விளையும் பயிர்
விலை மதிக்க முடியாதது எது?
அழகான மாளிகையைச் சுற்றிலும் பூச்செடிகளும் கொடிகளும் நிறைந்து மேலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தன. பின்புறம் இருந்த தோட்டத்தில், ஆப்பிள் மரத்தைத் தவிர அனைத்து வகையான மரங்களும் இருந்தன.
ஆப்பிள் மரத்தினைத் தோட்டத்தில் வைக்க விரும்பினார் மாளிகையின் சொந்தக்காரர். அந்த நாட்டில் கிடைக்காததால் கப்பலில் ஒருவரை அய்ரோப்பா அனுப்பி வாங்கிவரச் செய்தார். தினமும் காலையில் மரம், செடி, கொடிகளைப் பார்த்து ரசிப்பார்.
அந்தப் பணக்காரருக்கு ஒரே ஒரு மகன். அளவுகடந்த அன்பையும் ஆசையையும் மகன்மீது வைத்திருந்தார். மகனையும் தோட்டத்தையும் பராமரிக்க வேலையாட்கள் பலர் இருந்தனர். அவரது செல்ல மகனுக்குப் பிறந்தநாள் வந்தது.
கோலாகலமாகக் கொண்டாடினார். அழகிய பேனாகத்தி ஒன்றினை மகனுக்குப் பரிசாகக் கொடுத்தார். பல பரிசுகள் வந்திருந்தாலும் தந்தை கொடுத்த பரிசினைப் பார்த்து மகிழ்ந்தார் மகன்.
ஒரு நாள் காலையில் தந்தை மரம், செடி, கொடிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றபோது ஆப்பிள் மரத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். வேலை செய்பவர்களை அழைத்து, ஆப்பிள் மரத்தில் ஒரு சிறிய வெட்டு உள்ளதே, யார் வெட்டியது? என்று கேட்டார்.
அனைவரும் அமைதியாக இருக்கவே, சாட்டையை எடுத்துவரச் சொன்னார். அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார். முதலில் நின்ற வேலையாள் பயந்து நடுங்கியபடி நின்றார். அவரைப் பார்த்து சாட்டையை உயர்த்தியதும், அப்பா அவரை அடிக்காதீர்கள் என்று கத்திக் கொண்டே மகன் ஓடி வந்தார். மகனே, மெதுவாக வா, ஏன் இப்படி வேகமாக – அவசரமாக ஓடி வருகிறாய்? ஆசையாக நாம் வளர்க்கும் ஆப்பிள் மரத்தை யாரோ வெட்டியுள்ளார்கள். அவர்களைச் சும்மா விடக்கூடாது. அடித்தால்தான் புத்திவரும் என்றார்.
அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். சாட்டையால் என்னை அடியுங்கள். நான்தான் ஆப்பிள் மரத்தை வெட்டினேன். நீங்கள் பிறந்தநாளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பேனா கத்தி கூர்மையாக உள்ளதா என்று பார்ப்பதற்காக இந்த மரத்தை வெட்டிப் பார்த்தேன். தவறு என்மீதுதான் உள்ளது. அதனால் என்னை அடியுங்கள் என்று மெல்லிய குரலில் கண்களில் நீர்ததும்பக் கூறினார்.
மகன் உண்மை பேசியதைக் கேட்ட தந்தை, மகனை ஆரத் தழுவினார். மகனே! அதிக விலை கொடுத்து வாங்கி வந்ததுதான் இந்த ஆப்பிள் மரம். ஆனால் விலைமதிக்க முடியாத செய்கையை அல்லவா நீ செய்துவிட்டாய். உண்மை பேசியதற்காக உன்னைப் பாராட்டுகிறேன். உன் வாழ்க்கையில் எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்றார் தந்தை. வேலை செய்பவர்கள் அனைவரும் சிறுவனைப் பாராட்டினர்.
இந்தச் சிறுவன் பெரியவரானதும் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். பின்னர் அமெரிக்க விடுதலையின்போது படைத் தளபதியாக இருந்து செயல்பட்டு வெற்றிபெற்று நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். எனவே, மக்கள் இவரை குடியரசுத் தலைவராகத்(ஜனாதிபதி) தேர்ந்தெடுத்தனர்.
5 வருடங்கள் பதவி முடிந்ததும் மீண்டும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பொறுப்பினை ஏற்க மாட்டேன் என்று கூறிய ஜார்ஜ் வாஷிங்டன்.