குட்டிக்கதை
மக்கா குப்பை
மஞ்சள் ஒளிவீசும் மாலை நேரம், ஒரு நகர சுத்திப் பெண் தோழியர், தள்ளு வண்டியில் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் கழிவுகளை ஏற்றிக் கொண்டு குப்பை கொட்டும் இடம் நோக்கி தள்ளிச் சென்றார். வழியில் ஒரு மேடான இடம்; தள்ளிப் பார்த்தார், முடியவில்லை. முயன்றும் மூச்சு வாங்கி நின்றார். அந்த வழியாக வந்த ஒரு முதியவர் உதவி செய்கிறார். நன்றி என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் தோழியர், குப்பை கொட்டும் இலக்கை அடைந்தார்.
குப்பையைக் கொட்டியபின் அதே வழியில் திரும்பி வந்தார் அந்தத் தோழியர். மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து மீண்டும் நன்றி கூறினார். பதிலுக்குப் பெரியவர் புன்முறுவலால் பரிசு தந்தார். அம்மா, நீங்கள் கொண்டு சென்றது மக்கும் குப்பையா அல்லது மக்கா குப்பையா என்றார் பெரியவர்.
அதற்கு அந்தத் தோழியர் சொன்னார், அய்யா அது மக்கும் குப்பையில்லை, மக்காக் குப்பையும் இல்லை, மனிதன் நக்கிப் போட்ட எச்சில் இலைகள் என்று வெகுளித்தனமாக பதில் சொன்னார். மீண்டும் புன்னகை பூத்தார்.
இருவரும் பேசிக்கொண்டு போகும்போதே அந்தத் தோழியரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அம்மா இந்தியாவில் ஒரு பயங்கரமான குப்பை ஒன்று இருக்கு தெரியுமா? என்றார். அய்யா தெரியாதுங்களே என்றார் தோழியர்.
நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள், கேட்டுவிட்டு அதை உங்கள் தோழர், தோழியரிடம் சொல்லுங்கள். ஆகம விதி என்ற அழியாத நஞ்சுக் குப்பைதான் அது. அய்யா பெரியார் நமக்குப் பகுத்தறிவு என்ற ஆயுதம் கொடுத்துவிட்டுப் போயிருக்கார். அந்த ஆயுதத்தால் அந்தக் குப்பையை அகற்றணும், புரிகிறதா? ஏற்றத்தாழ்வுக்கு அதுதான் காரணம் என்றார்.
அதைக் கேட்ட அந்தத் தோழியர் மவுனமாய் ஆகிவிட்டார். அவர் அணிந்திருந்தது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சேலை!.