அறிஞர்களின் வாழ்வில்…
ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்
நடு இரவில் கத்தியுடன் ஜோதிராவ் ஃபூலேயின் வீட்டிற்குள் இருவர் நுழைந்தனர். ஏதோ சத்தம் கேட்பதைப் போல் தூக்கத்தில் உணர்ந்த ஜோதிராவ் எழுந்தார். சிறு விளக்கினைக் கையில் ஏந்தி, யார் என வினவினார். வந்த இருவரும், உங்களைக் கொலை செய்ய வந்திருக்கிறோம் என்றனர். உங்களுக்கு நான் ஏதேனும் கெடுதல் செய்துள்ளேனா என்றார்.
இல்லை என்று சொல்லிவிட்டு, உங்களைக் கொல்லச் சொல்லி எங்களைச் சிலர் அனுப்பியுள்ளனர் என்றனர்.
இதனால் உங்களுக்கு என்ன லாபம் என்றார் ஜோதிராவ். ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனர் என்றனர்.
உடனே ஜோதிராவ், எனது மரணம் உங்களுக்கு லாபம் கொடுக்கும் என்றால் உங்களுக்கு முன்பு வந்து நிற்கிறேன், என்னைக் கொல்லுங்கள். எந்த ஏழை மக்களுக்காக நான் ஊழியம் புரிந்தேனோ, எந்த ஏழை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அவர்களாலேயே நான் கொல்லப்படுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன்.
ஏழைகளுக்காகவே வாழ்ந்தேன். என் மரணம் மூலம் ஏழைகளுக்குப் பலன் கிடைக்கிறது என்றால் அமைதியாக, கவலை, வேதனையின்றி மகிழ்ச்சியாகவே என் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
தங்கள் தவற்றினை உணர்ந்த இருவரும் அவரின் காலில் விழுந்தனர். இப்படிப்பட்ட நல்ல மனம் படைத்த ஒருவரைக் கொல்லச் சொன்ன அந்த எதிரியைக் கொன்று வருகிறோம், அனுமதி கொடுங்கள் என்றனர்.
இதனைக் கேட்ட ஜோதிராவ், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. யாரிடமும் விரோதமும் கூடாது. அவர்கள் நீண்ட காலம் வாழட்டும் என்றார்.
வந்த இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு, ரோடி என்பவன் பாதுகாவலனாக ஜோதிராவிடம் சேர்ந்தான். கும்பர், படித்துப் பண்டிதனாகி, அவரது உண்மை நாடுவோர் சங்கத்தின் தூணாகச் செயல்பட்டான். அடிமைத்தனம் பற்றிய புத்தகம் எழுதி ஜோதிராவின் கொள்கையைப் பரப்பினான்.