சிந்திப்போம்
சிங்கம் ஏமாந்தது ஏன்?
– செல்வா
காட்டு விலங்குகளுக் கெல்லாம் அரசனாகக் கருதப்படுவது சிங்கம். காட்டு ரா-ஜா – சிங்க ராஜா என்ற பெயரினைப் பெற்றது. உணவு உட்கொள்ளுதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைதானே! சிங்க ராஜாவிற்கும் பசி எடுக்கவே குகையிலிருந்து வெளியில் வந்தது.
வேட்டையாடிப் பசியைப் போக்கிக் கொள்ள ஏதாவது மிருகம் கிடைக்காதா என்ற ஆசையில், கண்களை நான்கு திசைகளிலும் சுழற்றிச் சுழற்றிப் பார்த்தது. முயல் ஒன்று புல்லின்மீது அமர்ந்திருப்பது தெரிந்தது. யானைப் பசிக்குச் சோளப் பொறி எந்த மூலைக்கு என்பதுபோல், இந்தச் சிறிய முயல் அல்லவா என் கண்களில் படுகிறது. சரி, பரவாயில்லை முயலைச் சாப்பிடலாம் என நினைத்து அடி எடுத்து வைத்த சிங்கத்தின் பார்வையில் தூரத்தில் நரி இருப்பது தெரிந்தது.
நரியைப் பார்த்த சிங்கத்தின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. இந்த முயலைச் சாப்பிட்டால் பசி தீரப்போவதில்லை. நரியை வேட்டையாடிச் சாப்பிட்டால் ஓரளவுக்காவது பசியாறலாம் என நினைத்தது. முயலை விட்டுவிட்டு நரி இருந்த திசையை நோக்கிச் சென்றது.
நரியின் அருகில் செல்லும்முன், சிங்கத்தின் பார்வையில்பட்டது அழகான புள்ளிமான். புள்ளிமானைக் கண்டதும், ஆஹா இந்தப் புள்ளிமானை அடித்துச் சாப்பிடலாமே என்ற எண்ணம் மேலிட்டது. புள்ளிமானிருந்த திசையில் நடையைத் திருப்பியது.
அப்போது, இன்னும் சற்று தூரத்தில், அடர்ந்த மரங்களுக்கிடையில் காண்டாமிருகம் ஒன்று சென்று கொண்டிருப்பது தெரிந்தது-. சிங்கத்தின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
இந்தக் காண்டாமிருகத்தைச் சாப்பிட்டு, என் பசியை முழுவதும் போக்கிக் கொள்வேன் என்ற பூரிப்பில் காண்டாமிருகம் இருந்த திசையை நோக்கிப் பாய்ந்தது. சிங்கம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்த காண்டாமிருகம், அடர்ந்த மரங்களுக்கிடையில் ஓடிச் சென்று தப்பித்துவிட்டது.
இதனை அறியாத சிங்கம், பாய்ந்து சென்று பார்த்தது. காண்டாமிருகத்தைக் காணவில்லை. இங்கேதானே – இந்த அடர்ந்த மரங்களுக்குள்ளேதானே பார்த்தோம் என்று தேடிய சிங்கத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், பசி எடுக்கிறதே! என்ன செய்வது? தன் முயற்சியைக் கைவிடாமல் காண்டாமிருகத்தை அங்குமிங்கும் தேடியது.
அப்போது, சிறிது தூரத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது சிங்கம். அந்தக் காண்டாமிருகம் போனால் என்ன? இந்தக் காட்டெருமை எனக்கு உணவாகப் போகிறதே. காண்டாமிருகம் என்றால் இன்று ஒரு நாள் பசியைத்தானே போக்கியிருக்க முடியும். காட்டெருமை…. ஆஹா இன்றைய பசியை மட்டுமல்ல; 2, 3 நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டுப் பசியினைப் போக்கிக் கொள்ளலாம் என்ற கற்பனையில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமையை விரட்டியது சிங்கம்.
தன்னை விரட்டியே சிங்கம் வருகிறது என்பதைத் தூரத்திலேயே பார்த்துவிட்ட காட்டெருமை ஓடத் தொடங்கியது. சிங்கமும் காட்டெருமையைப் பிடித்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கும் எண்ணத்தில் விரைந்து ஓடியது.
எதிர்பாராதவிதமாக அந்த வளைவில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன. அதில் ஒரு பாதையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் பலத்தையெல்லாம் முன்வைத்து தப்பி ஓடியது காட்டெருமை.
பாதைகள் பிரிந்து செல்வதைப் பார்த்த சிங்கம் குழப்பத்தில் ஆழ்ந்தது. இந்தப் பக்கம் போயிருக்குமா, அந்தப் பக்கம் போயிருக்குமா அந்தக் காட்டெருமை என்ற குழப்பத்தில் – பசி மயக்கத்தில் – வெறுப்பில் – தன்னுடைய பேராசையால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் சோர்ந்து நின்றது. சிங்கம், தனக்கு முதலில் கிடைத்த வாய்ப்பை – உணவைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. முதலில் முயலினைச் சாப்பிட்டிருந்தால் சிறிதளவேனும் பசியினைப் போக்கியிருக்க முடியும். பின்பு, தெம்புடன் வேறு விலங்குகளை வேட்டையாடிப் புசித்திருக்கலாம். அருகில் கிடைத்ததை – முதலில் கிடைத்ததை விட்டுவிட்டு, தூரத்தில் தெரிந்த விலங்குகளை நோக்கிச் சென்ற சிங்கத்தின் செயல், இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட்டது போன்றதுதானே! பேராசை பெருநஷ்டத்தில்தானே முடியும்!
எனவே, நாமும் நமக்குக் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளை அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்தி படிப்படியாக முன்னேற வேண்டும். சிறு துளிகள் தானே பெருவெள்ளமாகிறது!