செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
பிஞ்சுத் தோழர்களே,
செயற்கை நுண்ணறிவு என்கிறோம் சரி. ஆனால், அப்படி என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால் அப்படியே மனிதனைப் போலவே சிந்திக்கும் எந்திரங்கள். மனிதனைப் போலவே, புரிந்துகொள்ளும் எந்திரங்கள். மனிதனைப் போலவே நுண்ணறிவு கொண்ட எந்திரங்கள். ஒரு செயலை மனிதனைப் போலவே செய்யும் எந்திரங்கள். மனிதனைப் போலவே முடிவெடுக்கும் எந்திரங்கள். மனிதனைப் போன்ற எந்திரம் – எந்திர மனிதன் – எந்திரன்.
மனிதனைப் போலவே என்றால்? ஒரு சிக்கல். மனிதன் ஒரு செயலை அவன் உடல் உதவியுடன் செய்கிறான், மதி (அறிவு) உதவியுடன் செய்கிறான். அப்படி என்றால் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் உடலைப் பற்றிச் சொல்லுகிறதா? அல்லது மனிதனின் மூளையைக் குறிக்கும் மதியைப் பற்றிச் சொல்கிறதா?
இரண்டும்தான். மனிதனைப் போன்ற செயல்களில் ஈடுபடும் வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோ (Robot) என்று அழைக்கிறோம். வெறும் கணினி உதவியுடன் மென்பொருள் மட்டும் என்றால் அதை செ.நு. செயலி என்றழைக்கிறோம். ரோபோ என்றால் செகோஸ்லோவேகிய மொழியில் அடிமை என்று பொருள்.
இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்வோம். மனிதன் சிந்திக்கிறான் – செயல்படுகிறான் – அல்லவா? அதாவது சிந்திப்பது ஒரு செயல், நடைமுறையில் செயல்படுவது ஒரு செயல்.
நீங்கள் ஒரு கதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், முழுக்க முழுக்க உங்கள் கற்பனைக் கதை. முதலில் ஒரு கதையை நீங்கள் சிந்திக்கிறீர்கள், பின்பு அந்தக் கதையை எழுதுகிறீர்கள். அதேபோல் நீங்கள் கற்பனையாக ஓர் ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில் அந்த ஓவியத்தைச் சிந்திக்கிறீர்கள்; பின்பு அதை வரைகிறீர்கள்.
இந்த இரண்டு வேலையையும் எந்திரம் செய்ய வேண்டும். பகுத்தறிவுடன் சிந்திப்பது, பகுத்தறிவுடன் செயல்படுவது. ஒரு ரோபோ முன்பு ஒரே நேரத்தில் ஒரு கார் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறது, இன்னொரு பக்கம் ஒரு சிறுமி மூழ்கிக் கொண்டிருக்கிறாள் என்றால் ரோபோ முதலில் யாரைக் காப்பாற்ற வேண்டும்? பகுத்தறிவுடன் சிந்தித்தால் சிறுமியைக் காப்பாற்ற வேண்டும்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் நாம் செயற்கை நுண்ணறிவு என்பதை நான்கு விதமாக விளக்கலாம்,
1. மனிதனைப் போல் சிந்திப்பது: உதாரணம், கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, ஒரு கேள்வி கேட்டால் புரிந்து கொண்டு பதில் சொல்வது.
2. மனிதனைப் போல் செயல்படுவது: எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் நடப்பது, ஓடுவது, நாட்டியம் ஆடுவது, ஒரு விளையாட்டைக் கற்றுக்கொண்டு விளையாடி வெல்வது.
3. பகுத்தறிவுடன் சிந்திப்பது: மனிதர்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சிந்திக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல நேரங்களில் மனிதர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்காமல் தவறிழைத்து விடுகிறார்கள். ஆனால், நுண்ணறிவு என்று விளக்க முனைந்தால் பகுத்தறிவுடன் சிந்திப்பது என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எடுத்துக்காட்டாக மனிதன் எப்படி உருவானான் என்று நீங்கள் செயற்கை நுண்ணறிவைக் கேட்டால், அது கதை விடாமல் டார்வின் பரிணாமக் கொள்கையை முதன்மைப் பதிலாகக் கொடுக்க வேண்டும்.
4. பகுத்தறிவுடன் செயல்படுவது: நாம் ஏற்கனவே பார்த்த சிறுமி எடுத்துக்காட்டு தான். கடலில் ஓர் எந்திரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது அதே நேரம் ஒரு சிறுமியும் மூழ்கிக் கொண்டிருக்கிறாள் என்றால், ரோபோ உடனடியாகச் சிறுமியைக் காப்பாற்ற முனைய வேண்டும். இது பகுத்தறிவுடன் செயல் படுவதற்கான ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு ரோபோவோ அல்லது ஒரு மென்பொருளோ மேலே நாம் பார்த்த நான்கு விதங்களில் செயல்பட்டால் அதைச் செயற்கை நுண்ணறிவு அமைப்பு என்று அழைக்கலாம்.
ஆனால், மனிதனின் சிந்தனையை ஒரே ஒரு கணிதத்தின் மூலம் ஓர் எந்திரத்திற்குப் புகுத்தி விட முடியாது என்பதுதான் உண்மை. 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் அறிவியல் வளர்ந்த வேகத்தில் சிந்திக்கும் எந்திரங்கள் சாத்தியம் எனப் பலர் முழுமையாக நம்பினார்கள்.
செயற்கை நுண்ணறிவு பற்றி ஆரம்பக் காலத்தில் கதைகளாகத் தான் வெளிவரத் தொடங்கின. டார்வினின் பரிணாமக் கொள்கை ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்த சாமுவேல் பட்லர் எனும் எழுத்தாளர் 1862இல் ஒரு பத்திரிகைக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதன் தலைப்பு ‘டார்வின் எந்திரங்கள்’. அவரின் வாதம், மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் வரும் காலத்தில் எந்திரங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து சிந்திக்கத் தொடங்கிவிடும். அவை “மனிதனின் வாழ்க்கைக்குப் போட்டியாக மாறி மனித இனத்தை அழித்துவிடும். அதனால் எந்திரங்களை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்” என்று அறை கூவல் விடுத்தார்.
இன்று வரை கூட, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதங்களில், எலான் மஸ்க், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் சாமுவேல் பட்லரின் இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
ஆனால், அந்தக் காலத்தில் இருந்த எந்திரங்கள் சிந்திப்பது என்பது எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கற்பனை.
1940களில் ஆலன் எனும் கணித மேதை கணினி எந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று நாம் பயன்படுத்தும் நவீனக் கணினிகளின் தந்தை என்று இவரை அழைக்கலாம். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் நாஜிக்கள் மிகச் சிக்கலான எனிக்மா எனும் ரகசியக் குறியிலக்கத் தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தினார்கள். அதை முறியடிக்க ஒரே வழி என ஆலன் டூரிங் கணினியை உருவாக்கினார். நவீனக் கணினிக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு என்றாலும், ஓரளவு நவீனக் கணினியின் ஆரம்ப வடிவம் என இதை அழைக்கலாம்.
இதன் வெற்றி தான் அவரை செயற்கை நுண்ணறிவு பற்றிச் சிந்திக்க வைத்தது.