இயற்கை : அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி
ஆசியக் காட்டு யானைகளும், ஆப்பிரிக்கக் காட்டு யானைகளும் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை, ஆப்பிரிக்கக் காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளாக வெகு எளிதில் மாற்ற முடியாது.
வளர்ப்பு யானைகள் புத்திசாலிகள் அல்ல, அவை பாகன்கள் சொல்வதை மட்டுமே செய்யும். அவற்றுக்கு எப்போதாவது மதம் பிடிக்கும். ஆனால், காட்டு யானைகள் தாமே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டவை. அவற்றின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக ஒன்று.
வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி வேலி போடப்பட்டிருக்கும். இந்த வேலிக்கு மின்சாரத்தோடு இணைப்பு கொடுத்திருப்பார்கள். மின்சாரத்தை ஒரே நேரத்தில் மின்வேலியில் அனுப்ப முடியாததால் அதற்கான மின்தடைக் கருவியோடு இணைத்து இருப்பார்கள். அந்தக் கருவி மூன்று வினாடி மின்சாரத்தை அனுப்பும். அடுத்த அய்ந்து வினாடிக்கு மின்சாரம் வராது.
மின்சாரம் கம்பியில் பாயும் போது 3 வினாடிகளில் மட்டும் மிகவும் மெல்லிய ஒலி வரும். இந்த மின்சார வேலியைக் காட்டு யானைகள் கடக்க வேண்டும் என்றால் முன்காலைத் தூக்கி கடப்பதற்கு ஆயத்தமாய் மின்சாரவேலிக்கு முன்னால் நிற்கும்.
மின்சாரம் வரும் அந்த மூன்று வினாடி முடிந்ததும், ஒலி நிற்கும் போது மின்சாரம் வராத அந்த அய்ந்து வினாடியை சரியாகப் பயன்படுத்தி, மின்சார வேலியை மிதித்துத் தாண்டிப் போய்விடும், சில யானைகள் வேலிகளில் காய்ந்த மரங்களைத் தூக்கிப்போட்டு வேலியை உடைத்து தாண்டிச் செல்லும். ஈர மரங்களில் மின்சாரம் பாயும்; காய்ந்த மரங்களில் மின்சாரம் பாயாது என்பதை காலப் போக்கில் யானைகள் கற்றுக் கொண்டிருகின்றன.
இந்த புத்திசாலித்தனம் எல்லாம் வளர்ப்பு யானைக்குத் தெரியாது.
யானைகள் விளை நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க ஓரளவுக்குக் கை கொடுப்பது வேலியோரத் தேனீ வளர்ப்பு & சூரைமுள் வேலி மட்டும்தான். யானைகள், உணவுத் தேடலுக்காக ஒரு நாளைக்கு 30 முதல் 50 கி.மீ நடக்கும். அப்படி போகும்போது வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும் சாலைகளைக் கடக்கும் சூழ்நிலை ஏற்படும்போது, பள்ளியிலிருந்து விடைபெற்றுச் சாலையில் ஓடும் நம்மைப்போல் போல ஓடிப்போய் சாலையைக் கடக்காது. நின்று நிதானமாகச் சாலையைப் பார்த்துத் தான் கடக்கும்.
கூட்டத்தில் கொம்பன் என்ற யானையின் அடையாளத்தைக் கண்டுபிடிப்பது எளிது. காட்டு யானைகளுக்குத் தலைமை தாங்குவது, வயதான பெண் யானைதான். கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி கொடுக்கும். ஆபத்துன்னு சின்ன சமிக்ஞை கிடைத்தாலும் குட்டிகளைச் சுற்றி அத்தனை பெண் யானைகளும் அரண் அமைத்து நிற்கும். அதே போல அங்கும் இங்கும் ஓடுகிற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ளே கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை.
மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அதோட எல்லைக்குள்ளே வருவதை யானைகள் எப்பொழுதும் அனுமதிக்காது. உடனே முன்னேறி வந்து, “நெருங்கி வராதே” ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும். மீறினால் அவ்வளவுதான்! ஒரே அடி, யானை அடித்து மரணமடைபவர்கள் அனைவருமே அதன் எல்லைக்குள் அறிந்தோ அல்லது அறியாமலோ சென்றதனால் தான் தாக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.
கூட்டமாகச் சாலையைக் கடக்கும் போது முதலில் வருவது பாதுகாவலர். அதுதான் கொம்பன்.
காட்டைவிட்டு வெளியேவந்து, சாலையில் நின்று தும்பிக்கையைத் தூக்கி சத்தம்போடும் (பிளிறும்), வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்து நிறுத்தும்; இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்ற பிறகு அமைதியாக தன் கூட்டத்தைப் பார்த்து ஒரு ‘வரலாம் வா’ என்று சத்தம் போடும். அதுக்கு அப்புறம்தான் ஒவ்வொன்றாக வெளியேவரும். மற்ற யானைகள் சாலையைக் கடக்கும் போது கொம்பன் யானை மட்டுமே இரண்டு பக்கமும் பார்த்து நிற்கும். சரியா கடைசி யானை சாலையைத் தாண்டியதும் கொம்பன் வேகமாக அங்கிருந்து செல்லத் துவங்கும்.
கூட்டத்தில் யாராவது விளையாடிக் கொண்டு இருந்தால் காட்டைப் பார்த்துச் சத்தம் கொடுத்துச் சீக்கிரமாக வரச் சொல்லி சிக்னல் தரும். அதுவரை சாலையில் நிற்கும் இந்த இரண்டு பொறுப்புகளும், ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகளிடம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு கட்டத்துக்கு மேலே வளர்ந்த கொம்பன்கள், தலைமையான பெண் யானைக்குக் கட்டுப்படாமல் அடாவடி செய்ய ஆரம்பிக்கும், அப்போது, இந்த வளர்ந்த அடாவடியான ஆண் யானைகள் கூட்டத்தைவிட்டு விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி, கிட்டத்தட்ட 48 நாள்கள் கூட்டத்தை விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ இதுவும் கொஞ்சதூர இடைவெளியில், பின் தொடர்ந்து போகும். ஒரு கட்டத்திற்குப் பிறகு மனதைக் கல்லாக்கிக்கொண்டு தனித்துச் சென்றுவிடும் இதுதான் நாம் தொலைக்காட்சியில் பார்த்த ஒற்றைக் கொம்பன்.
உணவிற்காக வலம் வரும் அரிக்கொம்பன்
கூட்டத்தைப் பிரிஞ்சி பாசத்துக்காக ஏங்கி, தனியா துரத்திவிடப்பட்டு பாசம் கிடைக்காத மனநிலை கோபமாக மாறி, சுத்துற யானைக்குப் பேர்தான் ‘கொம்பன்’.
ஒரு கொம்பன் ஒரு மனிதனை விரட்டிப் பிடிக்கணும்னு துரத்தினால் நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் தப்பமுடியாது. நாம் வேகத்தை எட்டிப் பிடிக்க 8 நொடிதேவை. ஆனா, யானை நாலே வினாடிகளில் நம்மைப் பிடிச்சிடும்.
ஒரு நன்கு வளர்ந்த யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவில் இவற்றைக் கலந்து கொடுப்பார்கள்.
ஆனா காட்டு யானைகளுக்கு?…,
புளிப்புச் சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்பு மண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்சியத்துக்குத் தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும்? என்று அவை இருக்கும் இடத்தைத் தேடி வரும் போது மனிதர்கள் அவற்றின் பாதையில் வீடுகட்டி ஊர் அமைத்திருப்பதால் அது ஊருக்குள் வருவதாகப் படிக்கிறோம். அது ஊருக்குள் வரவில்லை. நாம் தான் அதன் பாதையில் ஊரை அமைத்திருக்கிறோம்.
கோடைகளில் வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும் நீருக்காக யானைகளைப் பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமைப் பெண் யானை தன்கூட்டத்தைக் கூட்டிட்டு அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய் ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல உதைச்சுத் தோண்டும். மற்ற யானைகளையும் தோண்டச் சொல்லும் நாலஞ்சு அடியில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும்.
இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள் தலைமைப் பெண் யானைக்கு மட்டுமே தெரியும்.
அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது. அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற… பல கி.மீட்டர் தூரம் சென்று ஒருவித மருத்துவ குணமுள்ள புற்கள், தாவரங்களை உண்ணும். இதுவும் தலைமுறை தலைமுறையாச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல, தலைமைப் பதவியை திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண் யானைக்கு மாற்றிக் கொடுத்துடும்.
அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமைப் பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். இல்லாவிட்டால் கூட்டத்தை விட்டுப் பிரிஞ்சு தான் போகணும். தற்போது மேற்குமலைத் தொடர்ச்சியில் தென் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் புதிய கூட்டத்தைத் தேடிச் செல்லும். அதை அந்தக் கூட்டம் ஏற்றுக்கொண்டால் அதுக்கு புதிய குடும்பம் கிடைக்கும். பொதுவாக தனித்து விடப்பட்ட கொம்பன் யானைகள் பிற பகுதிகளுக்குச் சென்று வேறு கூட்டத்தோடு சேர்ந்து தங்களது வாழ்க்கையைத் தொடரும். அதுபோல்தான் நம் அரிக்கொம்பனுக்கும் புதிய குடும்பம் கிடைக்கும் வரை மனிதர்கள் அவரைத் தொந்தரவு செய்யாதவரை அவர் மனம் போல் வாழ்வார்..
இந்த அழகிய விருந்தாளியை கேரளாவும் தமிழ்நாடும் கொண்டாடுகிறது. அதன் போக்கில் வாழவிட்டு நாமும் அந்த அழகை ரசித்துக்கொண்டு வாழ்வோம்.