கதைகேளு கணக்குப்போடு
முதியவர் ஒருவர் கூடையில் முட்டைகளை எடுத்துக் கொண்டு விற்பனை செய்யக் கிளம்பினார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், மிகவும் கவனத்துடன் சாலையின் ஓரமாக நடந்து சென்றார்.
அப்படியும், பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று முதியவர் மீது லேசாக மோதியது. அப்போது, தன் தலையில் வைத்திருந்த முட்டைக் கூடையில் பிடித்திருந்த தனது கைகளை விட்டுவிட்டு அதிர்ச்சியில் கீழே சாய்ந்துவிட்டார்.
காரின் உரிமையாளர் காரிலிருந்து இறங்கி விரைந்து வந்து அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிவிட்டார். பின்பு, தெரியாமல் இடித்துவிட்டேன் அய்யா, உங்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? வாருங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். உடைந்த முட்டைக்குரிய பணத்தினைக் கொடுத்துவிடுகிறேன் என்றார்.
எழுந்து நின்ற முட்டை வியாபாரி, எனக்கு எந்த அடியும் படவில்லை. பரவாயில்லை. தாங்கள் இறங்கிவந்து என்னைத் தூக்கிவிட்டதே மனநிறைவைத் தருகிறது. உடைந்த முட்டைகளுக்குப் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றார்.
இதனைக் கேட்ட காரின் உரிமையாளர், அய்யா, இந்த முதிய வயதிலும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களே, அதுவே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் எனது கவனக்குறைவால் இடித்து உங்கள் முட்டைகள் உடைந்துவிட்டதே என்று வருத்தமாகவும் உள்ளது. எனவே, உரிய பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
இதனைக் கேட்ட முதியவர், முட்டைகளை நான் எண்ணி எடுத்துவரவில்லை. ஆனால், அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் ஒரு முட்டை மீதி இருக்கும். மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 முட்டை மீதி இருக்கும். நான்கு நான்காகப் பிரித்தால் 3 முட்டை மீதி இருக்கும். ஆறு ஆறாகப் பிரித்தால் 5 முட்டையும், ஏழு ஏழாகப் பிரித்தால் சரியாகவும் இருக்கும் என்று கூறினார்.
புத்திசாலியும், கணக்கில் புலியுமான காரின் உரிமையாளர், உடனே கணக்குப் போட்டு, முட்டையின் விலை கேட்டு முதியவருக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்தார். முதியவர் கூடையிலிருந்த மொத்த முட்டைகள் எத்தனை என்று நீங்களும் கண்டுபிடித்து விடுவீர்கள்தானே?