பூங்கா
சொய்ங்… சொய்ங்… சறுக்கல்
சொக்க வைக்கும் சறுக்கல்
மேலே கீழே விளையாட்டு
மெல்லச் சொல்லும் கைதட்டு.
குவியல் மணல் திட்டுகளும்
குந்தக் கேட்கும் பலகைகளும்
கூப்பிடும் நம்மை விளையாட
குதித்து ஆடு களிப்பாக!
வண்ணப் பூக்கள் வனப்பினிலும்
வருடிச் செல்லும் செடிகளிலும்
கிளையைப் பரப்பும் மரங்களிலும்
கீச்…கீச்… பறவைகளின் இசைகளிலும்
தாத்தா பாட்டி வருகையிலும்
தளர்நடை பாப்பா சிரிப்பினிலும்
ஊஞ்சல் தொடுமே ஆகாயம்
உச்சியில் மகிழ்ச்சி மனதோரம்
இத்தனை அழகுப் பூங்காதான்
இனிக்கும் எனக்கு ஜோராதான்.!
– விண்மீன்