அது என்ன நிலா வரைபடம் ?
நாம் இதுவரை உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், ஆறுகள், கண்டங்கள், மாவட்ட, வட்டார வரைபடங்கள் என எத்தனையோ வரைபடங்களைப் பார்த்திருக்கிறோம். அது என்ன நிலா வரைபடம். கேட்கவே புதுமையாக இருக்கின்றது அல்லவா?
ஆம். நிலா அதாவது சந்திரனின் விரிவான வரைபடத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது சீனா. அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைத்தான் இப்போது படிக்கப் போகின்றோம்.
சந்திரனின் வரைபடத்தை விரிவாக வரைவது புதிதான ஒன்றல்ல. என்றாலும் 2020ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) வானியல் அறிவியல் மய்யம் 1 : 5,000,000 என்ற அளவில் நிலவின் விரிவான வண்ண வரைபடத்தை வெளியிட்டு இருந்தது. இதுதான் நிலவின் விரிவான வரைபடமாகக் கருதப்பட்டு வந்தது.
ஏனெனில், பூமிக்கு மிகவும் அருகிலுள்ள துணைக்கோளான நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அந்த வரைபடம் மனித அறிவுக்கு வழங்கியது.
இந்த வரைபடங்கள் அப்படி என்ன அரிய தகவல்களை வழங்கின என்ற கேள்வி எழலாம். பூமியில் வளிமண்டலத்திற்கு அடுக்குகள் இருப்பது போலவே நிலவின் மேலோட்டத்தில் அடுக்குகள் இருக்கின்றன என்பதை இந்த நிலவின் வரைபடங்கள் நமக்கு உணர்த்தின.
மேலும் நிலவில் கட்டமைப்பு அம்சங்கள், கால வரிசை, தரை அதிர்வு செயல்முறைகள், பேரழிவுத் தாக்கங்கள் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளின் விளைவாக சந்திர மேலோட்டத்தின் பரிணாம வளர்ச்சி போன்ற பல்வேறு விரிவான தகவல்களை அந்த வரைபடங்கள் நமக்குக் காண்பிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து சீன அறிவியல் கழகத்தின் புவி வேதியியல் நிறுவனமானது சீனாவின் புவி அறிவியல் பல்கலைக்கழகம், சீனப் புவியியல் அறிவியல் அகாடமி மற்றும் ஷான்டாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நிலவின் விரிவான வரைபடத்தை உருவாக்கும் முயற்சிக்கு வழி வகுத்தன.
அதன் பலனாக, 1 : 25,000,000 என்ற அளவில் நிலவின் புதிய முழுமையான வரைபடத்தை அறிவியல் புல்லட்டின் மூலமாக சீனா கடந்த மே 30 அன்று வெளியிட்டது.
இந்த புதிய வரைபடத்தில் நிலவின் புவியியல் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்களை வழங்கும் 12,341 தாக்கப் பள்ளங்கள் (Impact Craters) உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். தாக்கப்பள்ளம் என்பது ஒரு சிறிய பொருளின் அதிவேக தாக்கத்தால் திடமான வானியல் பொருளின் மேற்பரப்பில் உருவாகும் வட்ட வடிவத் தாழ்வு ஆகும், 81 தாக்கப்படுக்கைகள் பெரிய தாக்கப் பள்ளங்களின் அளவு 300 கிமீக்கு மேல் இருந்தால், அவை தாக்கப்படுகைகள் (Impact Basins) என்று அழைக்கப்படுகின்றன.
17 பாறை வகைகள் மற்றும் 14 வகையான வெவ்வேறு கட்டமைப்புகள் போன்றவற்றை விரிவாக இந்த வரைபடம் காட்டுகின்றது எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த வரைபடம் நிலவைப் பற்றிய ஆராய்ச்சியிலும், நிலவில் தரை இறங்கும் தளத் தேர்விலும் தெளிவைப் பெற உதவும் என்று நம்பப்படுகிறது.
மேலும் அடுத்தடுத்த ஆராய்ச்சிகளின் வரைபடங்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் பல வியக்கத்தக்க தகவல்களை நமக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.