங்களில் இவரது உருவத்தைப் பொறித்து – பிலிப்பினோ நாட்டின் தேசிய வீரர் என்ற அங்கீகாரம் அளித்துச் சிறப்புச் சேர்த்தனர்.