புதிய குறுந்தொடர் : அம்முவுக்கு வயது 11
இப்போது அம்முவுக்கு 18 வயதாகிறது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் வருகிறாள். தனியாக வருவதால் 10 வயதில் முதல்முறையாக ஊருக்கு வந்தபோது தனது டைரியில் எழுதி வைத்திருந்த சம்பவங்களை எல்லாம் படித்து அவற்றை நினைவு படுத்திப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.
முதல் வருகை
அறுவடை முடிந்து காய்ந்துகிடந்த வயல்களுக்கு நடுவில் இருக்கும் தார்ச் சாலையில் வந்த பெரிய காரில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் அம்மு.
இன்னும் சில நாள்களில் அம்முவுக்கு 10 வயது முடியப் போகிறது. பிறந்ததிலிருந்து முதல்முறையாக ஊருக்கு வருகிறாள் அம்மு.
கார் வருவதைப் பார்த்த ஊரில் உள்ள சிறுவர்கள், அதன் பின்னால் ஓடி வந்தனர். எதிரில் வந்த பெரியவர்கள் அம்முவின் அப்பாவுக்குக் கைகூப்பி வணக்கம் வைத்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியோடு சிரிப்பு இருந்தது. கார் சன்னலைத் திறந்திருந்த அம்முவின் அப்பா, அனைவருக்கும் சிரித்தபடியே பதில் வணக்கம் வைத்தார்.
சன்னல் திறக்கப்பட்டதால் வெளியிலிருந்து காருக்குள் நுழைந்த சூடான காற்று அம்முவுக்கு மிகவும் சிரமத்தையும் எரிச்சலையும் கொடுத்தது.
இருந்தாலும் அப்பாவுக்கு இத்தனை பேர் வணக்கம் வைப்பதைப் பார்த்த வியப்பில் சூடான காற்றை மறந்தாள் அம்மு. அவள் பிறந்து வளர்வது லண்டனில்தான். அங்கு எல்லாம் யாரும் இப்படி வணக்கம் சொல்லியது இல்லை. இதுபோன்ற வயல் வெளியையும் அவள் பார்த்தது இல்லை.
ஒரு குடிசை வீட்டின் அருகே கார் வந்ததும் டிரைவரிடம் சொல்லி காரை நிறுத்தச் சொன்னார் அப்பா. அழுக்கு வேட்டியுடன் சட்டை போடாமல் வெற்றுடம்புடன் தாத்தாவும், ஏனோதானோ என்று புடவை கட்டியிருந்த பாட்டியும் ஆவலோடு வெளியே வந்தனர். இவர்களைப் பார்த்ததும் பாட்டி ஓடிவந்து அம்முவைத் தூக்கிக் கொஞ்சினார்.
அம்முவுக்கு எல்லாமே புதிதாக இருந்தன. தாத்தா, பாட்டி இருவருக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பல வருடமாய் இருந்தது. அதனால், அவர்களின் பற்கள் பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. பார்க்கும் எதுவுமே அம்முவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால் பாட்டியின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டிருந்தாள். சிரித்துக்கொண்டே தலையைத் தடவிக்கொடுக்கும் தாத்தாவைப் பார்த்து முறைக்கவும் செய்தாள்.
அதேநேரம் ஒட்டுமொத்த ஊரும் வீட்டு முன்பாகக் கூடி அவளின் அம்மா, அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தாள். ஒரு ஊருக்கே அம்மா, அப்பாவைப் பற்றி தெரியுமா? என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
***
அம்மு ஊருக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் தாத்தா பாட்டியிடம் பேசவே இல்லை. அவர்கள் எவ்வளவோ கெஞ்சினாலும், கொஞ்சினாலும்கூட ஏதும் பேசாமல் தள்ளி வந்துவிடுவாள். அதில் அவர்களுக்கு வருத்தம்தான். லண்டனில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறாள். முதன்முறையாக இவர்களைப் பார்க்கிறாள் என்பதாலும் அம்மு இப்படி இருக்கிறாள் என்று தாத்தாவும் பாட்டியும் புரிந்துகொண்டார்கள்.
அம்மு வெளிநாட்டிலிருந்து வந்தது முதல், வெளியே போகாமல் இருப்பதால்தான் யாருடனும் பேசாமல் இருக்கிறாளோ என்று தாத்தா நினைத்தார். அதனைச் சரி செய்ய அவர் ஒரு திட்டம் போட்டார்.
‘அம்மு.. அம்மு.. வாயேன், வயலுக்குப் போயிட்டு வருவோம்’ என்று அழைத்தார்.
அம்முவுக்கு என்ன செய்வதுன்னு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, போயிட்டு வரச் சொன்னார் அப்பா. சரி என்று தாத்தாவுடன் புறப்பட்டாள். முதல்முறையாகத் தாத்தாவுடன் வெளியே செல்கிறாள்.
வெளியில் செல்லும்போதும்கூட தாத்தா சட்டை போடாமல் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் சென்றாள் அம்மு.
வழியில் தாத்தாவுடன் அம்முவைப் பார்த்த எல்லோரும் நலம் விசாரித்தார்கள். தாத்தா வயதுடைய பலரும் சட்டை இல்லாமலே இருந்ததைக் கவனித்தாள். ஊரில் எல்லோருமே இப்படித்தானோ என்று நினைத்துக்கொண்டாள்.
எதிரில் வந்த ஒருவர் தாத்தாவிடம், ”ஏரிக்கரை மரத்துல மேங்கிளைல (மேல் கிளை) குருவி கூடுகட்டிருக்கு” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதும் தாத்தா ரொம்பச் சந்தோசமாச் சிரித்தார்.
குருவி கூடுகட்டியிருப்பதற்குத் தாத்தா ஏன் மகிழ்ச்சியடைகிறார் என்ற குழப்பத்தோடு அம்மு தாத்தாவைப் பார்த்தாள்.
அம்முவைத் தாத்தா ஏரிக்கரைக்கு அழைத்துச்சென்றார். ஏரி ரொம்பப் பெரிதாக இருந்தது. ஏரியின் நடுவில் மட்டும் கொஞ்சமாக ரொம்பவும் கலங்கிய நீராக இருந்தது. அதில் அவளது வயதிருக்கும் சிறுவர்கள் பலரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சேரும் சகதியுமாக இருந்த நீரில் அவர்கள் விளையாடுவதைப் பார்த்த அம்முவுக்கு, ‘இப்படி அழுக்குத் தண்ணீரில் விளையாடுகிறார்களே!’ என்று நினைத்து அருவருப்பாகப் பார்த்தாள்.
கரையில் இருந்து ஏரிப் பக்கமாக் கிளை நீண்டு இருந்த மரத்தை அம்முவுக்குக் காட்டினார் தாத்தா. மேலே உள்ள கிளையைக் கூர்ந்து பார்க்கச் சொன்னார்.
அந்தக் கிளையில் குருவிக் கூடு ஒன்று இருந்தது.
“மேங்கிளையில் கூடு இருந்தால் இந்த ஆண்டில் ஏரிக்கு நிறைய தண்ணீர் வரும். நிறைஞ்சாலும் நிறைஞ்சுடும். அதான் சந்தோசமா இருக்கேன்” என்று சொன்னார் தாத்தா.
“அப்போ கீழ் கிளையில் இருந்தால்?” எனச் சந்தேகமாகக் கேட்டாள் அம்மு.
“தண்ணீர் குறைவாத்தான் வரும்” என்றார் தாத்தா.
“அது எப்படிச் சொல்றீங்கத் தாத்தா” ன்னு முதல் முறையாக ‘தாத்தா’ என்று சொன்னாள் அம்மு.
தாத்தாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. குதூகலமாச் சொல்லத் தொடங்கினார். ”கீழ் கிளையில் கூடு கட்டினால் அதிகமாகத் தண்ணி வரும்போது கூடு தண்ணியில் மூழ்கிடும். அதனால் மேங்கிளையில் கூடு கட்டும். அங்கே கூடு கட்டும் போதெல்லாம் தண்ணீர் அதிகமா வரும்ன்னு அர்த்தம். அதே கீழே கட்டியிருந்தால் தண்ணீர் குறைவா வரும்ன்னு அர்த்தம்” எனச் சொன்னார்.
இதைக் கேட்டு ஆச்சர்யமான அம்மு, “எப்படி இதெல்லாம் குருவிக்குத் தெரியும் தாத்தா?” என்றாள்.
“அதுதான் இயற்கை. குருவிங்க அதையெல்லாம் உணர்ந்து வெச்சுருக்கும். அவங்களப் பார்த்து நாமும் கொஞ்சம் கத்துக்கலாம்” என்றார்.
“ஓஹோ… அப்படியா தாத்தா” என்று ராகமாய் இழுத்தபடியே சொன்னாள் அம்மு.
ஒவ்வொரு முறையும் அம்மு, தாத்தாவைத் ‘தாத்தா’ன்னு சொல்லிக் கூப்பிடக்கூப்பிட அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் தாத்தா.
“வா… வயலுக்குப் போய் விட்டு அங்கிருந்து வீட்டுக்குப் போவோம்’ என்று தாத்தா சொல்ல, ‘சரி’ என்றாள்.
(தொடரும்)