உலகு சூழ் ஆழி
பசிபிக் பெருங்கடல் – II
பசிபிக் வாணிபம் :
கனடா, அமெரிக்க அய்க்கிய நாடுகள், மெக்சிகோ, தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரமுள்ள நாடுகள், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் பசிபிக் பெருங்கடலின் கரையோரம் உள்ளவை. இந்நாடுகளுக்கிடையே நடக்கும் வாணிபம் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் ஊடே நடக்கும். பெரும் சரக்குக் கப்பல்கள் பசிபிக் பெருங்கடலிடையே பயணம் செய்கின்றன.
வெப்ப மண்டலப் புயல்காற்று :
வியாபாரக் காற்று பசிபிக் பெருங்கடலில், வடகிழக்கிலிருந்தும், தென்கிழக்கிலிருந்தும் இடைவிடாது வீசும். இக்காற்றே ஆஸ்திரேலியாவில் வீசும் வில்லி – வில்லீஸ் (Willy-Willies) என்ற புயலுக்கும், சீனாவில் வீசும் பெரும்புயலுக்கும் காரணமாகும்.
பசிபிக் தீவுகளில் உள்ள வளம் :
பசிபிக்கின் சிறப்பான வளம், மீனும் பிற கடல் உணவும் ஆகும். இப்பெருங்கடலின் அடியில் சில பகுதிகளில் மாங்கனிசுத் திரள்கள் கிடைக்கின்றன. இவை வண்ணப்பூச்சுகள், பேட்டரீஸ், எஃகு ஆகியவை செய்யப் பயன்படுகின்றன.
மீன் பண்ணை :
பல நூற்றாண்டுகளாக, சீனாவும் கொரியாவும் மீன்கள், முத்துச் சிப்பிகள் ஆகியனவற்றைப் பண்ணை வைத்து வளர்க்கின்றன. தெற்கு பசிபிக்கில் ஒரு மீட்டர் அகலமுள்ள கிளிஞ்சல்கள்கூட வளர்க்கப்படுகின்றன. உலகத்தில் உள்ள மீன்களில் 50 விழுக்காடு பசிபிக் பெருங்கடலில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் ஆசியாவின் கரையோரங்களில் வாழ்கின்றன.
தேங்காய் :
பசிபிக்கில் உள்ள வெப்பமண்டலத் தீவுகளில் தென்னை செழித்து வளரும். தேங்காய்ப் பால் சிறந்த குடிபானமாகும். தேங்காய் உள்ளே உள்ள பருப்பு தின்பதற்குச் சுவையானது. தேங்காய்க் கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தென்னை நாரிலிருந்து கயிறும், தரைவிரிப்புகளும் செய்யப்படுகின்றன.
சுற்றுலா :
பசிபிக் தீவுகள் நீண்ட தூரத்திலிருப்பதால், சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைய வில்லை. இருப்பினும் ஃபிஜி (FIJI), தஹித்தி (TAHITI), அமெரிக்கன் சமோவா (AMERICAN SAMOA), ஹவாய் (HAWAI), தீவுகள் வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா இடங்கள். சுற்றுலாவினால் சில தீவுகளின் சுற்றுச்சூழல் கெடும் என அஞ்சப்படுகிறது.