விழிப்புணர்வு
உனது உடம்பு உன்னுடையது…
பிஞ்சுகளே,
உங்கள் உடலினைத் தொடுவதற்கோ அல்லது பார்ப்பதற்கோ உங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை. ஏனெனில், உங்கள் உடல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
நண்பர்கள், உறவினர்கள் உங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது உங்களைத் தழுவி அணைக்கலாம் அல்லது முத்தம் கொடுக்கலாம். அப்போது உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக தழுவி அணைத்ததையோ, முத்தம் கொடுத்ததையோ யாரிடமும் சொல்லக்கூடாது என்று உங்களிடம் யாராவது கூறினால், இச்செயலை உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் உடல் உறுப்புகளில் எந்த உறுப்புகள் உள் ஆடைகளால் மறைக்கப்படுகின்றனவோ அவையே உங்களது தனிப்பட்ட உறுப்புகள் எனப்படுகின்றன. உங்கள் உடல் ஆரோக்கியம் தவிர பிற காரணங்களுக்காக மற்றவர்கள் அவற்றைப் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது.
சிலர், விலை உயர்ந்த சாக்லேட்கள், பரிசுப் பொருள்கள் அல்லது நீங்கள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொள்ளும்படிச் சொல்லி பணம் கொடுப்பார்கள். பின்பு, அவர்கள் சொல்லும்படி செய்யச் சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடாது. மேலும், அவர்கள் கொடுக்கும் எந்தப் பொருளையும் வாங்கவும் கூடாது.
நீங்கள் மறுத்தும் அவர்கள் சொல்வதைச் செய்யச் சொன்னால், செய்ய மாட்டேன், என்னால் செய்ய முடியாது என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். அதனையும் மீறி, அவர்கள் வற்புறுத்தினால் அங்கிருந்து சென்றுவிடுங்கள். பக்கத்தில் ஆட்கள் யாரேனும் இருப்பதுபோல் தோன்றினால் உரக்கச் சத்தமிட்டு, வேண்டாம் என்னைத் தொடாதீர்கள் என்று கூறுங்கள்.
வெளியில் செல்லுமிடங்களில் உங்களுக்குச் சந்தேகம் தோன்றும்படியோ, பயம் ஏற்படும்படியோ யாராவது உங்களைத் தொட்டால் உங்கள் பெற்றோரிடமோ, தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களிடமோ உடனே சொல்லிவிடுங்கள்.
சில பெரியவர்கள் முதலில் நீங்கள் சொல்வதை நம்ப மாட்டார்கள். குழந்தை ஏதோ தெரியாமல் சொல்கிறது என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் மனம் உடைந்துவிடக் கூடாது. பெரியவர்களிடம் சென்று மீண்டும் முறையிட வேண்டும். முதலில் சொன்னவர்கள் கண்டுகொள்ள வில்லையெனில், உங்கள் மீது அதிக அன்புகாட்டும் வேறு ஒருவரிடம் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்வதை நம்பும்வரை சொல்லுங்கள். சில குழந்தைகளுக்கு, அவர்களது வகுப்பாசிரியரை அல்லது குறிப்பிட்ட பாடம் நடத்தும் ஆசிரியரை மிகவும் பிடித்திருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் நீங்கள் சொல்வதைக் கண்டுகொள்ளாத சூழ்நிலையில், உங்களுக்குப் பிடித்த ஆசிரியரிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்லி அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்கலாம்.
நீங்கள் வேண்டாம் என மறுத்தும் உங்களை யாரேனும் துன்புறுத்தினாலோ, அல்லது அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலோ அதற்காக கவலைப்படக் கூடாது. மன தைரியத்தை இழந்துவிடக்கூடாது.
உங்கள் விருப்பத்தால் எந்தச் செயலும் நடைபெறவில்லை. எனவே நடைபெற்ற செயலுக்கு நீங்கள் பொறுப்பல்ல. இனி, நீங்கள் எப்படி கவனமாக இருக்கவேண்டும் என்பதைச் சிந்தனை செய்யுங்கள்.
நன்றி : துளிர்,www.tulir.org