இடர்மீட்புத் தொடர் : மீள்வோம்! மீட்போம்! நிலச்சரிவு
நிலச்சரிவு அல்லது மண் சரிவு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதனுடைய பாதிப்புகள் எப்படி இருக்கும், அதை எப்படித் தடுக்கலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
முதலில் நிலச்சரிவின் மினியேச்சர் ஒன்றைச் செய்து பார்க்கலாமா? மணலைக் குவித்து வைத்துக்கொண்டு அந்தக் கூம்பு வடிவத்தின் மேல் பகுதியில் ஒரு குவளைத் தண்ணீரை எடுத்து ஊற்றும் பொழுது மண்ணை அரித்துக் கொண்டு ஓடும் அல்லவா!
அப்படி அங்கே ஓடும்பொழுது சிறிய அளவில் உள்ள எறும்பு போன்றவை இருந்தால் அவையெல்லாம் எங்கே இருக்கும் என்று தெரியாதவாறு மண் மூடிச் சென்றுவிடும்.
இதே நிகழ்வு பெரிய அளவில் நடைபெறுவதை நிலச்சரிவு என்கின்றோம். சாதாரணமாக நிலச்சரிவு ஏற்படும் பொழுது அங்கே இருக்கக் கூடிய பேருந்துகள், கார்கள், வீடுகள், பாலங்கள் போன்றவற்றைக் கூட மண்ணில் உள்ளே வைத்து மூடிவிடும். வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவே சில நாள்கள் கூட ஆகலாம்.
நிலச்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வாகும். பெரும் பாறைகள் சிதைந்து கீழே விழுதல், அல்லது சரிவடைதல், சாய்வின் உறுதியைக் குறைக்கும் துளை நீர் சாய்வுக்கு உள்ளே செல்லுதல், சரிவினில் உள்ள மண் பிடிப்பு பாதிக்கும் பொழுது, காட்டுத் தீயினால் மரங்கள் அழிதல், சாய்வின் கீழ்ப்பகுதி தண்ணீரால் அரிக்கும் பொழுது, கடல், ஆறு, கடும் மழை, எரிமலை போன்ற இயற்கைக் காரணங்களால் நிலச்சரிவு ஏற்படும்.
நாம் செய்யக்கூடிய மனிதத் தவறுகள், இயந்திரங்கள், போக்குவரத்துகளால் ஏற்படும் அதிர்வுகள், குண்டு வெடிப்பு, மண் தோண்டுதல், பாறைச் சரிவில் உள்ள புதர்களை அகற்றுதல், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களினால் நிலச்சரிவு ஏற்படுகிறது.
நிலச்சரிவை,
1. ஆழமான நிலச்சரிவு 2. மேலோட்டமான நிலச்சரிவு 3. சிதைவு கூழ் ஓட்டம் 4. மண் குழைவு ஓட்டம் 5. சிதைவு கூழ் பனிச்சறுக்கு 6. ஸ்ட்ரெஸ் ட்ராம்
என ஆறு பிரிவுகளாகப் பிரித்து உள்ளார்கள்.
சரி, நம் பூமியில் மட்டும்தான் நிலச்சரிவு ஏற்படுகிறதா என்று பார்த்தால் பூமிக்கு வெளியில் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களான வீனஸ், செவ்வாய் போன்றவற்றில்கூட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதற்கான ஒளிப்படங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களிலும் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சில பகுதிகளிலும் ஏலகிரி, சேர்வராயன் மலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 1999 நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஒரு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது 1.5 கிலோமீட்டர் அகலமும் 7.5 கிலோமீட்டர் நீளமும் கொண்ட பகுதியில் உள்ள அனைத்துப் பொருள்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு உள்ளே வைத்து மூழ்கச் செய்து விட்டது. இதில் பேருந்து, கடைகள் போன்றவை கூட காணாமல் போய்விட்டன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து விட்டனர். (அன்றைக்கு விபத்தில் மாட்டிக் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையத்தில் ஏறி அமர்ந்து ஊட்டிக்குச் செல்ல இருந்த நான், மழையின் காரணமாக மற்றொரு நாள் போகலாம் என்று கீழே இறங்கி விட்டேன். இல்லையென்றால் நானும் காணாமல் போயிருப்பேன்).
இராணுவத்தினர், துணை ராணுவப் படைகள் மீட்புப் படையினர் பல நாள்கள் போராடி மண்ணின் உள்ளே புதைந்தவர்களைத் தேடித் தேடி எடுத்தனர்.
சிறிய அளவில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஊட்டி செல்லும் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ரயில்கள் நிறுத்தம்; சாலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தம் என்று செய்தியில் அடிக்கடி வருவதைக் காணலாம், இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும், செயற்கையான காரணங்களால் நிலச்சரிவு ஏற்படுவதை நாம் முயற்சி செய்தால் நிச்சயம் தடுக்கலாம்; மக்களை – உடைமைகளைக் காப்பாற்றலாம்.
மரம் வளர்ப்போம்; இயற்கையைக் காப்போம்!