அறிஞர்களின் வாழ்வில்…
பீரோவில் விளக்குமாறு
அமெரிக்க ராணுவத்தில் வாழ்க்கையினைத் தொடங்கி 1942 இல் -ஜனரலாகப் பதவி வகித்தவர் அய்சன் ஹோவர். 1944 ஆம் ஆண்டு பிரான்ஸ் படையெடுத்த போது நேச நாட்டுப் படைத் தளபதியாகச் செயல்பட்டு வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக 2 முறை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு, நிருவாகத்தைக் திறம்பட நடத்தினார். கிராமத்தில் வளர்ந்தவர் என்பதால் கூட்டங்களில் பேசும்போது மாட்டுக்காரரின் கதையைச் சொல்லி விளக்குவார்.
மாடுகள் வைத்திருப்பவரிடம் பசு மாட்டை விலைக்கு வாங்க ஒருவர் வந்தார். எந்த வகை மாடு , எவ்வளவு பால் கொடுக்கும்? எவ்வளவு வெண்ணெய் கிடைக்கும் என்ற பல கேள்விகளைக் கேட்டார். மாட்டுக்காரரோ, எல்லாவற்றிற்கும் தெரியாது என்று சொல்லிவிட்டுக் கடைசியில், என் மாடு ரொம்ப நேர்மையானது, தன்னிடமிருக்கும் பால் மொத்தத்தையும் ஒளிக்காமல் கொடுக்கும் என்றார்.
அந்தப் பால்காரர் நிலையில்தான் நான் இருக்கிறேன், என் சிந்தனையிலுள்ள மொத்தத்தையும் உங்களுக்குத் தருகிறேன் என்பார்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது வெள்ளை மாளிகையில் வேலைசெய்யும் ஓர் அறையின் பீரோவில் விளக்குமாறு (தொடப்பம்) வைத்திருந்தார்.
அங்கு வருபவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஏன் பீரோவினுள் விளக்குமாறு உள்ளது என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது. எப்படிக் கேட்பது என்ற பயத்திலேயே யாரும் கேட்கவில்லை.
இதனை, ஜனாதிபதி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு முறை வெள்ளை மாளிகைக்கு வந்த முக்கியப் பிரமுகர்கள் பீரோவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அய்சன், பீரோவையே ஆச்சரியமாகப் பார்க்கிறீர்களே! நீங்கள் ஏன் என்று கேட்காவிட்டாலும் நானே சொல்கிறேன் என்று காரணத்தினை விளக்கினார்.
நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் பல விலை உயர்ந்த பரிசுகள் வந்தன. அவற்றைத் தனி அறையில் பூட்டி வைத்துள்ளேன். வந்த பரிசுகளுள் ஒன்றே விளக்குமாறு. அதனுடன் கடிதம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில், நீங்கள் அரசியலில் உள்ள குப்பை கூளங்களைச் சுத்தம் செய்ய அனுப்பியுள்ளேன் என எழுதப்பட்டு இருந்தது.
அதனை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பார்வைபடும் இடத்தில் வைத்துள்ளேன் என்றார். மேலும், தலைமைப்பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு மேசையின்மீது மிகச் சாதாரண மெல்லிய கம்பியை வைத்துக் கொள்ளுங்கள். கம்பியை இழுத்தால் எளிதாக இழுக்கலாம்;
அதையே தள்ளிப் பாருங்கள், அது எளிதில் நகராது. மக்களை ஆள்வதோ தலைமை தாங்குவதோ இது மாதிரிதான் என்று விளக்கமளித்துள்ளார் அய்சன் ஹோவர்.