சிந்திப்போம்…
சுதந்திரம்
– செல்வா
முகில், தமிழரசன், இனியவன் மூவரும் நல்ல நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயனுள்ளதாய்க் கழிக்க விரும்பினர். எங்கே செல்லலாம் என்று சிந்தித்தபோது, மிருகக்காட்சிசாலை (Zoo) செல்லலாம் என்றான் இனியவன்.
மிருகக்காட்சிசாலையா… இதுவரை நான் பார்த்ததே இல்லை, போகலாமே என்றான் முகில். சென்ற கோடை விடுமுறையில்தான் என் பெற்றோருடன் சென்று பார்த்து வந்தேன் என்றான் தமிழரசன்.
நானும் முகிலும் இதுவரை பார்த்ததில்லை. எங்களுக்காக நீயும் வா, இன்னொரு முறை பார்த்து வரலாம். நண்பர்களுடன் சென்று பார்த்து வருவதிலும் தனி மகிழ்ச்சி உள்ளது. எனவே, அடம்பிடிக்காமல் வா போய் வரலாம் என்றான் இனியவன்.
நண்பர்கள் மூவரும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றனர். அப்போது முகில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காட்டிற்குச் சென்று அனைத்து மிருகங்களையும் பார்க்க முடியாது. எனவே, பெரும்பாலான மிருகங்களைப் பார்ப்பதற்கு வசதியாக உள்ளது என்றான்.
கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த மிருகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தனர். அதோ சிங்கராஜா நம்மை முறைத்துப் பார்க்கிறார் என்றான் தமிழரசன்.
சிங்கம் மட்டும் நம்மைப் பார்த்து முறைக்கிறது? இங்குள்ள அனைத்து மிருகங்களும் நம்மை மட்டுமல்ல, மனித இனத்தையே முறைத்துப் பார்த்து வெறுத்துக் கொண்டிருக்கின்றன என்றான் இனியவன். எதை வைத்து அப்படிச் சொல்கிறாய் என்றான் முகில்.
மனிதர்களே! நாங்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தோம். காட்டில் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த எங்களை நாட்டிற்குள் அழைத்து வந்து பசி பட்டினியோடு கூண்டிற்குள் அடைத்து வைத்துள்ளீர்களே என்று கேட்பதுபோல் உள்ளது.
மேலும், உங்கள் சுயதேவைக்குப் பணம் ஈட்டுவதற்காக எங்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? நீங்கள் கூண்டில் அடைபட்டிருப்பதைப்போல் நினைத்துப் பாருங்கள். அப்போது எங்கள் துன்பம் உங்களுக்குப் புரியும் என்று சொல்வது போலவும் உள்ளது என்று சொல்லிவிட்டு, பறவைகளைப் பார்க்கலாம் என்று நண்பர்களை அழைத்துச் சென்றான் இனியவன்.
கீச்… கீச்… என்று ஒலிகளை எழுப்பிக் கொண்டு விதவிதமான பறவைகள் வட்டமிட்டுக் கொண்டும், கூண்டிலிருந்த கம்பிகளில் அமர்ந்து கொண்டும் காண்போர் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த முகில், எவ்வளவு மகிழ்ச்சியாக சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்றான். முகிலுக்கு வண்ண வண்ணப் பறவைகள் மீது குழந்தையிலிருந்தே தனிப் பிரியம் உண்டு.
முகில் கூறியதைக் கேட்ட தமிழரசன் கேலி செய்யும் விதத்தில் சிரித்தான். உன் சிரிப்பின் அர்த்தம் என்ன என்றான் முகில். பறவைகள் மகிழ்ச்சியில் சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்றதைக் கேட்டதும் தனக்குச் சிரிப்பு வந்துவிட்டதாகக் கூறியதோடு,
எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும், எங்களை விட்டுவிடுங்கள் என்று சத்தமிடுவது போல் உள்ளது. இப்பறவைகளை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும், தங்கள் இனத்தைப் பிரிந்தமைக்காக கண்ணீர் வடிப்பதோடு, காடு, மரம், மலை என்று அனைத்து இடங்களிலும் சுற்றிப் பறக்கும் எங்களைத் துன்பப்படுத்துகிறீர்கள் என்று சொல்வது போலவும் உள்ளது என்றான் தமிழரசன்.
ஏதாவது சாப்பிடலாம் என நினைத்த நண்பர்கள் வெளியில் வந்தனர். தேநீர் சாப்பிட நினைத்தனர். அப்போது முகில் மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்பு, டேய் தமிழ், இனியவா நான் உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பினான்.
ஒன்றும் புரியாத நண்பர்களும் முகிலுடன் சென்றனர். ஏன் திடீரென்று கிளம்பிவிட்டாய், உடல்நிலை ஏதும் சரியில்லையா என்று கேட்டுக்கொண்டே வந்தனர்.
பதில் எதுவும் சொல்லாமல் வந்த முகில் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். கீச்… கீச்… என்ற பறவைகளின் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தனர். முகில் ஆசையாக – அன்பாக வளர்க்கும் வண்ண வண்ணப் பறவைகள் கூட்டினுள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
நண்பர்களே! என் ஆசைக்காக நீண்ட நாள்களாக இந்தப் பறவைகளின் சுதந்திரத்தைக் கெடுத்து வளர்த்து வருகிறேன். என்னை ஓர் அறைக்குள் அடைத்து வைத்தால் எவ்வளவு துன்பப்படுவேன்? என்னால் அந்த அறைக்குள் இருக்கத்தான் முடியுமா? ஆகையால், இனியும் இந்தப் பறவைகளின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு நான் விரும்பவில்லை என்று கூறி கூண்டினைத் திறந்துவிட்டான். அனைத்துப் பறவைகளும் வண்ணச் சிறகுகளை விரித்து மகிழ்ச்சியாகப் பறந்து சென்றன.
மிருகக்காட்சிசாலை சென்றதால் உன் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பிற உயிர்களை நேசிக்கும் தன்மை வந்துள்ளது. பிற உயிரினங்கள் ஒன்றுக்கொன்று அன்புகாட்டி வாழ்கின்றன. மாடுகளின் முதுகில் குருவி, காகம் அமரும். பூச்செடிகளில் வண்டுகளும், வண்ணத்துப் பூச்சிகளும் தேன் பருக வரும். குருவிகள் வீடுகளில் கூடுகட்டி வாழும். நாய், பூனை, பசு, ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் மனிதர்களைச் சார்ந்தே வாழ்கின்றன.
பல உயிரினங்கள் மனிதர்களைச் சார்ந்து, மனிதர்களிடம் அன்புகாட்டி வாழும்போது, மனிதர்களாகிய நாம் மனிதர்களுக்குள்ளேயே ஜாதி, மத, இன வேறுபாடு, பகைமை ஏன் காட்ட வேண்டும்? வளரும் இளைய தலைமுறையினராகிய நாம் எல்லாப் பாகுபாடுகளையும் விடுத்து ஒற்றுமையாக வாழ்வோம் என்று உறுதி கொண்டனர்.